டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது

இலக்கியம் கட்டுரைகள்

டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது

 கீழக்கரை அறிஞர் தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களுக்கு 1993 ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

அரபி, பார்ஸி, பாலி, சமஸ்கிருத அறிஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் மொழியியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

‘அரபி, பார்ஸி, உர்தூ மொழிகளின் வளத்திற்குத் தமிழர்களின் பங்களிப்பு’ என்ற மொழி ஆராய்ச்சிப் பெருநூலை எழுதிய கீழக்கரை அறிஞர் டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.

தமிழக இஸ்லாமிய இலக்கியம் தலைநகர் டெல்லியில்

மகுடம் சூட்டியது

பாட்டனார் வழியில் பேரன் !

இராஜ குடும்பத்தின் பேரனொருவன் ஒரு காலத்தில் அரசு கட்டிலில் ஏறுவது போன்று, இறை நேசச் செல்வர் ஒருவரின் வாரிசாக பேரக்குழந்தை பேர் பெறுவது போன்று சீமான் தனமாக வாழ்ந்த குலபெருமை காக்க எட்டாவது பேரன் பணக்காரனாக இருப்பது போல் இன்றும் ஒரு குடும்பத்தின் பாரம்பரியத்தை தூக்கி நிறுத்த ஒரு காய்கனியாகியுள்ளது.

மன்னர்களைத் தேடிச்செல்லாதவர்கள்

ஆம் வரலாறு தொடர்கிறது ! முன்னூற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் டெல்லிப் பட்டணத்தில் உள்ள ஜாமியா மஸ்ஜிதில் நடு இரவில் தமிழகத்திலிருந்து சென்ற ஞானிகளின் மகுடமாகத் திகழ்ந்த மகான் சதக்கத்துல்லா அப்பா (ரஹ்) அவர்களை நகர்வலம் வந்த மாமன்னர் ஒளரங்கஸீப் திடீர் என சந்தித்து அறிமுகமாகிக் கொள்கிறார்.

மகான் அவர்களைத் தமது கொலு மண்டபத்திற்கு அழைக்கிறார் மாமன்னர் ! மகான் அவர்கள் மறுக்கிறார்கள். “மன்னர்களின் மணிமாடத்தைத் தேடி வருவது சூஃபியாக்களுக்கு மரபல்ல” என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.

மகான் ஸதக்கத்துல்லா அப்பா அவர்களின் மகிமையை உணர்ந்த மன்னர் ஒளரங்கஸீப் அவர்களை ‘மலிக்குல்ஷுரா’ எனப் போற்றி மகிழ்கிறார்.

ஷரிஅத் சட்டப்படித்தீர்ப்பு வழங்கும் ‘பதாவா ஆலம்கீர்’ என்னும் கிரந்தம் தயாரிக்கும் உலமாக்களின் குழுவில் அப்பா அவர்களையும் இடம் பெறச் செய்தார்.

டெல்லியில் மீண்டும் ஒரு வரலாறு

மன்னரும்- மகானும் நட்பின் நண்பர்களாகிறார்கள். நட்பின் மிகுதியால் அப்பா அவர்களை வங்காள கவர்னராக்க ஆவல்படுகிறார். அதற்கும் இசையாது தமது அன்புச்சீடர்வள்ளல் சீதக்காதியை வங்காள கவர்னராக சிபாரிசு செய்கிறார்.

கி.பி. 1618 ல் நடந்த இந்த சரித்திரம் இருபதாம் நூற்றாண்டில் வேறு வித பாணியில் 18-6-93 அன்று தலைநகர் புது டில்லியில் ராஷ்ட்ரபதி பவனில் வரலாற்றைப் புதுப்பிக்கிறது !

உருதுப் பேரறிஞரும் இந்திய நாட்டின் முதல் குடிமகனாருமான ஜனாதிபதி அவர்களின் மாளிகையில் பல பேரறிஞர்கள் அவ்லியாக்களின் வாரிசுகளின் முன்னிலையில் ராஷ்ட்ரபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள். சதக்கத்துல்லா அப்பா அவர்களின் கொடிவழி வந்த அறிஞர் டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்கள் எழுதிய ஆய்வுப் பெருநூலை மனமுவந்து முகமலர்ந்து இரு கரம் நீட்டி முதன் முதலில் பெறுகிறார்.

பத்து நிமிடம் சந்திக்க நேரம் கொடுத்த ஜனாதிபதி அவர்கள் ஐம்பது நிமிடம் பல விஷயங்களைப் பேசி மகிழ்ந்தார்.

