மனிதர்களில் பலருக்கு இது
மாலைநேர பொழுதுபோக்கு
மங்கையரில் சிலரும் உண்டாம்
மேலை நாட்டு கலாச்சாரமாம்!
மயக்கத்தினால் மதி கெடுகிறதா
மதி கெட்டு விட்டதால் மயக்கம் பிடிக்கிறதா
மண்ணாசை கொண்டா மண்ணில் வீழ்கிறாய்
மறையும் முன்னால் முகத்தை மண்ணில் புதைக்கிறாய்
பழிப்போர்கள் எல்லாம் பாவிகள் உனக்கு
பழித்ததோடு அவர்கள் நிருத்திக்கொள்வதால்
பாடையில் செல்வதற்கா நீ
போதையின் பாதையை நாடினாய்
போதை தெளிந்த பின் நீ வந்த
பாதையை நோக்கிய துண்டா
பட்டினியால் சாவும் உன் பிள்ளைகள்
பழிச்சொல் ஏற்கும் உன் குடும்பம்
ஒவ்வொரு குடிக்காரனுக்கு பின்னாலும்
ஒவ்வொரு நீண்ட கதை இருக்கும்
அவர்களால் உண்டாக்கப்பட்டதாகவே
அது என்றும் இருக்கும்
உலகில் நீ என்ன ஒற்றையாகப் பிறந்தவனா
உலகிற்கு உன்னை விட்டால் நாதியில்லையா
ஓயாது பிரச்சினையாம் ஒருவனுக்கு
விடாமல் குடிக்கிறானாம் அதற்காக!
காரணங்கள் தோரணங்களாக
கணக்கின்றி தொடர்கிறது
குடிப்பதற்கு சாராயம் மட்டும் போதாது
குடிகாரன் ஆனதற்கு காரணமும் வேண்டுமாம்
இந்த உலகிற்கு நீ ஓர் வழிப்போக்கன்
இங்கே வந்தோரும் சென்றோரும்
கோடான கோடி அவர்களிலே நீ யார்?
கேள்விக்கு விடை உண்டா உன்னிடம்
வையகம் உன்னையும் சுமந்து செல்கிறது
உன்னால் உலகிற்கு ஏதும் இலாபம் உண்டா
உன் குடும்பமே உன்னால் தெருவிலே
வாடி நிற்கும் பொது உலகம் எங்கே?
மனதை உறங்க வைக்க மதுவின் பாதையா?
மானம் போனபின் மனது ஏன் உனக்கு
மரணச்சாலைக்கு வழி என்ன, விலை என்ன?
மாநில அரசாங்கமே நிர்ணயிக்கிறது!
தகன மேடை செல்ல வேண்டுமா
டாஸ்மாக் விரைந்து வாருங்கள்
தடையின்றி கிடைக்கும் கடவுச்சீட்டு
தள்ளாட்டம், தடுமாற்றம் இலவசம்
விரைந்து சென்று சாவை வாங்குங்கள்
வரவு செலவு பட்ஜெட் தேதி நெருங்கி விட்டது
உயிர் விற்ற காசில் ஊருக்கே பட்ஜெட்
வரவுக்கணக்கில் பணம், செலவுக்கணக்கில் பிணம்
மானங்கெட்டு மதுவை குடிக்கும்
மக்கள் கூட்டம் ஒருபுறம் என்றால்
மண்டை ஓடுகளிலும் வருமானக் கணக்கிடும்
மண்ணாளும் சண்டாளர்கள் மறுபுறம்
குடி அரசு பயின்றவர்களே
குடிக்க வைத்து அரசாளவா
தடியும் தாடியும் வைத்த பெரியார்
தன் தல்லாத வயதில் சொன்னார்?
குடியை மறந்து குடும்பம் நினைப்போம்
குன்றா புகழுடன் புவி வாழ்ந்து
வாழ்விற்கு வழிகோல் அமைத்து
வளமோடு வாழ்வோம், வாருங்கள்.
முதுவை சல்மான்
ரியாத், சவூதி