சிகப்பு நிறத்தில் ஓர் வரலாறு
தலைப்பு கண்டு மலைக்க வேண்டாம்
தலைப்பில்லாத கதையில் பொருளிராது
பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு என்றான்
என்பதால் பொருளோடு உள்ள ஒரு
எண்ணச் சிதறலை இங்கு வெளியிடுகிறோம்
கொலைதான் இக்கதையின் கரு
கொலையை வரலாறு என்கிறேன் என்று
குலை நடுங்க வேண்டாம் யாரும்
மனித ஜாதியின் துன்பம் யாவுமே பணத்தால்
வந்த நிலைதானே என்றான் ஒரு கவி
வந்த துன்பமெல்லாம் பணத்தால் என்றால்
உலகில் தோன்றிய ஆதி மனிதன்
உள்ளங் கைகளில் பணம் கொண்டா பிறந்தான்
பணம் படைக்கா ஆதிவாசி ஒற்றுமையாக வாழ்ந்தானா?
படுகொலைகள் புரியத்தான் செய்தான்
சரித்திரம் என்று மொழிந்துவிட்டு
சராசரியாய் எழுதினால் சரிவராது
கொலையின் விலாசம் தெரிய வேண்டும்
கொலையின் பிறப்பிடம், பிறந்த விதம்?
முதல் மனிதர் உலகில் தோன்றினார் துணையோடு
மனிதர்கள் அனைவர்க்கும் முன்னோடி
மண்ணில் வாழ்ந்திருந்தார் மகிழ்வோடு
நமக்கெல்லாம் முன்னோரான அவர்
நலமே பெற்ற இவ்வாழ்வில்
நன்றாய் ஈன்றார் இரு செல்வம்.
ஆபில் மற்றும் காபில் என நாமம்
அன்பாய் வளர்ந்து வந்தனர் இருவரும்
ஆதி மனிதர் ஆதம் தமிழே மொழிந்தார்
என்று கூறுகிறார் ஓர் வரலாற்றாசிரியர்
எம்மொழி பேசினும் நம்மொழி
உயர்தனிச் செம்மொழி யன்றோ?
உலக மாந்தர் நூற்றாண்டுகள் கண்டு
வாழ்ந்து வந்த அறிய காலம் அது
ஆதி மனிதரின் பிள்ளைகள் சச்சரவு புரிந்தா
ஒருவர் மற்றவரை கொலை செய்து விட்டார்
இறந்து போனார் சகோதரரில் ஒருவர்
இறந்த உடலை தோள் ஏற்றி நடைபயணம்
இறப்பு கண்டதில்லை அம்மனிதர்
இடையறாது நடந்தார் பிணத்துடன்
நேற்று வரை என்னுடன் உறவாடி
நலமே வாழ்ந்த என் சகோதரர்
கண்களை மூடிக் கொண்டுவிட்டார் பேசவில்லை
கன நேரம் பேசாமல் இருக்க மாட்டாரே?
என் செய்வேன் இவர் எதுவானார்
இயலாமையை நினைந்து வருந்தி நின்றார்
அறிந்தீர்களா இதுதான் முதல் கொலை
அறியாமையினால் செய்து விட்டாலும்
அந்த அறியாதவர் செய்ததுதான் முதல் கொலை
தொலை நோக்கில்லாமல் எய்த –
தொரு அம்பு போல் பிணம் சுமந்து
சென்றிட்ட அவரின் கண்களில்
செவ்வனே தைத்தது ஓர் காட்சி
இறந்து விட்ட காகம் ஒன்றினை
இயல்பான காகம் ஒன்று மண்ணில்
குழி பறித்து இட்டு மூடியது
காட்சியை கண்கொட்டாது பார்த்து நின்றவர்
மணலை தோண்டி பள்ளம் பறித்தார்
மரணித்த சகோதரரை மண்ணில் புதைத்தார்
மண்ணால் தோன்றிய உடலிதை
மண்ணில் தானே இட வேண்டும்
முதல் கொலை முதல் மரணமும் கூட
முதல் மனிதரின் வாரிசுகள் இருவரின்
மன்னரைகளும் நம் மண்ணில்தான் உள்ளது
தமிழகத்தின் தென் கோடியாம் இராமேஸ்வரத்தில்
தமிழன்தான் முதல் கொலையாளியா?
