பருவநிலை அகதிகள்

Vinkmag ad
பருவநிலை அகதிகள்
பேராசிரியர் கே. ராஜு

பருவநிலை மாற்றம் காரணமாக பூமி சூடேறுவதையும் அதன் காரணமாக உலகம் சந்திக்கும் பாதகமான விளைவுகளையும் பற்றி சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வருவது நமக்குத் தெரியும். பூமியின் வெப்பநிலை தொழிற்புரட்சி நடந்த காலத்தில் இருந்ததைவிட 1.5 டிகிரிக்கு மேல் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் சில நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. காரணம், அது அவர்களைப் பொறுத்த அளவில் வாழ்வா, சாவா என்ற பிரச்சனை. பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் உயரும்போது அந்த நாடுகளே நீரில் மூழ்கி உலகவரைபடத்திலிருந்து காணாமல் போய்விடக்கூடிய ஆபத்து அந்த நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் வேறு புகலிடம் தேடி அகதிகளாக இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். இயற்கைப் பேரிடர்களின் காரணமாக 2008க்கும் 2013க்கும் இடையில் ஒவ்வோர் ஆண்டும் 27 மில்லியன் மக்கள் புலம் பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது ஆசியக் கண்டம்தான். ஒப்பீட்டு அளவில் வாழ்க்கைத் தரம் இந்தியாவில் மேம்பட்டதாக இருப்பதால் ஆப்கானிஸ்தான், திபெத், நேபாளம், மியன்மார், சிரியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து பருவநிலை அகதிகள் இந்தியாவை நோக்கி வரக்கூடிய ஆபத்து இருக்கிறது. உணவு, உறைவிடம் தேடி நடக்கும் இந்த இடம் பெயர்தல் கடல்நீர் மட்டம் உயர்வு, வெள்ளம், புயல், நில நடுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பெருகிவரும் மக்கள் தொகையினால் திணறிக் கொண்டிருக்கும் நம் நாடு அகதிகள் வருகையினால் கூடுதல் சுமையைச் சமாளிக்க வேண்டிய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. முறையான பயண ஆவணங்கள் இன்றி பல லட்சம் மக்கள் ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். வங்கதேசத்திலிருந்து வரும் அகதிகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்திய-வங்கதேச எல்லையில் 2000 கிலோமீட்டர் நீள வேலியை இந்தியா அண்மையில்  எழுப்பியிருக்கிறது. 1980-க்கு முன்பு திபெத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறிய அகதிகளுக்கு இருந்த உரிமைகள் அதற்குப் பிறகு குடியேறும் திபெத்தியர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. புலம் பெயர்தல் என்றதும் பக்கத்து நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறுபவர்கள் மட்டுமே என்று நினைக்க வேண்டாம். இந்திய எல்லைக்குள்ளிருந்தே பருவநிலை மாற்றம் காரணமாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு புலம் பெயர்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா மாநிலங்களில் உள்ள சில கிராமங்களில் வீடுகளும் விவசாய நிலங்களும் நீரில் மூழ்கிவிட்டதால் அந்தக் கிராமங்கள் மக்கள் வசிக்கமுடியாதவையாக மாறிவிட்டன. அது மட்டுமல்ல, அடிக்கடி வரும் வெள்ளங்களால் மண் உவர்ப்பு நிலமாகி, விளைச்சலும் பாதிப்புக்குள்ளாகிவிடுகிறது. இதற்கு மாறாக, கடந்த மூன்று ஆண்டுகளாக வேறு சில மாநிலங்களை தொடர்ச்சியான வறட்சி வாட்டியெடுக்கிறது. வெள்ளம், வறட்சி, கடல்நீர்மட்டம் உயர்வு போன்ற காரணங்களால் இடம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. 2011 கணக்கெடுப்பின்படி உள்நாட்டில் இடம் பெயர்பவர்களே நம் நாட்டில் சுமார் 40 கோடி பேர்கள் (மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்) என்றால் பிரச்சனையின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ளலாம். தில்லி, மும்பய், கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கே மக்கள் இடம் பெயர்வதால் அந்த நகரங்கள் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ற கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்க முடியாமல் திணறுகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் அபாயகரமான வேகத்தில் அதிகரித்து வருவதை மக்களும் அரசுகளும் புரிந்து கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளில் முக்கியமானதாக விளங்கும் இந்தியா அகதிகளுக்காக நடத்தப்படும் மாநாடுகளில் கலந்து கொள்வதோடு அகதிகள் தொடர்பான சர்வதேச உடன்பாடுகளிலும் கையெழுத்திட வேண்டும். இது தொடர்பாக மாரகேஷில் 2016 நவம்பரில் நடக்க உள்ள  அடுத்த சிஓபி-22  (Conference of the Parties-22)  மாநாடு பருவநிலை அகதிகள் குறித்த முக்கியமான முடிவுகளை எடுக்க இருக்கிறது. இந்தியா தன் பங்களிப்பைச் செலுத்த வேண்டுமென்ற குரலை எழுப்புவோம்.
            (உதவிய கட்டுரை : 2016 ஜூன் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் ஆகன்ஷா சர்மா எழுதியது)

News

Read Previous

உடல் நாற்றத்தைக் குறைக்க சில வழிகள்

Read Next

முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

Leave a Reply

Your email address will not be published.