ஐ.பி.எல். – ஜூ.வி. கட்டுரை

கட்டுரைகள்

இந்தக் கட்டுரை ஓரிரு வரிகளில் சில மாற்றங்களுடன் “ஜூனியர் விகட’னில்
இந்த வார இதழில் பிரசுரமாகி இருக்கிறது.

அன்புடன் – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

இந்தியன் ப்ரிமியர் லீக், இண்டெர்னேஷனல் ப்ரிமியர் கிரிக்கட் லீக் ஆகி
இந்தியாவை விட்டுப் போகப்போகிறது.
நிரந்தரமாக அல்ல என்றாலும் விழுந்திருப்பதென்னவோ அழிக்க முடியாத கரும் புள்ளிதான்.

பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி, தீவிரவாதிகளின் எண்ணம் நிறைவேற
அனுமதித்திருப்பது அல்லது
விட்டுக் கொடுத்திருப்பது, வடிகட்டின கோழைத்தனம் மட்டுமல்ல ஒரு தேசிய
அவமானமுமாகும். லட்சம்
கோடி ரூபாய்களை பாதுகாப்புக்காகச் செலவு செய்யும் ஒரு வல்லரசை, எங்கோ
மறைந்து வாழும்  முகம்
தெரியாத மனிதர்களால் அச்சுறுத்திப் பணிய வைத்து விட முடியும் என்பதற்கு
அடையாளம் தான் பாதுகாப்பு
தர முடியாது என்ற கைவிரிப்பு என்றால் அது மிகையல்ல.

இதில் அரசியல் புகுந்து விளையாடி இருக்கும் என்பதில் சிறிதும்
சந்தேகமில்லை. நிலைமை அப்படி. பேரங்கள் பேசப்பட்டிருக்கும். கிரிக்கட்
வாரியம் அதற்குச் சற்றும் சளைத்தது என்று சொல்ல முடியாது. ஆனால்  ஒரு
வேளை அது தாங்க தாங்க முடியாத சுமையாக இருந்ததால் கிரிக்கட் வாரியம்
உருவிக்கொண்டு ஓடி
விட்டதோ என்னவோ என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. பத்தாயிரம் கோடி பணம்
புழங்கும் இடத்தில்
எங்களையும் சிறிது கவனித்தால் என்ன என்ற கேள்வி எழாமல்
இருந்திருக்காதுஎன்பதே பொதுமக்களுக்கு
ஏற்பட்டுள்ள சந்தேகம்.

ஐ.பி.எல். ஆரம்ப முதலே பலரது கண்களை உறுத்தியது. அங்கு பணம் பணமாக
மதிக்கப் படுவதில்லை.
சிலருக்கு அருகதைக்கும் அப்பாற்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது என்கிற
குற்றச் சாட்டுகள் இப்போதும்
பரவலாக உள்ளன.

கிரிக்கட் என்பதையும் மீறி, இது கூத்தும் கும்மாளமுமாக மாறிப்போனதும்
இது மேட்டுக்குடியினரின்
வக்கிரம் என்ற குற்றச்சாட்டுக்கும் இலக்கானது.

என்றாலும், பத்தாயிரம் கோடி ரூபாய் இதில் புழங்குகிறது என்பதும்,
கிரிக்கட் வாரியத்துக்குள்ள வரிச் சலுகை
இதற்குக் கிடையாது என்று அறிவிக்கப்பட்ட போது, இது செலுத்திய வரித் தொகை
இதை  ஒரு நிரந்தர ‘காமதேனுவாக, அடையாளம் காட்டியது என்பதும்
குறிப்பிடத்தக்கது.

இதன் ‘கமிஷனர்’ – அதாவது தலைமை அதிகாரி என்றறியப்படும்  – லலித் மோடி
ராஜஸ்தான் கிரிக்கட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அது மட்டுமல்ல
முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கு நெருக்கமானவராக இருந்தார்
என்பது அவர் செய்த தவறு என்று கூறப்படுகிறது. ஆகவே ரா.மா.கி.சங்கத்துக்கு
சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அவரைக் கண்ணி வைத்து கவிழ்த்தது
ஆளும் கட்சியின் வெளிப்படையான ஆதரவுடன் ஓர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி தலைவராகத்
தேர்தெடுக்கப்பட்டார். அந்தக் கோபத்தில், கடந்த ஆண்டு சேம்பியன்களே
ராஜ்ஸ்தானைச் சேர்ந்த அணிதான் என்பதை மறந்து விட்டு ஒரு ஆட்டம் கூட
ஜெய்ப்பூரில் நடக்காமல் செய்து விடுவேன். அதற்கான அதிகாரம் என் கையில்
இருக்கிறது என்று லலித் மோடி ‘உதார்’ விட்டது ஒன்றும் பழைய கதை அல்ல;
சமீபத்திய சம்பவம்.