தர்மசங்கடமான வினாவேதான் அது
தலைமுறைகள் தொடர்ந்தோடியது
கொலைமுறைகள் செழித்தோங்கியது
கொலை செய்து சரித்திரத்தில் இடம் பெற்ற
கொடும் ஈனப்பிறவிகள் வளர்ந்தனர்
கொலையுதிர் காலமாய் உலகம் வாழ்கிறது
அதிகாரம் யாருக்கு? இதுதான்
இன்றைய கொலை அச்சாணி
இயன்றளவு மிகுதியான கொலை புரிந்த,
கொலைபுரியும் நாடு வல்லரசு என்று
கண்டறியப் படுகிறது அது இயல்பாகியும் விட்டது
பண்டைய காலத்தில் வீரன் யாரென்று
படை திரட்டி களம் கண்டு ஒருவன் மீள்வான்
அந்தப் போர்களில் களம் செல்லும் வீரர்கள்
உடன் செல்லும் படை பட்டாளங்கள் அழிந்தது
இன்றைக்கும் போர்கள் நடக்கின்றன
ஆதிக்கம் கொண்டவன் பகை நாட்டை
அடியாழம் வரை பார்த்து திருமபிவிட்டு
வான்வழியில் ஏவுதளம் அனுப்பி
வாயில்லா மாந்தர்களை கொன்று குவித்து
வெற்றி எங்களது என்று கூவிடும்
பெட்டைக் கோழிகளாய் வல்லரசுகள்
உலகை அழிக்கும் அணுவாயுதம்
உள்ளே குவித்து வைத்துக் கொண்டு
உலகில் அணுவாயுதம் ஒழிய வேண்டுமென
ஊளையிடும் ஒற்றைக் கண் பார்வை
சரணாகதி அடைய வந்த ஜப்பான் மீது
சன்னமும் ஈவிரக்க மின்றி அணு வீச்சு
மக்கள் வாழ்ந்து வந்த தீவு ஒன்றை கெடு
விதித்து அவர்களை வெளியேற்றி
வெறி மிகுந்த அணுகுண்டு சோதனை
வெண்ணிலா மேல் மிதித்த முதல் மனிதனை
வேற்று நாட்டவன் என்பதால் இருட்டதுத்து
வெற்றியாளர் யாமே என மொழிந்த
அப்பட்ட மான தொரு வரலாற்று திருட்டு
பாலஸ்தீனத்தில் யூதன் செய்தால் குடியேற்றம்
குவைத்தில் ஈராக் செய்தால் ஆக்கிரமிப்பு
அத்துனையும் என்னவென்று கேட்கிறீர்களா?
இன்றைய வல்லரசு ஓடி வந்துள்ள வழித்தடம்
சம்பவம் ஒவ்வொன்றிலும் சடலங்கள்
சரிந்து போனவை கோடிக் கோடி
புரிந்து கொண்டீர்களா வெற்றிப் பாதையை
புதுப்புது காரணங்கள் என்ன சொல்லினும்
கொலைதான் குறி நோக்கம்
கொலை தான் வழிப்பாதை
கோட்டைக்கு வழி என்ன?
கொலை! அதுவும் படுகொலை!
அன்றைய உலகம் மிகப் பெரியது
இன்றோ அது விரலின் நுனியில்
இதிலும் இலாபம் யாருக்கு தெரியுமா?
பலகாலம் முந்தைய நிலையில்
படுகொலை சென்பவன் ஒளிந்த்ருந்தான்
இன்றைய சூழல் எப்படி
இவன் செய்யும் கொலைகளை
உலகமே வேடிக்கை பார்க்கும்
தண்டனைச் சட்டங்கள் கண்ணுறங்கும்
சர்வதேச சட்டங்கள் சவத்தில் கிடக்கும்
சர்வாதிகாரியாய் உலகை வலம் வருவான்
எதிர்வரும் நூற்றாண்டில் ஓர் நாடு
உயரக் கூடும் என்று அறிந்துவிட்டால்
சென்ற நூற்றண்டிலேயே அதற்கு குழிபறிப்பான்
உலகின் சரித்திரம் இரத்தத்தால் சிவந்து
வலி மாறி வெட்கி நிற்கின்றது
காலச் சுவட்டை இரத்தம் தோய்ந்த
கரை வடுக்களால் ஆக்கி – நாளைய
வரலாற்றுக்கு வசைமாரி தேடித் தந்தவர்களை
வரலாறு ஒரு போதும் மன்னிக்காது
மனித மனங்கள் அமைதி வழி திரும்பட்டும்
மண்ணின் வரலாற்றை வசந்தங்களால் எழுதட்டும்
மனிதப் பிறவியின் மகத்துவம்
மண்ணோர் அனைவர்க்கும் விளங்கட்டும்
உலகம் நல்வழி வாழ்ந்து சிறக்கட்டும்.
முதுவை சல்மான்
ரியாத், சவூதி