இதை விடவா அவமானப் படுத்த முடியும் வாக்களர்களை?

Vinkmag ad
இதை விடவா அவமானப் படுத்த முடியும் வாக்களர்களை?
எஸ் வி வேணுகோபாலன் 
தேர்தல் அறிக்கையை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, வாக்களிக்கும் நாள்  நெருங்கும் நேரத்தில் அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசி வெளியிட்டிருக்கிறது அஇஅதிமுக. வாது சூது தெரியாத மாது கண்ணா, இந்த மாது சொன்ன வார்த்தையை நீ கேளு கண்ணா, வஞ்சகர்கள் உலகம் இது மாது கண்ணா, அதில் என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா, தட்டெடுத்து வந்தபோது மாது கண்ணா அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இதுதான் கண்ணா…..என்று ‘எதிர்நீச்சல்’ போடப் பார்க்கிறார் ஜெயலலிதா.
கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு எல்லாம் காசு இருப்பவர்களுக்கே என மாற்றப்பட்டு விட்ட நிலையில் வாழ்வாதாரமும் பறிகொடுத்துவிட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கும் மாநிலத்து மக்களை இதைவிட கேவலப் படுத்த முடியுமா தெரியவில்லை.
ஒரு ரூபாய் மீதி சில்லறை தரவில்லை என்று பேருந்து நடத்துனரிடம் போடும் சண்டையை, பாமாயில் முடிந்து விட்டது என்னும் ரேஷன் கடைக்காரரிடம் எழுப்பும் கூச்சலை, அரை முழம் குறைந்துவிட்டது என்று பூக்காரியை ஏகவசனத்திற்கு இழுக்கும் இழுப்பை சாதாரண மக்கள் தன்னிடம் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற ஆணவம் தெறிக்கும் முகத்தோடு மக்களிடம் வாக்கு கேட்கும் அதிகாரத் தன்மையை ஜெயலலிதா போன்றவர்கள் எப்படி வளர்த்துக் கொள்கிறார்கள்? ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஒரு முகமும், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தால் சொந்த கோர முகமுமாக மாற்றிக் கொள்ள எங்கிருந்து இவர்களுக்கு துணிச்சல் பிறக்கிறது ?
ஆண்டுக் கணக்கில் ஆண்டையின் வயல்களிலும், வீட்டிலும் உழைத்துவிட்டு பொங்கல் அன்றைக்குப் புத்தாடையும், கொஞ்சம் காசுபணமும் கொடுத்தாலே ‘எசமான் நீங்க நல்லா இருக்கணும்’ என்று மண்ணில் விழுந்து கும்பிடும் நிலவுடைமை சமூகத்தின் மிச்ச சொச்சம் மரபணுக்களில் இருக்கக் கூடும் என்ற நினைப்பிருக்கலாம் போலிருக்கிறது.
யார் வந்தாலென்ன நமது நிலை மாறப் போவதில்லை, எல்லாம் நமது தலையெழுத்து என்ற காலகாலமான சிந்தனைப் போக்குகளின் வழிநடக்கும் மக்களை மிக இலகுவாக திசை திருப்பிப் போகலாம் என்ற கணக்கும் ஒருவேளை இருக்கக் கூடும்.
அம்மா குடிநீரைக் காட்டும் இவர்களது தேர்தல் பிரச்சாரப் படத்தில் இராட்சதக் குழாய்களில் கோகோ கோலா, பெப்சி நிறுவனங்கள் தண்ணீரை உறிஞ்சும் காட்சிகளையும் ஏன் காட்டுவதில்லை என்று ஊடகங்கள் எழுதுவதில்லை. அம்மா உணவகத்தில் எளிய தொகையில் அன்றாட வயிற்றுப்பாட்டை முடித்துக் கொள்ளும் திருப்தியான முகங்களைக் காட்டுபவர்கள், கிராமப்புற விவசாயி கொள்முதல் கிடைக்காமல் கடனை அடைக்க மாட்டாமல் கந்துவட்டி நிறுவனங்களிடம் படும் பாட்டில் மான அவமானத்திற்கு அஞ்சி பூச்சி மருந்துகளைத் தேடும் காட்சி ஏன் இடம்பெறுவதில்லை என்று விவாத மேடைகளில் ஒருங்கிணைப்பாளர்கள் யாரும் கேள்வி வைப்பதில்லை. அடிபட்டால் உடனே மருத்துவமனையில் சேர்ப்பதற்கு உதவியாக அலறி அடித்துக் கொண்டு வரும் 108 வாகனத்தைக் காட்டும் கேமராக்கள், பெருமழை வெள்ளத்தில் கேட்பாரின்றி மிதந்து சென்ற சடலங்களை ஏன் படம் பிடிக்கவில்லை என்று இப்போது நினைவூட்டி முதல்வரை நிறுத்திக் கேட்க ஒரு மேடை இல்லை.
காசை விட்டெறிந்து ஆட்களைக் கூட்டங்களுக்குத் திரட்ட முடிகிற அதிகாரப் படிநிலையில் நிற்பவர்களுக்கு கீழிறங்கி வந்து பதில் சொல்லி ஆட்சி நடத்தும் ஜனநாயகம் குமட்டலை ஏற்படுத்தும். விலையில்லாத அறிவிப்புகளில் மூழ்கி இருப்போர்க்கு எதிர்ப்பில்லாத அரசியல் மட்டுமே ஒரு கனவு. வேறு கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள், அது வீணாகப் போகும் வாக்கு என்று கை விரலைக் காட்டி மிரட்டும் குரலில் பேசவைப்பது அந்தக் கனவுதான். இரட்டை இலைக்குப் போடும் வாக்கு உங்களுக்கு நலத் திட்டங்கள் அளிக்கும் என்று ஆசை காட்டி மயக்க வைப்பதும் அந்தக் கனவுதான்.
மக்களுக்காக நான் என்று முழங்கும் மாதரசியால்,  எல் கே ஜி படிப்புக்கு இடம் கேட்டு முதல் நாள் நள்ளிரவே சென்று காத்திருக்கும் பெற்றோர்களின்  வரிசையை சுவரொட்டியில் போட்டுக் கேட்க முடியுமா வாக்கு? தங்கள் ஆட்சியில் மூடிக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளை, காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை, கல்வி மறுக்கப்படும் ஏழைப் பிள்ளைகளை வேட்பாளர் இடத்தில் நிற்கவைத்துக் கேட்கட்டுமே வாக்கு, முடியுமா? சிதைந்து கிடக்கும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை, சாதாரண வயிற்றுப்போக்கு காரணமாக பல்லாயிரக் கணக்கில் இழக்கும் உயிர்களை, மருந்து வாங்க இயலாமல் மரணத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் கால்களை வண்ண வண்ணப் படங்களாகத் தோரணம் கட்டி இறங்கட்டுமே வாக்கு சேகரிக்க வீதிகளில், சாத்தியமா?
கல்வியை, மருத்துவத்தை சாதாரண மக்கள் பெற முடியாது என்றாக்கிவிட்ட ஆட்சியில், சமச்சீர் கல்விக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடி ஒழித்துக் கட்டப் பார்த்த அதிகார பீடத்தில் நின்று கொண்டு நான் தான் சைக்கிள் தந்தேன், நான் தான் மடிக் கணினி தந்தேன், திரும்ப என்னை ஏற்றுக் கொண்டு ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்தால் இதைக் கொடுப்பேன், அதைக் கொடுப்பேன் என்று முழங்கும் வாய்களில் இருந்து எல்லோருக்கும் இலவசக் கல்வி, தாய்மொழியில் கற்பவருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, அரசுப் பணிகளில் காலி இடங்கள் நிரப்புதல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தல், சுற்றுப்புற சுகாதாரம் பராமரித்தல், நோய்த் தொற்றவைக்கும் கிருமிகளை அழித்தல் போன்ற நியாயமான வாக்குறுதிகள் வருமென எதிர்பார்க்க முடியுமா…
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார், வாயைத் திறந்து சும்மா வந்தே மாதரம் என்பார் மனத்தில் அதனைக் கொள்ளார் என்றானே மகாகவி, இப்படியான நடிப்பு ஜனநாயக அரசியல்வாதிகளுக்கு அதிரடி வைத்தியம் செய்யாமல், அதிர்ச்சி தோல்வி வழங்காமல் மக்கள் நலனை உண்மையாகக் காப்பாற்றுவது சாத்தியமாகாது.
மாதக் கணக்கில் தமிழகத்தை இருளில் அமிழ்த்தி வைத்திருந்து விட்டு, பிறகு தனியார் கொள்ளை நிறுவனங்களிடம் இருந்து யூனிட் ஒன்றுக்கு அநியாய விலைக்கு மின்சாரம் வாங்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர் எப்படி நூறு யூனிட் மின்சாரத்தை இலவசமாகத் தருவேன் என்று நாக்கூசாமல் பேச முடியும்?
பேருந்துக் கட்டணத்தை நட்டநடு இரவில் ஏற்றிக் கொள்ளை அடித்தவர்கள் எப்படி திடீரென்று கருணை பொங்கி இரு சக்கர வாகனம் வாங்கும் பெண்களுக்கு அதில் பாதி விலையைத் தங்கள் அரசு ஏற்கும் என்று ஆசை காட்ட முடியும்?
தமிழர்கள் பசியால் பட்டினியால் ஒரு பக்கம் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். மூடப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில் வேலையைத் தொலைத்த இளைஞர்களும், வேலையே கிடைக்காத இன்னொரு பெரிய பட்டாளமும் டாஸ்மாக் கடை வாசலில் தங்களுக்கு நீதி தேடிக் கொண்டிருக்கின்றனர். வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்த விவசாயக் குடும்பங்களும், சிறுதொழில் உடமையாளரும், பாரம்பரியத் தொழில் நசிவால் குமுறிக் கொண்டிருப்போரும் நம்பிக்கை வற்றி வெடிக்கக் காத்திருக்கின்றனர். பிள்ளைகளின் கல்விக்கும், பெற்றோர் மருத்துவத்திற்கும் சொத்துக்களை விற்கும் நடுத்தர வர்க்கம் கிரெடிட் அட்டைகளால் உறிஞ்சப்பட்டுக் கொண்டு வீழ்ந்து கிடக்கிறது.
பொய்த்துப் போன முந்தைய வாக்குறுதிகளின் குற்ற உணர்ச்சி குறுகுறுக்காத இதயத்தை வைத்திருப்பவர்கள் இரத்தத்தின் இரத்தத்தை மீண்டும் பலி வாங்கவே அழைக்கின்றனர். வாக்காளர்களை இதைவிடவும் கேவலமாக இவர்களால் அவமானப்படுத்த முடியாது. ஆனால், விழிப்புணர்வு பெற்ற வாக்காளர்கள் இவர்களுக்குச் சேர வேண்டிய பதிலை தங்களது வாக்குரிமையை முறையாகப் பயன்படுத்தி வழங்க முடியும். தங்கள் வாழ்க்கையை மாற்றுப் பாதையில் மீட்டெடுக்கவும் முடியும். மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்போடு இந்தத் தேர்தலில் இறங்கி இருக்கும் இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக, தலித்திய கூட்டணி சக்திகள் அதைத் தான் கோருகின்றனர்.

News

Read Previous

ஸலாத்தின் சிறப்பு

Read Next

காவடிச் சிந்து

Leave a Reply

Your email address will not be published.