ஸலாத்தின் சிறப்பு

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
26. ஸலாத்தின் சிறப்பு
‘ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்ற நபிகளாரின் பொன்மொழி, ஸலாத்தின் சிறப்பை-மேன்மையைப் போற்றும் மொழியாகும்.
மனிதர்களுக்கு இடையே நேசத்தை-பிரியத்தை வளர்க்கும் ஆயுதம் ‘ஸலாம்’.
ஸலாம் சொல்வதில் ஒரு ஒழுங்கு முறை உள்ளது. வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவர்களுக்கும், சிறு கூட்டத்தினர் பெருங்கூட்டத்தினருக்கும், சிறுவர்கள் பெரியவர்களுக்கும் ஸலாம் கூற வேண்டும். இது ஒழுக்கத்தையும் பணிவையும் எடுத்துக்காட்டும் வகையில் கூறப்பட்ட ஒரு மரபாகும். இதற்கு மாறாக மற்றவர்கள் முதலில் ஸலாம் கூறினாலும் அதில் தவறேதும் இல்லை.
வாகனத்தில் செல்பவர், நடப்பவருக்கு ஸலாம் கூறும்போது, நடப்பவருக்கு அவரைப்பற்றி உண்டான அச்சம், பயம் நீங்கி விடும். வாகனத்தில் உள்ளவர் ஸலாம் கூறும்போது, நடப்பவரை விட நாம்தான் உயர்ந்தவர் என்ற கர்வம் ஏற்படாது. மாறாகப் பணிவு ஏற்படும். எண்ணிக்கையில் அதிகமானவர்களின் உரிமை அதிகமானதால், எண்ணிக்கையில் குறைவானவர்கள் அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும்.
ஒருவரையொருவர் சந்திக்கும்போது ‘ஸலாம்’ கூறுவதைப் போன்றே, கரம் பற்றி வாழ்த்து தெரிவிப்பதும் நபி வழியாகும். இதை ‘முஸாபஹா’ என்பர். ஒருவரின் கை மற்றவரின் கையுடன் சேர்வதை இது குறிக்கும்.
இதில் இரு கைகளையும் பற்றி வாழ்த்து தெரிவிப்பதே சிறந்த முறையாகும். ‘நபித் தோழர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது கரம் பற்றி ‘முஸாபஹா’ செய்வார்கள். பயணத்தில் இருந்து வந்தால் கட்டித் தழுவிக் கொள்வார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஒரு வீட்டுக்குச் சென்றவுடன் உள்ளே நுழைவதற்கு முன்பு முதலில் ஸலாம் கூற வேண்டும். பிறகு உள்ளே செல்ல அனுமதி பெற வேண்டும்.
‘நம்பிக்கையாளர்களே! உங்களுடையது அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக)’ (திருக்குர்ஆன்-24: 27) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
ஒரு வீட்டுக்குச் சென்று அனுமதி கோரி கதவைத் தட்டும்போது உள்ளே இருப்பவர், ‘வந்திருப்பது யார்?’ என்று வினவினால், ‘நான்தான்’ என்று கூறக் கூடாது. தான் இன்னார் என்பதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பெயர், ஊர் போன்றவற்றைத் தெளிவாகக் கூற வேண்டும்.
முஸ்லிம்கள் நாள்தோறும் நடைமுறைப்படுத்துகின்ற ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்துச் சொல், ஆழமான அர்த்தங்களைக் கொண்டது.
இந்த வாழ்த்துச் சொல்லை எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் சொல்லலாம்.
Òஉங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகÓ என்ற இந்தச் சொல்லை மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். சோகமாக இருப்பவர்களிடமும் சொல்லலாம்.
திருமண வீடுகளிலும் சொல்லலாம்; துக்க வீடுகளிலும் மொழியலாம். ஏனெனில் எல்லோருக்குமே சாந்தியும், சமாதானமும் தேவையானது. நிம்மதியும், அமைதியும் அனைவருக்கும் அவசியமானது.
இந்த வாழ்த்தைக் காலையிலும் கூறலாம்; மாலையிலும் கூறலாம்; இரவிலும் கூறலாம்.
ஆங்கில நடைமுறையான ‘குட் மார்னிங்’ (நல்ல காலைப் பொழுது) என்பதை மாலையிலோ இரவிலோ சொல்ல முடியாது. சோகமான இடங்களில் சொல்லக் கூடாது.
சோகமாக இருக்கும் ஒருவரிடம், ‘நல்ல காலைப் பொழுது’ என்று சொல்வது நல்லதல்ல.
மேலும், பெரியவர்கள் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் பெரியவர்களுக்கும் ‘ஸலாம்’ கூறலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் ‘ஸலாம்’ சொல்லலாம். தலைவர்கள் தொண்டர்களுக்கும், தொண்டர்கள் தலைவர்களுக்கும் கூறலாம். பணக்காரர்கள் ஏழைகளுக்கும், ஏழைகள் பணக்காரர்களுக்கும் ‘ஸலாம்’ சொல்லலாம்.
வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்காரம் போன்ற வாழ்த்துச் சொற்கள், வணங்குகிறேன் என்ற பொருளில் வழங்கப்படுகின்றன. இதோடு ஒப்பிடுகையில் இஸ்லாமியர்களின் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்துச் சொல் ஒப்பற்றது. அனைவரின் கவுரவத்தையும், மரியாதையையும் பேணுகின்ற வகையில் அமைந்துள்ளது.
‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக; இன்னும் இறைவனின் அருளும் அவனது நிரந்தரமான அபிவிருத்தியும் உண்டாகட்டும்’ என்று ஒருவருக்காக மற்றொருவர் வாழ்த்துவதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும் போன்ற அடிப்படையில் அமைந்திருக்கிற இந்த வாழ்த்து இஸ்லாத்தின் தனிச்சிறப்பாகும்.
இதில் இன்னொரு மகத்தான மகத்துவமும் உள்ளது. பிற மதங்களில் ஏழைகள், பணக்காரர்களுக்கும், தொழிலாளர்கள், தொழில் அதிபர்களுக்கும் வாழ்த்து கூறுகின்ற நடைமுறை உள்ளது. ஆனால் முஸ்லிம்களுக் கிடையே இதில் நேர்மாறான நிலை காணப்படுகிறது. கோடீஸ்வரர்கள்கூட, சாதாரணமானவர்களைக் கண்டதும் ‘ஸலாம்’ சொல்ல முந்திக் கொள்வதைக் காணலாம்.
‘முஸ்லிம்களுக்கிடையே ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள்’ என்று நபிகளார் சொல்லி இருப்பதே இதற்குக் காரணமாகும்.
‘முதலில் ஸலாம் கூறுபவரே இறைவனுக்கு வழிபட்டு அவனை நெருங்குவதற்கு மக்களில் மிகவும் தகுதியானவர்’ என்பது நபிகளாரின் கூற்று.

News

Read Previous

இலவசங்களின் அரசியல்

Read Next

இதை விடவா அவமானப் படுத்த முடியும் வாக்களர்களை?

One Comment

Leave a Reply

Your email address will not be published.