மிலாது நபித் திருநாள்!

கட்டுரைகள்

பா. ஹாஜி முஹம்மது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம், மிலாது நபி என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் அண்ணலாரின் உதயதினம், வரும் 10.3.09ல் அமைகின்றது.

நபியவர்கள் (ஸல்), தான் வாழ்ந்த காலத்தில் தனது பிறந்த நாள் என்று குறிப்பிட்டு விசேஷமான நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தவில்லை என்பதும், அதேபோல் அக்கால மக்களையும், அந்நாளில் ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறியதாகவும் கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் வரலாற்றின் வாயிலாக அறியப்படுகின்றது.

எது எப்படி இருப்பினும், மூடப் பழக்க வழக்கங்களைக் கொண்டு வாழ்ந்த அக்கால மக்களிடையே சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த முகமது என்ற மனிதரை அல்லாஹ் தன்னுடைய நபியாகத் தேர்வு செய்து, மக்களுக்குத் தன்னுடைய ஏகத்துவ ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்லும்படி பணித்தான். அண்ணலாரும் அப்பணியினை நிறைவாகச் செய்ததன் விளைவாக, அம்மக்களும் அவரின் போதனைகளை ஏற்று நேர் வழியினைப் பெற்றார்கள்; நாகரீகமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அதுவே உலகின் சிறந்த சாதனை என்று மேலை நாட்டு எழுத்தாளர் மைக்கேல் ஹெச். ஹார்ட் புகழ்ந்து எழுதுகிறார். (ஆதாரம் : வரலாறு படைத்தோரின் வரிசையில் நூல்- ஒரு நூறுபேர்)

எனவே அத்தகைய மாமனிதரின் பிறந்த தினத்தில் அவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் நிகழ்த்திய சாதனைகள் சிலவற்றை நினைவு கூர்வது அவசியம். இதனால் நம் மனதில் அண்ணலாரின் நல்ல செய்திகள் மலர்ந்து, நம்மால் நல் அமல்கள் செய்திட இயலும்.

நபிகளாரின் பிறப்பு

அரபு நாட்டில் உயர்ந்த வணிகக் கோத்திரமான குரைஷி இனத்தில், தந்தை அப்துல்லா-தாயார் ஆமீனா தம்பதிகளுக்கு ஏக புதல்வனாக கி.பி. 571ல், ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12க்கு, திங்கட்கிழமை அதிகாலையில் பிறந்தாரென நபிகளின் அதிகாரப் பூர்வமான வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள், தனது அன்னை வயிற்றில் ஆறு மாதக் குழந்தையாக இருந்த பொழுது. தந்தை அப்துல்லா அவர்கள் இறந்துவிட்டார். அதன்பின் பாலகன் பிறந்ததும், முகமது என்று பெயரிடப்பட்டது. அந்நாட்டு வழக்கப்படி வளர்ப்புத்தாய் ஹலிமாவால் பாலூட்டி வளர்க்கப்பட்டது குழந்தை. பின்னர் நபிகள் தனது 6ஆம் வயதில், பெற்ற தாயையும் இழந்துவிட்டார். இந்நிலையில் தந்தை, தாயை இழந்த அநாதையாக, பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பின், பெரிய தந்தை அபூதாலிப் கண்காணிப்பில் சீராக வளர்ந்து வந்தார் நபிகள்.

ஓர் அனாதையாக அன்புடனும், பாசத்துடனும் வளர்க்கப்பட்ட இந்த முகமது அவர்கள், உலக மக்களுக்கு அருட் கொடையாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்டாரென இறைவன் தனது திருமறை அத். 21, வசன எண் 107ல் கூறியுள்ளான். சிறு வயதிலேயே நல்ல குணங்களுடன் நபிகள் இருந்ததால் அக்கால மக்கள் அவரை, அல்-அமீன் (உண்மையாளர்), அஸ்ஸôதிக் (நம்பிக்கையாளர்) என்று அழைத்தார்கள்.

வாலிப வயதில், கதிஜா அவர்களின் பெரும் வாணிபத்தைத் திறம்பட நடத்தினார் நபிகள். மேலும் நற்பண்புகளைக் கொண்ட நபிகளை திருமணம் செய்ய கதிஜா விரும்பியதால், தன்னைவிட வயதில் மூத்தவரும் விதவையுமான கதிஜாவை நபிகள் நாயகமும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டார். இது நபிகள் அக்காலத்திலேயே செய்த சீர்திருத்தம்! இதனால் விதவைகளின் மறுமண மறுவாழ்வு, மக்கள் மத்தியில் ஏற்பட்டது எனலாம்.

நபிப்பட்டம்

அல்லாஹ், 40 வயதானதும் முகமது என்ற மாமனிதரை தன்னுடைய நபியாகத் தேர்வு செய்து அவருக்கு நபித்துவத்தையும், குரானையும் கொடுத்து அருளினான். அச்சமயம் நபிகள் உம்மீயாக, அதாவது எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தார் என்று இறைவசனம் கூறுகின்றது. முதன் முதலில் குரான் புனித நூலை மனனம் செய்ததும் நபியே ஆகும்.

நபிப்பட்டம் கிடைத்தபின் மெக்காவில் 13 ஆண்டுகள் தங்கியிருந்து மக்களிடையே ஏகத்துவக் கொள்கையைப் பரப்பினார் முகமது நபி. அங்கு அவர் அடைந்த துன்பங்கள் சொல்லில் எழுத இயலாது. அதில் தாயீப் சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கக்கூடியது.

அதன்பின் மெக்காவை விட்டு மதினா சென்று, அங்கும் 10 ஆண்டுகள் அல்லாஹ்வின் அழைப்புப் பணியினை நிறைவாகச் செய்தார் நபி. முகமது நபியவர்கள் மெக்காவைவிட்டு மதினா சென்றதை ஹிஜ்ரத் என்றும், அந்நாளே இஸ்லாமியர்களின் புதிய ஆண்டான ஹிஜ்ரி ஆண்டு என்றும் ஆரம்பித்துக் கணக்கிடப்பட்டது. தற்சமயம் ஹிஜ்ரி 1430ஆம் ஆண்டு நடைபெறுகின்றது. அன்று நபிகள் செய்த பணியின் தாக்கம் இன்றளவும் என்ன, இன்னும் கியாம நாள் (இறுதித் தீர்ப்பு) வரை தொடர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நபிகளாரின் சொல், செயல் மற்றும் அவரது அங்கீகாரம் பெற்றவையே தற்சமயம் ஹதீஸ் என்று அழைக்கப்படுகின்றது. அதில் ஈமான் கொண்ட மக்கள் குரானுக்கான விளக்கம் பெறுதல், மற்றும் அன்றாட அமல்களை எப்படி தூய்மையான வழியில் செய்வது ஆகியன பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளது.

நபிகளாரின் எளிய வாழ்க்கை

எல்லையில்லா பொருள் மற்றும் செல்வ வளங்கள் நபிகளிடம் இருந்தும், ஏழ்மை வாழ்க்கையையே அண்ணலார் மனம் விரும்பி வாழ்ந்தார். இதற்கு எடுத்துக்காட்டாக, அல்லாஹ் உஹது மலையைத் தங்கமாக்கித் தருகிறேன் என்றதை ஏற்க மறுத்துக் கூறியது திகழ்கிறது. “”யாஅல்லாஹ்! நான் ஒரு வேளைக்குப் பசித்திருந்து உன்னை நினைத்து உணவு கேட்டுப் பெறவும், நீ கொடுத்த உணவை உண்டபின் அதற்கு உனக்கு நன்றி செலுத்தி வாழவுமே என் மனம் விரும்புகிறது’ என்று நபிகள் கூறியதாக அவரின் ஏழ்மை வாழ்க்கையைப் பற்றி ஹதீஸ் நூல், புகாரி வசன எண்கள் 2567, 5413, 5374 மற்றும் 6454ல் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்துணை எளிய, ஏழ்மையான, எந்நிலையிலும் கடுஞ்சொல் சொல்லாத வாழ்க்கையை வாழ்ந்ததால்தான் அல்லாஹ் தனது திருமறை அத்.33, வசன எண் 21ல் “விசுவாசிகளே! உங்கள் நபியின் வாழ்க்கையில் உங்களுக்கு ஓர் அழகிய முன் மாதிரி இருக்கின்றது” என்று அருளியுள்ளான்.

எனவே அண்ணலாரின் பிறந்த நாளில் நாமும் அவர் காட்டியருளிய நேரிய வழியில் சென்று வாழ உறுதி பூணுவோமாக.
பெற்றோரைப் பேணுவோம்!

முகமது நபியவர்கள் பல விஷயங்களில் நாம் பின்பற்ற வேண்டிய நேரிய வழிகளைக் கூறியுள்ளார். “உனது தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது” என்பது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி. இந்த ரத்தினச் சுருக்கமான மொழி, பெற்றெடுத்த தாயை எந்த அளவுக்கு நாம் பேணிக் காத்து பணிவிடைகள் செய்ய வேண்டும் என்பதைச் சொல்கின்றது. இவ்வுலகில் வாழும் மக்கள் சொர்க்கம் பெற தங்களது வாழ்நாள் முழுவதும் நன்மையான செயல்கள் செய்தாலும், மறுமையில் சொர்க்கம் கிடைப்பது அல்லாஹ்வின் தீர்ப்புப்படிதான் உள்ளது. ஆனால், “தாய்க்குப் பணிவிடை செய்தால் சொர்க்கம் நிச்சயம் உண்டு” என்பது மேற்கூறிய நபிமொழியால் விளங்குகின்றது.
பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்து பேணிக் காத்தல் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் கூறியுள்ளவையாவன :

பெற்றோரைத் துன்புறுத்திய ஒருவன் அவர்களிடம் மன்னிப்பு கேட்காமல் இறந்துவிடுவானாயின், இறுதி நாளில் அவன் குஷ்டரோகியாக கபரில் இருந்து எழுப்பப்படுவான்.

ஆண் பிள்ளைகளுக்கு நபிகளாரின் அறிவுரை: நீங்கள் உங்களுடைய தாய், தந்தைக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் மகன் உங்களுக்கு நன்றி செலுத்துவான்.

நல்ல ஒழுக்கம் உள்ள பிள்ளைகள் தனது பெற்றோர்கள் மீது அன்பு நிறைந்த பார்வையை ஒரு முறை செலுத்தினால், அதற்குப் பகரமாக (ஈடாக) அப்பிள்ளைகளுக்கு இறைவன், ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குச் சமமான நற்கூலியை வழங்குவான்.

பெற்றோர்களின் இன்பத்தில் இறைவனுடைய இன்பம் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *