பரந்தமணற் பெருங்கடலில்
பயணம் செல்லும் கப்பல் – இது
பக்குவமாய் உயர் முதுகில்
பாரம் சுமக்கும் கப்பல்!
வறட்சி மிகு நீரிலாவனத்தில்
போகுங் கப்பல் – இது
வாலும் முதுகும் கால்கள் நான்கும்
வாய்த்திருக்கும் கப்பல்!
நீர்குடிக்க வாய்ப்பிருந்தால்
நிறையக் குடிக்கும் கப்பல் – மிக
நெடும் பொழுது தாகம் தாங்கி
நிற்கும் உயிர்க் கப்பல்!
பார் முழுதும் உள்ள மக்கள்
பார்த்து வியக்கும் கப்பல் – இது
பாதம் மணலில் புதைந்திடாமல்
பாங்காய்ப் போகும் கப்பல்!
ஊர்ப் பயணம் செல்ல மக்கள்
ஓட்டிப் போகும் கப்பல் – மிக
உயர்ந்த உடலும் தடித்த தோலும்
உடையதிந்தக் கப்பல்!
பார்த்துப் புல்லை மேய்ந்து நல்ல
பால் கொடுக்கும் கப்பல் – இது
பாலைவனக் கப்பல் தம்பி
பார்! பார்! ஒட்டகக் கப்பல்!
– திட்டக்குடி முத்து முருகன்