ஜனாதிபதி கொடுத்த சிறப்பு

எவர் வந்தாலும் என்ன அவசரச் செய்திகளை தனி அதிகாரிகள் கொண்டு வந்தாலும், தொலைபேசி எத்தனை முறை ஒலி எழுப்பினாலும், ஜனாதிபதியின் குறு குறுப்பான பார்வையும் புன்னகையுடன் மலர்ந்த வாயும் அறிஞர் ஷுஐபுவின் பக்கமே இருந்தது.

டெல்லிக்குச் சென்ற தமிழகப் பிரமுகர்கள்

இதனைக் கண்ணாரக் கண்டவர்கள் மத்திய அமைச்சரின் உருது விருத்திக்கழகத்தின் இயக்குநர், மஹ்பூப் இலாஹி ஷா வலியுல்லாஹ் தர்காவின் ஷானேஷீன் ஸஜ்ஜாது, மற்றும் தமிழகத்திலிருந்து உடன் சென்ற காயிதே மில்லத் அகாடமியின் தலைவர் அல்ஹாஜ் P.S.M. அப்துல் காதர், M.A.B.L., கீழக்கரை சமூக நலப் பிரமுகர் அல்ஹாஜ் ஏ.ஜி. மஹ்மூது மரைக்காயர், இன்னொரென்ன ஏனைய அறிஞர் பெருமக்களும் சூழ்ந்திருந்தனர்.

ஒரு சரித்திரம் திரும்பிப் பார்த்தது

ஆம் ! கீழக்கரை நந்நகரின் கீர்த்தி புதுடெல்லி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் புகழின் கொடி விரித்து பறக்க ஆரம்பித்தது.

சரித்திரப்பெட்டகம் மீண்டும் ஒரு முறை தனது பழைய பொன்னேடுகளைத் திரும்பிப் பார்த்து பெருமிதம் கொண்டது எனலாம்.

தமிழகத்தில் வரலாறு தொடர்கிறது

மேலெழுந்த சரித்திரம் தமிழக மண்ணிலும் புத்துயிர் பெற்றது. சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன ராஜதானியை ஆட்சி புரிந்த வாலாஜா நவாபு குலாம் கெளஸ்கான் அவர்களின் காலத்தில் அறிஞர் டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களின் முப்பாட்டனார் இமாமுல் அரூஸ் மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் நூற்றுக்கணக்கான மஸ்ஜிதுகளையும் மத்ரஸாக்களையும் தைக்கா (ஞான ஆசிரமங்கள்) க்களையும் உருவாக்கினார்கள்.

முதன் முதலான அரபிக்கலாசாலை

இப்படி முதல் முதலில் தமிழகத்தில் அரபி கலாசாலை குருகுலவாசத்தை,

“அருஸ்ஸியா தைக்கா மத்ரஸா” என்று கீழக்கரை மேலத்தெருவில் உருவாக்கினார்கள்.

இதற்குப் பல வருடங்கள் கழித்துத்தான் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி உருவாகியது.

மத்ரஸாவில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக உணவும் தங்குமிடமும் வசதி செய்து கொடுத்துள்ளார்கள்.

இந்த முறையைக் கேள்விப்பட்ட வாலாஜா நவாப் குலாம் கெளஸ்கான் அவர்கள் இமாமுல் அரூஸ் அவர்களைச் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்தார்கள்.

மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிமும் வாலாஜா நவாபும் !

தம்முடைய முன்னோர்களைப் போன்றே இவர்களும் மன்னரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

மன்னரின் தர்பாரில் மார்க்க வல்லுனராக இருந்த பிரதம காஜி பத்ருத் தவுலா அவர்கள் மகான் மாப்பிள்ளை லெப்பை அவர்களை அணுகி நவாப் அவர்களின் சன்மார்க்கப் பற்றை விளக்கி சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு அமீர் மஹால் அரண்மனையில் நடைபெறவில்லை.

இப்போதுள்ள சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் (காயிதே மில்லத் சாலை) உள்ள நவாபு வாலாஜாஹி மஸ்ஜிதில் நவாபு அவர்களுக்கும் இமாமுல் அரூஸ் மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கும் சந்திப்பு நடந்தது.

நீண்ட நேரம் மன்னரும் அறிஞரும் அளவளாவினர். அந்தச் சந்திப்பிற்குப்பின் தான் சென்னை அண்ணாசாலை (மவுண்ட்ரோடு) யில் உள்ள ‘மத்ரஸாயே ஆஜம்’ என்னும் கலாசாலையை நவாபு அவர்கள் துவக்கினார் என்பது வரலாற்று உண்மை !

தென்னாடு திரும்பிப் பார்த்தது

180 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சரித்திரம் மீளுகிறது ! 28-7-93 அன்று டாக்டர் அறிஞர் ஷைகு தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்கள் ஆய்வு செய்த ஆராய்ச்சிப் பெருநூலை காமராஜ் அரங்கத்தில் தமிழக ஆளுநர் மேதகு டாக்டர் சென்னாரெட்டி அவர்கள் வெளியிட ஆற்காட்டின் இளைய இளவரசர் நவாப் ஜாதா முஹம்மது அப்துல் அலி அவர்கள் முதல் பிரதியை ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்த்தொலிக் கிடையில் பெற்றுக் கொண்டார்.

தமிழக முஸ்லின் சமுதாயத்தின் ஏகப் பெரும் பிரதிநிதித்துவ இயக்கமான முஸ்லிம் லீக்கின் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாகிப் அவர்களும் சன்மார்க்கச் சொற்பொழிவாளர் அறிஞர் மெளலானா அப்துல் வஹாப் சாகிப் அவர்களும், வாழ்த்துரை வழங்கினார்கள்.

இலங்கை தூதுவர்கள் பங்கேற்பு

இப்பெருநூலில் இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாமிய மொழிகளுக்குச் செய்த சேவை பரவி விரவியுள்ளது. அதற்கு நன்றிக்கடன் செய்வதுபோல் டெல்லியில் நடந்த ராஷ்ட்ரபது பவன் நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர்கள் நெவில் கனகரத்னா அவர்களும், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சென்னையின் இலங்கை டெபுடி ஹை கமிஷனர் டாக்டர் ஏ.மு. வல்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அரச தர்பாரும் மக்கள் மன்றமும்

முன்னூறு ஆண்டுகளுக்கிடையில் நடந்த இவ்விரு சம்பவங்களில் ஆத்மஞானிகள் அரச தர்பாருக்குச் செல்வதை விரும்பாது இருக்க,

அறிஞர் டாக்டர் தைக்கா ஷுஐபு அவர்கள் மட்டும் ஆதிக்கபுரியை நாடிச் சென்றதேன் என வினா எழுப்பலாம் ! கேட்க வேண்டிய ஐயப்பாடு தான்.

அதற்கு விளக்கமளிக்கவும் இங்கு கடமைப்பட்டுள்ளோம் ! அன்றைய டெல்லியிலும் வாலாஜா அரண்மனையிலும் கோலோச்சியவர்கள் முடியாட்சி செய்தவர்கள்.

ஆனால் இன்றோ குடியாட்சி வழிநின்று மக்களை மக்களால் ஆளக்கூடிய ஜனநாயக அரசாளும், அந்த அரசின் ஆட்சியாளர்கள் மக்களின் பிரதிநிதிகள்தான்.

முன்னோர்கள் வழியில் மூதறிஞர்

முன்னோர்களான ஞானப் பேரரசர்களின் தடம் கண்டு பாதம்பதிக்கும் ஷைகு ஷுஐபு ஆலிம் அவர்கள் இன்று வரை ஆட்சியாளர்களிடம் தன்னுடைய தேவைக்கு அரசு படிக்கட்டுகளில் நடந்தது கிடையாது.

ஆக நமது கட்டுரை வாசகத்தின் இறுதிக் கருத்தாழம் என்னவென்றால் ஒரு வரலாற்றின் வாரிசு ஆண்டாண்டுக்காலம் ஆனாலும் தொடரத்தான் செய்யும் என்பதேயாம்.

தமது முன்னோர்கள் அறிவுக்கூடங்கள் பள்ளி வாசல்கள் ஞானாசிரமங்கள் காவியங்களை உருவாக்கி இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு உயிரூட்டியது போல், அந்த திசை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தவர்கள் தான் ஷைகு தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்கள்.

அவர்கள் மூலம் இஸ்லாமிய இலக்கிய பணி மேலும் சிறந்தோங்க வள்ளல் இரசூல் (ஸல்) அவர்களைக் கொண்டும், இறை நேசச்செல்வர்களைக் கொண்டும் வஸிலாத்தேடி இறைவனின் முன் சமர்ப்பிக்கிறேன்.

 

அரூஸ்ஸியா தாசன்

நன்றி :

முஸ்லிம் குரல்

15 ஆகஸ்ட் 1993

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *