உர்தூ மொழியின் பிறப்பும் – சிறப்பும்

கட்டுரைகள்

இந்திய மொழிகளில் முக்கியமானவை 22. அவற்றில் இரண்டு செம்மொழிகள். ஒன்று வடமொழியான சமஸ்கிருதம் இன்னொன்று தென் மொழியான தமிழ். அப்பர் பெருமான் அவருடைய தேவாரத்தில் தமிழை தென்மொழி என்றே குறிப்பிடுகிறார்.

ஆனால் அதே சமயத்தில் வடபுலத்தில் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றுள்ள உர்தூ மொழி அலாதியானது. பாரசீகம் – அரபு – வடமொழி – இந்துஸ்தானி ஆகிய நான்கு மொழிகளின் சேர்க்கையிலிருந்து பிறந்த மொழி உர்தூ. இம்மொழியிலுள்ள மெய்ஞ்ஞானக் கவிதைகள் இனிமையானவை மட்டுமல்ல. ஆன்மீக ஆர்வலர்களின் இதயங்களைக் கவரக் கூடியவை. அதிலும் இஸ்லாமிய அந்தரங்க அனுபூதிச் செம்மல்களாகிய மெய்ஞ்ஞானிகள் அருளிய பாடல்கள் தனிச்சுவை மிக்கவை. அவற்றைத் தமிழகத்துச் சித்தர் பாடல்களுடன் ஒப்பிடலாம். எளிய சொற்களில் அருமையான நுட்பங்கள் நிறைந்த சிலேடை களும் – உவமைகளும் கொழிக்கும் பாடல்கள் அவை. வட புலத்தில் வடமொழி இலக்கியங்களில் நல்ல தேர்ச்சியுடைய பெரும் புலவர்களும் அறிஞர்களும் உர்தூ மொழியிலும் அசாத்திய புலமை மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள்.

இதற்குக் காரணம் உர்தூ மொழியில் நிறைந்துள்ள சமய பேதங்களைக் கடந்த ஆன்மீக உணர்வு ததும்பும் பாடல்களே ஆகும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வடமொழியிலும் இந்தியிலும் ஆழ்ந்த புலமை உடையவர் மட்டுமல்ல. உர்தூ கவிதைகளில் பயில்பவரும் கூட. தமிழகத்து மேடைகளில் அண்ணா கோலோச்சி வந்ததைப் போல, இந்தி மேடைகளில் அற்புதமான நாவலராக விளங்கி வருபவர் வாஜ்பாயி. அவருடைய சொற்பொழிவில் ஆங்காங்கு உர்தூக் கவிதை வரிகள் மசாலா போல் மணம் வீசுவது வழக்கம். உர்தூ மொழி -இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பாடல்களால் ஜீவகளை யோடு பொலிந்து நின்ற போதிலும் இந்து சமய அறிஞர் களின் இதயங்களிலும் குடி கொண்டிருப்பதாகும்.

அதோடு மதபேதம் கடந்த மனிதநேயத்தை வளர்க்கும் அபூர்வ இலக்கியங்கள் உர்தூ மொழியில் நிறைந்துள்ளன. கவிஞர் இக்பாலின் பாடல்கள் உர்தூ மொழிக்கு தனி முக விலாசத்தையே தந்தவை.

பாரதத்தின் விடுதலைப் போராட்டத்தில் முன்ணனித் தலைவர்களில் ஒருவராக பண்டித நேரு வல்லபாய்படேல் போன்றோருக்கு இணையாக விளங்கியவர் – மெளலானா அபுல் கலாம் ஆஸாத். அவர் சுதந்திர இந்தியாவின் கல்வி அமைச்சராகப் பொலிந்து நின்றவர். இஸ்லாமிய சமய ஆன்மீக இலக்கியங்களில் மட்டுமின்றி உர்தூ மொழியில் மிகப் பெரும் புலவராக விளங்கியவர். அவருடைய பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரபு – பாரசீகம் – உர்தூ மொழி துறையின் சார்பில் நிறுவப்பட்டுள்ள மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருதுகள் ஐந்து பெரு மக்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுகளை வழங்கிய ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உர்தூ மொழிகளைப் பற்றி அற்புதமான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். உர்தூ மொழியை இஸ்லாமியர்களின் மொழி என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள் அது சரியல்ல. இந்துக்கள் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பையும் ஆன்மீக உணர்வால் பிணைக்கக் கூடிய இனிய மொழி உர்தூ. இன்னும் கூறுவதென்றால் பஞ்சாபி மொழிக்கு உர்தூ சகோதரி போன்றது என்று பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்ட பர்னாலா நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

ஆனால் அதே சமயத்தில் சூஃபி ஞானப் பாடல்களுக்கு எல்லா அம்சங்களிலும் இணையான சித்தர் பாடல்களைக் கொண்டுள்ள இனிய மொழி – தமிழ். அதோடு பண்ணிசையில் மலர்ந்த தேவார – திருவாசகமும் திவ்யப் பிரபந்தப்பாசுரங்களும் உலக இலக்கியங்கள் எதிலும் காண முடியாத பண்பாட்டு அதிசயங்களாகும். அதோடு தமிழ் சாத்திர மொழியாக திருமந்திரத்தில் ஒளி வீசுகிறது.

மேலும் தமிழிலுள்ள நாட்டுப்புறப் பாடல்கள் அலாதியான இயற்கை மணம் கமழ்பவை. இவ்வளவும் இருந்த போதிலும் வடபுலத்தவர் உர்தூவைக் கொஞ்சுவதைப் போல தென்னாட்டவர் தமிழை ஆசையோடு கொஞ்சுவதில்லை. பஞ்சாபைச் சேர்ந்த பர்னாலா உர்தூ பஞ்சாபி மொழிக்கு சகோதரி போல என்று வாய்விட்டுக் கூறி மகிழ்கிறார். ஆயினும் தமிழிலிருந்து பிறந்த தெலுங்கையோ அல்லது கன்னடத்தையோ சேர்ந்த அறிஞர்கள் தமிழைத் தங்களுடைய தமக்கை மொழியாகக் கூறி மகிழ்வதில்லை என்பது வருந்தத் தக்கது.

நன்றி – தமிழ் ஓசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *