உலக இரத்த தான தினக் கவிதை

Vinkmag ad

ஜூன் – 14. உலக இரத்த தான தினக் கவிதை

நதிநீர் ஓட்டத்தால் நாடெலாம் செழித்திட
நாளத்தின் குருதியால் நன்னுடல் தழைத்திடும்!
அதிகாலை பயிற்சியால் ஆரோக்கியம் கண்டிட
அழற்சியிலா உடலே அன்றாடம் உழைத்திடும்!
விதியினை மாற்றியே வீழ்வதை தடுத்திட
வெள்ளையோடு சிவப்பணு வேரெனக் காத்திடும்!
நிதிபடைத்து நானிலத்தில் நிம்மதி காண்போரும்
நிச்சயமாய் குருதியால் நலவாழ்வு வந்திடும்!

உடல்முழுக்க பிராணத்தை உந்தும்நிலை செய்திட
உதவுகிற பெரும்பணியே ஓடுகின்ற ரத்தமே!
முடக்கிடும் கிருமிகளை முற்றிலும் அகற்றிட
முதன்மை சேவகனாய் முயன்றிடும் ரத்தமே!
திடமென இருதய தெளிவான ஓட்டத்தை
தினந்தோறும் தருவதும் தேகத்தில் ரத்தமே!
மடமை செய்கையாய் மாபெரும் தீமைகள்
மானுடர் செய்வதால் மாசாகும் ரத்தமே!

கொடுத்திட குறையாது குருதியே உடலிலே
கொடூர போதையை குடியாமல் இருந்திடு!
மிடுக்கென மேனியை மிளிர்த்திடும் குருதியை
மெய்த்தூய்மை செய்துநீ மேலாக வைத்திடு!
அடுத்தவர் தேவைக்கு ஆரோக்கிய ரத்தமதை
அன்பினைக் காட்டிட அறமென கொடுத்திடு!
கொடுத்திடும் தானத்தில் குருதியே சிறப்பென
குவலயம் வாழ்த்திடும் குதுகலம் கண்டிடு!

-ப.கண்ணன்சேகர், திமிரி.  பேச 9894976159.

News

Read Previous

மாபெரும் சகாப்தம் முகமது அலி

Read Next

குடிநீருடன் கலந்து வரும் சாக்கடை கழிவுநீர்

Leave a Reply

Your email address will not be published.