ஐபிஎல் தேதிகளை அறிவித்தது. தேர்தலும் வந்து விட்டது. அரசு இரண்டையும்
சமாளிப்பதை ஒரு சவாலாக
எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். பொது மக்களை முழு அளவில் இதில் ஈடு
படுத்தி இருக்க வேண்டும்.
இதை ஓர் தேசிய இடராக எண்ணி அதை துணிச்சலுடன் எதிர் கொள்ளும் மனத் துணிவை
அவர்கள் மனத்தில்
விதைத்திருக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு மாபெரும்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் அரிய
சந்தர்ப்பமாக இதை அரசு பயன்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் எடுத்த எடுப்பிலேயே அரசு இடறி விழுந்து விட்டது. பாதுகாப்பு தர
இயலாது என்று கை விரித்தது.
மாநில அரசுகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டது. வானத்துக்குக்கீழ்
வீட்டைக் கட்டிக் கொண்டு
இடி மின்னலுக்குப் பயந்த கதை இது.

அரசின் கட்டளைக்கிணங்க மூன்று முறை அட்டவணையை வாரியம் மாற்றி, மாற்றி
கொடுத்துப் பார்த்தது.
கடைசியில் அரசு தூங்கவில்லை, தூங்குவது போல் நடிக்கிறது என்று
வாரியத்துக்குத் தோன்றியதோ
என்னவோ அரசின் பதிலுக்குக் காத்திராமல் தன்னிச்சையாக ஒரு முடிவுக்கு
வந்து விட்டது. அடுத்த போட்டி
இங்கிலாந்திலோ, தென் ஆஃப்ரிக்காவிலோ நடத்தத் தீர்மானம். நம்மில்
பலருக்குத்தான் ஐ.பி.எல். என்றால்
இளக்காரம். ஆனால் அவர்களுக்கு நேர்ந்து தவமிருந்த சந்தர்ப்பம். இரு கை
நீட்டி வரவேற்கக் காத்திருக்கிறார்கள்,

இப்படிப்பட்ட ஒரு போட்டியை நடத்துவதில் இந்தியா முந்திக் கொண்டது
என்றுதான் சொல்ல வேண்டும்.
ஓர் அமெரிக்கக் கோடீஸ்வரர் இப்படி ஒன்றை மே.இ.தீவுகளில் நடத்ட முயன்றார்.
வேறு பல நாடுகளும்
திட்டங்களைக் கையில் வைத்திருந்தன. அவற்றால் முடிந்திருக்குமா என்பது
சந்தேகம். ஏனெனில் இன்று
உலகக் கிரிக்கட்டில் நினைத்ததைச் சாதிக்கும் “சக்தி” யாக இந்தியா மட்டுமே
இருந்து வருகிறது.

சரி, இந்தியாவால் ஏன் போட்டியை ஒத்தி வைக்க முடியவில்லை. ஜூனில் 20-20 உலகக் கோப்பை
இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. அதன் பிறகு மே.இ.தீவுகளுடன் இந்தியா நாங்கு
ஒருதினப் போட்டிகளில்
கலந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஸிம்பாப்வேயில் தென்
ஆஃப்ரிக்காவும்
கலந்து கொள்ளும் முத்தரப்புப் போட்டி இருக்கிறது. செப்டம்பரில்
சேம்பியன்ஸ் கோப்பை. அதன் பிறகு
சேம்பியன் லீக், பிறகு தொடர்ந்து ஆஸ்த்ரேலியா, தென் ஆஃப்ரிக்கா, இலங்கை
ஆகிய நாடுகள் இந்தியாவில்
சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளன. ஆகவே, இதை விட்டால் வேறு சந்தர்ப்பம்
அமைவது அரிது.

ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடைபெறாததால் பொது மக்கள் நேரில்
பார்க்க முடியாது என்பது ஒரு
பெரிய விஷயமல்ல. எத்தனை ஆயிரம் கோடிகள் செலவழித்தாலும் கிடைக்கத
விளம்பரம் இந்தியாவுக்கு
உலகெங்கும் கிடைத்து வந்தது. அதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை
அதிகரித்தது. இப்போது அது
இல்லை. அது கொண்டு வந்திருக்கும் வருவாய் இல்லாமல் ஹோட்டல்கள் மட்டுமல்ல.
அது சார்ந்த பல
தொழில்களும் வாடப் போகின்றன.

ஐ.பி.எல். இந்தியாவில் நடைபெறாததால், மற்றபடி, வானம் ஒன்றும் தரையில்
இடிந்து விழுந்து விடப்
போவதில்லை.

சிவராஜ் பாட்டில் எதுவுமே செய்யாமல் கெடுத்தார். நம்மூர் ப.சி. அதிகமாக
அலட்டிக் கொண்டு ஓர்
அருமையான சந்தர்ப்பத்தைக் கோட்டை விட்டிருக்கிறார் என்பது தான் நமக்கு
இதில் கிடைத்துள்ள பாடம்…!!!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *