சித்தி ஜுனைதா பேகம்

Vinkmag ad

சித்தி ஜுனைதா பேகம்: கணவன் அவளுக்குத் தெய்வம் அல்ல

நன்றி : http://tamil.thehindu.com/general/literature/சித்தி-ஜுனைதா-பேகம்-கணவன்-அவளுக்குத்-தெய்வம்-அல்ல/article8862108.ece?widget-art=four-rel
கீரனூர் ஜாகிர்ராஜா

ஓவியம்: முத்து

மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் இப்படி எழுதியிருக்கிறார்: “ ‘காதலா கடமை’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையைப் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப்போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந் நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகிறது”.

அவரால் இப்படிப் பாராட்டப்படும் நாவலை எழுதியவர் சித்தி ஜுனைதா பேகம். இவர் 1917- ம் ஆண்டு நாகூரில் திரு தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். மூன்றாம் வகுப்புவரை மட்டுமே அவருக்குக் கல்வி அனுமதிக்கப்பட்டது. 12 வயதில் பெற்றோரால் மண வாழ்க்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். இது அன்றைய இஸ்லாம் சமூகத்து வழக்கம். ஏறக்குறைய அது ஒரு பால்ய விவாகம்தான்.

நான்கு ஆண்டுகளில் கணவர் இறந்தும்போக, அவ்வேதனையை மறக்கும் பொருட்டு எழுதத் தொடங்கியவர், 82-வயதுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்தார். 1930-களில் ஒரு பெண் தீவிரமான எழுத்துப் பணியை மேற்கொள்வதே ஆச்சரியத்துக்குரியது. அதிலும் அவர் இஸ்லாமியப் பெண் என்பதால் அவர் மீது இருந்திருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் குறித்து அனைவரும் ஊகித்துக்கொள்ளலாம்.

சித்தி என்றால் சிற்றன்னை என இங்கே பொருள் கொள்ள முடியாது. சித்தி, நேர்மையாளர் எனப் பொருள் தரும் ஓர் அரபுச் சொல். கணவரை இழந்த சூழலிலும், தனக்கு இளமையில் கிட்டாத உயர்கல்வியைத் தன் பெண்மக்களுக்குத் தந்துள்ளார் அவர். மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்தாலும் தன் வீட்டு முகப்பில் ‘சித்தி ஜுனைதா பேகம், பன்னூலாசிரியர்’ என்று பெயர்ப் பலகை மாட்டிக்கொள்ளக்கூடிய துணிச்சலும் தன்னம்பிக்கையும் அவருக்கு இருந்திருக்கிறது.

தொடக்கத்தில் சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதிவந்தவர் பிறகு எவ்விதத் தயக்கமின்றி நாவலும் எழுதிவிடுகிறார். ‘காதலா கடமையா’ என்னும் முதல் நாவல் 1938-ம் ஆண்டு உ.வே.சா. முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. அப்போது அதைப் படித்திருந்த புதுமைப்பித்தன் “முஸ்லிம் பெண்கள் எழுத முன்வருவதை நாம் வரவேற்கிறோம்” என்று அபிப்ராயப்பட்டுள்ளார்.

பெண் விடுதலைக் குரல்

முதன்முதலில் 1929-ல் ‘தாருல் இஸ்லாம்’ என்னும் இதழில் ஜுனைதாவின் எழுத்துக்களைப் படித்துவிட்டு ஊரே திரண்டு இவர் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்துத் திரும்பியதாம். ‘ஒரு நல்ல குடும்பத்துப் பெண் கதை எழுதி நாசமாய்ப் போகிறாளே…’ என்கிற தொனியில் அவர்கள் பேசினார்களாம். 1999-இல் ‘முஸ்லிம் முரசு’ இதழுக்கு அளித்த நேர்காணலில் இதை ஜுனைதாவே குறிப்பிட்டுள்ளார்.

‘எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ என்று ஜுனைதா தனது நாவலின் ஓரிடத்தில் குறிப்பிடுவதைக் கலகக் குரலாகவே அடையாளங்காண முடிகிறது. அவருடைய புனைகதைகளிலும், கட்டுரைகளிலும் அடிநாதமாக ஒலிப்பது பெண் விடுதலைக் கருத்துக்களே.

1955-ம் ஆண்டு ‘நூருல் இஸ்லாம்’ என்னும் இதழுக்கு எழுதிய கட்டுரையில், முஸ்லிம் பெண்கள் தங்கள் பெயருடன் கணவனின் பெயரை இணைத்துக்கொள்ளத் தேவையில்லை என்று கூறிய ஜுனைதா பேகம்,

“ஒரு முஸ்லிம் பெண் தன்னில்தானே ஒளி வீசுகின்றாள். அவள் பெயருக்கு அவளே உரிமை பெற்றவள். அவள் செல்வத்துக்கும் அவளே அதிகாரி. அவள் திருமணம் செய்துகொண்டதால் உரிமைகள் அனைத்தையும் இழந்துவிடவில்லை. அவளுக்குத் தனியாக ஆத்மா உண்டு. அவளுக்குத் தெய்வம் அவள் கணவனல்ல…” என்று எழுதியது ஆணாதிக்கவாதிகளுக்கு அதிர்ச்சியளித்தது.

மதம் கடந்த பார்வை

‘இஸ்லாமும் பெண்களும்’ என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள ஜுனைதா பேகத்தின் கட்டுரைகள் பலவும் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை. ‘இஸ்லாமும் பலதார மணமும்’, ‘பெண்கள் சினிமா பார்க்கலாமா’, ‘முஸ்லிம் பெண்களும் விவாக விலக்கும்’ போன்ற பல கட்டுரைகளில் அவர் மதச்சார்பற்ற தொனியில், பெண்களுக்குச் சாதகமான கருத்துகளை வலுவாக முன்வைக்கிறார்.

‘காதலா கடமையா’ நாவல் 80 பக்கங்கள். அதை 18 சிறு அத்தியாயங்களாகப் பிரித்து, தலைப்புகளிட்டு, தெளிவான மொழிநடையில் கதையாகக் கூறியிருக்கிறார். ‘சண்பக வல்லிதேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத்தோன்றல்’ அவருடைய குறுநாவல். ‘மகிழம்பூ’, ‘மலைநாட்டு மன்னன்’, ‘ஹலிமா அல்லது கற்பின் மாண்பு’, ‘பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை’, ‘நாகூர் ஆண்டவர் வாழ்க்கை வரலாறு’, ‘முஸ்லிம் பெருமக்கள் வரலாறு’ என்று அவர் எழுதிக்குவித்திருப்பவை ஏராளம்.

தீவிர வாசிப்பு, பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம், தேடல் ஆகிய அனைத்தையும் ஜுனைதாவின் எழுத்துக்களில் காணலாம். இசையை இஸ்லாம் புறக்கணிப்பதாகக் கருதப்படும் சூழல் இங்கு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் ஜுனைதா ‘சிவாஜி’ என்னும் சிறுபத்திரிகையில் ‘இசையின் இன்பம்’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை

“உலகமே இசையின் வழி இயங்குகின்றதெனக் கூறின் மிகையாகாது”என்று முடிகிறது.

மதத் தூய்மைவாதிகளுக்கு சித்தி ஜுனைதா பேகம் அப்போதே பேரெதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்

“சிரித்துக் களிப்பதற்கே சந்தர்ப்பமில்லாத ஏழைகட்கு இந்த (தர்கா) கந்தூரிக் கொண்டாட்டங்கூட இருக்கக் கூடா தென்று சொல்ல முடியுமா? இது ஒரு முஸ்லிம் விழாவாக இருப்பினும் திரளான இந்து சமூகத்தி னரும் இதில் கலந்து கொள்கின் றனரே…” என்பதாக அவருடைய குரல் ஒலிக்கிறது.

ஜுனைதா பேகம் எழுதத் தொடங்கிய காலம், தமிழ் நவீன எழுத்துக்கான தொடக்க காலமும்கூட. பாரதியும், பாரதியைத் தொடர்ந்து மணிக்கொடி மரபினரும் உற்சாகமாக இயங்கிய காலம். மணிக்கொடியிலும் மஆலி சாஹிப் என்றொரு இஸ்லாமிய எழுத்தாளர் எழுதியிருக்கிறார். இத்தகவலை அசோகமித்திரன் ‘நவீன விருட்சம்’ இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கிறார். மணிக்கொடியில் ஜுனைதா எழுதியிருந்தால் வேறொரு பரிணாமம் கண்டிருக்கக்கூடும். ஆனால் அது நிகழவில்லை.

ஜுனைதா பேகத்தைத் தொடர்ந்து இஸ்லாமியப் பெண்ணெழுத்தில் ஒரு நீண்ட பாரம்பரியம் உருவாவது தடுக்கப்பட்டிருப் பதாகவே நான் உணர்கிறேன். இஸ்லாமியப் பெண்கள் பலரும் எழுதினர்; எழுதிக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இஸ்லாமிய இதழ்களில் மட்டுமே அதுவும் குறிப்பிட்ட வரையறைகளுக்குட்பட்டே எழுத வைக்கப்படுகின்றனர். அவ்வகையில் எழுத்தாளர் சல்மாவின் வருகை முக்கியமானது. சல்மாவுடன் இணைந்து எழுத இன்று ஒருவர்கூட இல்லை. முஸ்லிம் பெண் எழுத்து என்பது ஆளற்ற களமாக வெறிச்சோடிக் கிடக்கிறது. இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் அனார், ஸர்மிளா செயித் போன்றவர்கள் ஈழத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில்தான் ஜுனைதா பேகத்தின் தொடர்ச்சியான இயக்கத்தை ஒரு சாதனை என மதிப்பிட முடிகிறது.

எல்லாப் பெண்களுக்குமே சித்தி ஜுனைதா பேகம் ஒரு அழகிய முன்மாதிரிதான்.

– கீரனூர் ஜாகிர்ராஜா, நாவலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர். தொடர்புக்கு: keeranur1@gmail.com

News

Read Previous

மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

Read Next

தன்னார்வலர்கள் பதிவு செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.