உலக கடல் தினக் கவிதை

Vinkmag ad

ஜூன் – 08. உலக கடல் தினக் கவிதை.

நீரின்றி அமையாது நித்தில வாழ்வெலாம்
நீலக்கடல் கருணையால் நித்தமே பொழிந்திடும்!
வாரிதி, வெண்டிரை, வளைநீர், தொண்டிரை,
வலயம் கடலுக்கு வண்ணப்பேராய் விளங்கிடும்!
பாரினில் வளமென பல்லுயிர் பெருகிட
படர்ந்திடும் முகிலாய் பருவமழை தந்திடும்!
மாரிவளம் கண்டு மகிழ்ந்திடும் உயிரெலாம்
மாசினை செய்திட மாகடல் பொங்கிடும்!

அலைகடல் தந்திடும் அத்தனை வளமும்
அகிலத்தில் அனைவரின் அடிப்படை உரிமை!
வலைவீசி வாழ்வோர் வடிக்கின்ற கண்ணீர்
வாடிக்கை யென்பது வலியோர் மடமை!
கொலைகார கூட்டம் கோடிட்டு கடலில்
குற்றம் சொல்லும் கொடுமையிலும் கொடுமை!
தலைபோகும் நிலையென தமிழனம் கண்டிட
தத்துவம் பேசினால் தாங்காது பொறுமை!

மானிடர் தவறால் மாசென கடல்வளம்
மாறாது ஒலிப்பது மரணத்தின் அலங்கோலம்!
கூனிடும் சூழலென கொட்டிடும் கழிவால்
குவியுது குப்பை கொலையென தினந்தோறும்!
மேனியில் ரணமாய் மேலுமே தொடர்ந்தால்
மழையினை பொழிந்திட மேகங்கள் தோன்றுமா!
ஏனிந்த சூழலென எல்லோரின் விழிப்பு
இல்லாமல் போயின் இந்நாடு தாங்குமா!

-ப.கண்ணன்சேகர், திமிரி. பேச : 9894976159.

News

Read Previous

பஃறுளியாறாய்….

Read Next

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் எம்.எல்.ஏ. அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published.