இனிவரும் நாள்கள்

கவிதைகள் (All)

கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக..
….கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக!
இனவாதம் மதவாதம் இறந்து போக
….இதயத்து குணத்தினையே யாரும் நோக்க..
பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை
….பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க..
நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன்
….நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்!

கடந்துவந்த காலத்தை எண்ணிப் பார்க்க…
….கண்ணீரும் புன்னகையும் கலந்த வாழ்க்கை.
நடந்துவரும் நாள்களிலும் நிகழ்வின் கைகள்
….நினைவுகளைத் தூவிவர நெஞ்சம் பொங்கும்.
தொடர்ந்துவரும் திருநாள்கள் துலங்க வைக்க..
….தன்னுணர்வில் நுண்ணறிவு விழிக்க வேண்டும்.
இடங்களல்ல இருப்பினிலே என்று (உ)ணர்ந்து
….இயல்புகளை ஏற்கின்ற இதயம் வெல்லும்.

சின்னவனாய் இருக்கையிலே சுகமே உலகம்
….சிந்தனையில் வேறில்லை சமமே யாரும்.
விண்ணதுவும் உயர்வில்லை உயர்வைக் கூறின்
….உண்மையிலே சிறுபிள்ளை உள்ளம் தானே!
மின்னுகிற கண்களிலே கனவின் கங்கு
….மேதினியில் வெளிச்சத்தை ஏற்றச் செய்யும்
என்னவொரு காலமய்யா! இன்றோ ஏக்கம்
….எங்கெங்கு நோக்கிடினும் பாகு பாடு!

இனிவருமோ அந்நாள்கள் என்ற கேள்வி
….எழும்பிடுதே வழியெங்கும் என்ன செய்ய?
தனிமனித நலமொன்றே யாரும் பார்க்கும்
….தற்காலம் மாறிவிடின் தீரும் ஏக்கம்.
பனித்துளிபோல் புல்நுனியில் பட்டு நிற்கும்
….பாசாங்காய் அரசியலில் பொதுமை எண்ணம்
இனிப்பதுவும் தேநீரில் இருத்தல் போல
….இரண்டறவே கலந்துவிட வருமே அந்நாள்.

பொதுமக்கள் வரிக்காசில் பிழைத்தே ஏய்க்கும்
….போக்கிரிகள் பொதுவாழ்வில் நீங்கி விட்டால்..
எதுவாகும் தன்னெல்லை அறிந்தே எவரும்
….ஏற்பற்ற குணம்நீக்கி ஏற்றம் கண்டால்…
நதிபோல நகர்கின்ற நாள்கள் தன்னில்
….நற்றவமே போலாகும் செயல்கள் கொண்டால்
விதியென்று சோம்புகின்ற வீணம் விடுத்து
….விளைவுகளை ஏற்கின்ற வீரம் பெற்றால்…

இனிவருமோ நாளெல்லாம் எண்ணம் போல
….இறையவனை கேட்டுத்தான் இறைஞ்சும் உள்ளம்
வினையெதுவும் விதைத்தாலே வினையை அறுப்பாய்
….வேறில்லை நியதிகளும் என்றே சொன்னால்
தனியொருவன் செய்கின்ற தவறின் பலனாய்
….தரணியிலே மற்றவர்க்கும் துன்பம் ஏனோ?
கனியளிக்கும் மரங்களுக்கே கல்ல டிகளோ?
….காரணத்தைக் கேட்டேனே கருத்தாய் நானும்.

விடையிருக்கும் உன்னிடத்தில் வேண்டித் தேடு!
….உணராத காரணங்கள் உள்ளி ருக்கும்.
கடைபிடிக்கும் முறையினிலே கோளா றிருக்க
….கண்டளித்த அறிஞனையா குறைகள் சொல்வர்?
கடைமனிதன், உயர்மனிதர் – பிரிக்கும் நீதி
….கைக்கொண்ட சுயநலத்தால் விளைந்த கேட்டை
உடைத்திடவே செய்யாமல் உறக்கம் கொண்டால்
….ஒன்றாகும் நன்மையுடன் தீமை கூட!

இனிவருமோ அந்நாள்கள் யாரும் கேட்பின்
….எப்போதும் மாற்றங்கள் மனிதர் கையில்!
தனிமனித நலனுக்காய் தவறு செய்யும்
….தரமற்ற தலைமைகளை மாற்ற வேண்டும்.
மனிதமிதே உயர்வென்ற மாண்பைப் போற்றி
….மண்மீதில் தருமத்தை மீளச் செய்வோம்.
அணிதிரளா நல்லவரால் கொடியோர் ஆட்டம்
….அறமழியும் முன்னாலே ஓடி வாரீர்!
முழுதும் படிக்க…

H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *