நன்மை தரும் கிருமிகள்

Vinkmag ad

அறிவியல் கதிர்

நன்மை தரும் கிருமிகள்
பேராசிரியர் கே. ராஜு

பாக்டீரியா என்றதுமே நம்மில் பலருக்கு அவை நோய்க் கிருமிகள், உடல்நலனுக்குத் தீங்கு விளைவிப்பவை என்ற கண்ணோட்டமே இருக்கிறது. ஆனால் நமக்குப் பயனுள்ள, உடல்நலனை மேம்படுத்தும் சிலவகைக் கிருமிகளும் உண்டு என்பதை நாம் அறிந்துகொள்வது நல்லது. நம்மிடம் நட்புடன் உள்ள அவ்வகைக் கிருமிகள் புரோபயாடிக்ஸ் (probiotics) என அழைக்கப்படுகின்றன. இந்த வார்த்தையை முதன்முதலாக 1953ஆம் ஆண்டில் ஜெர்மானிய உயிரியல் விஞ்ஞானி வெர்னர் கொல்லா (Werner Kollath) பயன்படுத்தினார். ஆன்டிபயாடிக்ஸ் என்ற வார்த்தைக்கு மாற்றாக புரோபயாடிக்ஸ் என்ற வார்த்தையை அவர் உருவாக்கினார். கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது ஆன்டிபயாடிக்ஸ். நன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உதவுபவை புரோபயாடிக்ஸ். போதுமான அளவில் நுண்ணுயிரிகள் ஒருவரது உடலில் சேர்க்கப்படும்போது அவை அவரது உடல்நலனுக்கு நன்மையைத் தருமானால் அவைதான் புரோபயாடிக்ஸ் என உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்திருக்கிறது.
நமது குடலில் 400 விதமான  உயிரினங்களிலிருந்து 100 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியன் என்பது மில்லியன் மில்லியன்) உயிரிகள் இருக்கின்றன! இவற்றில் சில உயிரிகள் நமக்கு நன்மை தருபவை. மற்றவை நோய்களைத் தருபவை. நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தி நமக்கு நன்மையைத் தரும் புரோபயாடிக்ஸ் உயிரிகள் குடலில் போதுமான அளவில் இருப்பது நமது உடல்நலனைப் பாதுகாக்கத் துணை செய்யும். வெண்ணைத் தயிர் (yoghurt), தயிர், மோர், லஸ்ஸி, புளிக்கவைக்கப்பட்ட சோயா பால், ஐஸ் கிரீம் போன்ற பொருட்களை உட்கொள்ளும்போது புரோபயாடிக்ஸ் உயிரிகள் நம் உடலில் சேருகின்றன. இந்தியாவில் உள்ள உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் பால் பண்ணைகளும் பல்வேறு புரோபயாடிக் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைக்குக் கொணர்ந்திருக்கின்றன. உடல்நலன், ஊட்டச் சத்து பற்றிய விழிப்புணர்வு உள்ள மக்களிடையே அவை வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
நோபல் பரிசு பெற்ற ரஷ்ய விஞ்ஞானி எலீ மெச்சினிகாப் (Elie Metchnikoff) பாரிசில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட்டில் பேராசிரியராக இருந்தார். 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நமது குடலில் உள்ள நுண்ணுயிரிகளை மாற்றியமைக்க முடியும்.. உணவில் குறிப்பிட்ட சிலவகை நுண்ணுயிரிகளைச் சேர்த்து உட்கொள்வதின் மூலம் தீங்கு விளைவிக்கும் உயிரிகளை குடலிலிருந்து அகற்றி நன்மை தரும் உயிரிகளை அங்கு உருவாக்க முடியும் எனக் கண்டுபிடித்தார். பல்கேரிய விவசாயிகள் நீண்ட காலம் உடல்நலத்துடன் வாழ்வதற்குக் காரணம் அவர்கள் நொதிக்கவைத்த பால் பொருட்கள், வெண்ணைய்த் தயிர் ஆகியவற்றை உட்கொள்வதால்தான் என வாழும் உதாரணங்களையும் அவர் சுட்டிக் காட்டினார். பாஸ்டியர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஹென்றி டிஸ்ஸியர் (Henry Tissier) என்ற மற்றொரு விஞ்ஞானி தாய்ப்பால் குடிக்கும் ஒரு குழந்தையின் உடலிலிருந்து பிஃபிடோபாக்டீரியா என்ற நுண்ணுயிரியைப் பிரித்தெடுத்தார். இந்த நுண்ணுயிரியைப் பயன்படுத்தி சிகிச்சையளித்தால் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கினைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் நிரூபித்தார். புரோபயாடிக்ஸ் தயாரிப்பில் லாக்டிக் அமில பாக்டீரியா, பிஃபிடோபாக்டீரியா ஆகிய இரு நுண்ணுயிரிகளும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் சிலவகை ஈஸ்ட்டுகளும் நீளநுண்ணுயிரிகளும் பயன்படுத்தப்படுகின்றன. முதன்முதலாக வர்த்தகரீதியில் தயாரிக்கப்பட்ட பால் பொருளான யாகுல்ட் என்ற வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் மற்றும் ஷிரோடா என்ற நுண்ணுயிர் கலவையை ஜப்பானிய விஞ்ஞானி மினோரு ஷிரோடா (Minoru Shirota) வர்த்தகரீதியில் தயாரித்தார். உடல்நலனை மேம்படுத்தும் ஊட்டச்சத்து பானமாக இது அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றது.
புரோபயாடிக்ஸ் உடல்நலனுக்குத்  தரும் நன்மைகள்
புரோபயாடிக்ஸ் பற்றி அறிந்துகொள்ள விலங்குகள் மீதும் மனிதர்கள் மீதும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. எலீ மெச்சினிகாப்பின் ஆய்வினைத் தொடர்ந்து 1930களில் மலச்சிக்கலின் மீது புரோபயாடிக்சின் விளைவுகள் பற்றி மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 1983-இல் உணவில் புரோபயாடிக் உயிரிகளைச் சேர்த்தால் பாலிலுள்ள சர்க்கரை மாவுச்சத்து செரிமானம் மேம்படுகிறது என  எஸ்.எச். கிம், எஸ்.ஈ. கில்லிலாண்ட் (S.H. Kim, S.E. Gilliland)ஆகிய இருவரும் கண்டறிந்தனர். மனித உடலில் சீரம் கொலெஸ்ட்ரால் அளவினை புரோபயாடிக்ஸ் உணவுகள் கட்டுப்படுத்தக் கூடியவை எனப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் அவை நோய்க்கிருமிகளை மட்டுமல்லாது நன்மை தரும் நுண்ணுயிரிகளையும் அழித்துவிடும். அதன் காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்கினைக் கட்டுப்படுத்த புரோபயாடிக்ஸ் சிகிச்சை பயன்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடல் புற்றுநோயைத் தடுக்கவும் புரோபயாடிக்ஸ் உதவுகிறது.
இந்தியச் சந்தையில் அமுல் போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் பல்வேறு புரோபயாடிக்ஸ் உணவு வகைகளை விற்பனைக்குக் கொணர்ந்திருக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களை வாங்குவோர் காலாவதி தேதியைக் கவனித்து வாங்க வேண்டும். குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாப்பதும் முக்கியம். அடுத்த முறை பால் பொருட்களை வாங்கும்போது சுவையான புரோபயாடிக்ஸ் வகைகளை வாங்கிச் சாப்பிட்டு உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்வோம்!
(உதவிய கட்டுரை : ஜூலை ட்ரீம் 2014 இதழில் டாக்டர் ப்ரீதி எச். தவே எழுதிய கட்டுரை)

News

Read Previous

வில்வப்பழம்

Read Next

மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published.