வாழ்க்கை

கவிதைகள் (All)

வாழ்க்கை

இதன் அர்த்தம்தான்
என்ன?

ஜனனம்,
மரணத்தை நோக்கி
மெல்ல நகர்கிறதே..
அதுதான் வாழ்க்கையா?

உறக்கத்தில் கூட
சுவாசிக்கிறானே மனிதன்..!
சுவாசிப்பதுதான் வாழ்க்கையா?

பசியை போக்க
பத்தும் செய்கிறானே..
எனின்..
புசிப்பதுதான் வாழ்க்கையா?

“கடலைக் கடப்பேன்..
நெருப்பில் நடப்பேன்..
நினைவில் மட்டும்
நீயிருந்தால்..
ஏவுகணைகளையும் எதிர்த்திடுவேன்..”
பொய்யாய் புலம்புகிறானே
காதலன்..
காதல்தான் வாழ்க்கையா??

தீமை செய்யாதே..
இறந்தால் நரகம்!
நன்மை செய்..
செத்தால் சொர்கம்!

ஆயின்..
வாழ்க்கை
மரணத்தில் மட்டுமே
விளங்குமா…?!!

எது வாழ்க்கை..?
விவாதிப்பதில்
விருப்பமில்லை எனக்கு!

வெற்றிடத்தை
காற்று நிரப்பும்!
இது விதி..

வாழ்க்கையை,
அன்பு நிரப்பும்..
ஒழுக்கம் நிரப்பும்..
பண்பு நிரப்பும்..
பாசம் நிரப்பும்..
கடமை நிரப்பும்..
காதலும் நிரப்பும்..
அமைதி நிரப்பும்..
ஆசையும் நிரப்பும்..!

இயற்கையோடு
நாம் செய்துகொண்ட
இடைக்கால ஒப்பந்தமே
வாழ்க்கை..

இதில்
ஆசைகளை கடந்துவிட்டால்..
பின் எதற்கு வாழ்க்கை?!

காதல் இல்லா
வாழ்க்கை..
கருத்தில்லாத கவிதை
போன்றது..

கடமை இல்லா
வாழ்க்கை..
கணக்கு இல்லாத
கல்வி போன்றது!

அன்பில்லாத
வாழ்க்கை..
”ழ”கரம் இல்லா
தமிழ் போன்றது…

அர்த்தம் இல்லாத
வாழ்க்கை..
ஆண்டவனே இல்லாத
மதம் போன்றது..!!

ஆசைகளை
அர்த்தப்படுத்துங்கள்..
வாழ்க்கையை
சுத்தப்படுத்துங்கள்…!!!

-அன்புடன் கிருஷ்ணமூர்த்தி, Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *