முஸல்லாவே !
முழுமனதாய் நானுன்னை
மோகிக்கிறேன்.
யார் சொன்னது
நீ வெறும்
தொழுகை விரிப்பென்று?
நீ
சுவனத்திற்கு
சுருக்குவழி காட்டும்
ரத்தினக் கம்பளம் !
நன்மாராயம்
ஈட்டித்தரும்
அட்சயப் பாத்திரம் !
உன்னை விரிக்கையில்
சொர்க்கத்தின் தூரம்
சுருங்கி விடுகிறது !
பூக்கள் ..
இதழ்களை விரிக்கையில்
பூரிக்கிறது வண்டினம் !
கதிரவன் ..
காலைப்பொழுதில்
இளங்கீற்றை விரிக்கையில்
களிப்படைகிறது பறவையினம் !
உன்னை
தரையில் விரிக்கையில்
என் ஆன்மாவன்றோ
அடைகிறது ஆனந்தம் !
உன் பார்வை – அது
தீர்க்கமான பார்வை
திடமான பார்வை
திசைமாறா பார்வை
திகட்டாத பார்வை
அதன் ரகசியம்
எனக்குப் புரியும்.
கண்ணியமிக்க
கஃபாவை மட்டுமே
நீ நோக்குவதால்தானே ..?
நீ
என்னைச் சுமந்து
என் பாவச்சுமைகளை
இறக்கி வைக்கிறாய்
தங்கத்தின்
தரத்தை மாற்றும்
தட்டானைப் போல
நீ என்
உள்ளத்தை
உன்னதமாய்
உருமாற்றி விடுகிறாய் !
உன் தூண்டுதலினால்
நன்மைகளே எனக்கு
வருவாய் !
அன்றைய தினம்
நீயும் என்னுடன்
சாட்சி கூற
வருவாயாமே ..?
வருவாயா?
வருவாய்