இலவசங்களின் அரசியல்

Vinkmag ad

12.6.16 தமிழ் இந்துவில் வெளியாகியுள்ள எனது கட்டுரை இலவசங்களின்
அரசியல் ..  உங்களின் வாசிப்பிற்கும் கருத்துகளுக்கும்…

இலவசங்களின் அரசியல்

— மு.ஆனந்தன் –

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக அதைத் தருவோம், இதைத் தருவோம் என்று
பெரிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகள் அளிப்பது சரியா, தவறா
என்றும், அதைத் தடுக்க முடியுமா, முடியாதா என்றும் பலவிதமான கருத்துகள்
மக்களிடையே விவாதிக்கப்படுகின்றன. ஏற்கெனவே, இது தொடர்பாக சென்னை
வழக்கறிஞர் சுப்ரமணியம் பாலாஜி நீதிமன்றத்தை அணுகினார்.

அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகள் தவறானவை.
எனவே, தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் அறிவிப்பதைத் தடை செய்யுமாறு
நீதிமன்றத்தில் அவர் வேண்டினார்.

வழிகாட்டிய நீதிமன்றம்

இந்த வழக்கில் 2013 ஜூலை 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் “தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உறுதி
அளிக்கப்படும் எந்த வகையான இலவசங்களும் மக்களின் மேல் தனிப்பட்ட முறையில்
அழுத்தத்தைக் கொடுக்கும். நேர்மையான, சுதந்திரமான தேர்தலின்
அடித்தளத்தையே, அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் அசைக்கின்றன.
அரசியல் கட்சிகளுக்கிடையே சமநிலையான போட்டி நடக்கிற ஒரு சூழலை தேர்தல்
ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, தேர்தல் நடத்தை விதிகளின்
அடிப்படையில், அரசியல் கட்சிகளுக்கு உரிய முறையிலான அறிவுறுத்தல்களை
வழங்க வேண்டும். ஆனால், மக்கள் நலத் திட்டங்களுக்கு இது பொருந்தாது.
இதற்காகத் தனியாகச் சட்டமியற்றப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது” என்று
நீதிமன்றம் இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு வழிகாட்டியது.

இதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் 12.08.2013-ல் அரசியல் கட்சிகளுடன்
ஆலோசித்தது.“அரசியல் சாசனத்துக்கு உட்பட்டும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு
உட்பட்டும் தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும். வாக்காளர்களின்
வாக்களிக்கும் உரிமையைக் கவரும் வகையிலான அறிவிப்புகளைத் தவிர்க்க
வேண்டும். சமமான போட்டிக்கான சூழலைப் பாதிக்கும் சலுகைகள் அறிவிப்பதைத்
தவிர்க்க வேண்டும். நடைமுறையில் சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்க
வேண்டும்” என்று புதிய கட்டுப்பாடுகளை 24.04. 2015-ல் தேர்தல் ஆணையம்
அரசியல் கட்சிகளுக்கு விதித்துள்ளது.

சிதறிய நம்பிக்கைகள்

`

நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இத்தகைய முடிவுகளை எடுத்த பிறகு,
தமிழகத்தில் நடக்கும் முதல் தேர்தல் இது. ஆரம்பத்தில் சில கட்சிகள்
தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டபோது, இலவசங்கள் தரும் போக்கிலிருந்து இந்த
முறை தமிழகம் தப்பித்துக்கொள்ளும் அறிகுறிகள் தோன்றின.

ஆனால், திமுகவும் அதிமுகவும் போட்டிக்குப் போட்டியாக அதிரடி இலவசங்களை
அறிவித்து, அந்த நம்பிக்கைகளின் சிறகுகளைச் சிதறடித்துவிட்டன. தொடர்ந்து
தமிழக அரசியலில் இலவசங்களின் அரசியல் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

தமிழக அரசின் 2015 -16 நிதிநிலை அறிக்கையில் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன்
உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் ரூ.3,811 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஒரு
வருடத்துக்கு ரூ.3,800 கோடி என்றால், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.40,000 கோடி
வரை இலவசங்களுக்காக தமிழக அரசு செலவிட்டுள்ளது. இந்த ரூ.40,000 கோடியும்
கல்வி, சுகாதாரம், மருத்துவம், அடிப்படைத் தேவைகள், உள் கட்டமைப்பு,
மக்கள் வளர்ச்சி, வாழ்வாதாரம், தொழில், அடிப்படைப் பொருளாதாரத்
திட்டங்களுக்காகச் செலவிடப் பட்டிருந்தால் மாநில வளர்ச்சி பெரும்
வேகத்தில் முன்னேறியிருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நிதி இல்லையா?

தமிழகத்தின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான
ரூபாய் கடன் சுமையில் தத்தளிக்கின்றன. சில திவாலாகும் நிலையில் உள்ளன.
இலவசங்களுக்குச் செலவிட்ட தொகையின் ஒரு பகுதியை இந்த பொதுத்துறைகளுக்கு
அளித்திருந்தால் பால் விலை, மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் போன்றவை
உயராமல் தடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

அரசுப் பேருந்து விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்
தீர்ப்புக்குப் பிறகும் பல ஆண்டுகளாக நஷ்டஈடு பெற இயலாமல் உள்ளனர்.
அதேபோல் ஓய்வுபெற்ற பிறகும் ஊழியர்கள் கிராஜுவிட்டி பெற இயலாமல் உள்ளனர்.
இதற்கெல்லாம் ஒரே காரணமாக ‘நிதி இல்லை’ என்று அரசின் சார்பில்
சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் வழங்கப்படுகிற இலவசங்கள் மக்களின்
வாழ்வில் எத்தகைய மாற்றங்களை உருவாக்கும்?

எல்லோருக்கும் இலவச கட்டாயக் கல்வி, உத்தரவாதமான வேலை, சுற்றுப்புறச்
சுகாதாரம், ஆரோக்கிய நலவாழ்வு வயதான குடிமக்களுக்குப் பராமரிப்பு
ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டிய தமிழக அரசு,
எத்தனை காலத்துக்கு இலவசங்களை முன்னுரிமையாகக் கொண்டு தனது நிர்வாகத்தை
நடத்தும்?

இந்தத் தேர்தலிலும் இலவசங்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்குமானால்
கல்வி, சுகாதாரம், சமூக வளர்ச்சியில் செய்ய வேண்டிய முதலீடுகள் தேக்க
நிலைக்குச் சென்றுவிடும்.

இலவசங்கள் பெரும் செலவு

அதிமுக அரசு 2011-ல் பதவி ஏற்றுச் சமர்ப்பித்த 2011-12 முதல் நிதிநிலை
அறிக்கையில், நிதி அமைச்சர் புதிய அரசு ரூ.1,01,349 கோடி மொத்த கடனுடன்
தனது நிர்வாகத்தைத் தொடங்க வேண்டியுள்ளதாகக் கூறினார். தற்போது 2015-16
நிதிநிலை அறிக்கையில் அந்தக் கடன் ரூ. 2,11,483கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் கடன் ரூ.1 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. கடந்தகால
இலவசங்களைவிடத் தற்போது இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ள இலவசங்கள் பல
மடங்கு செலவு ஏற்படுத்தக்கூடியவை. மீண்டும் இத்தகைய இலவசங்களை வழங்கினால்
இந்தக் கடன் மேலும் மேலும் அதிகரிக்கும். இது தமிழகத்தில் ஒவ்வொரு தனி
நபர் மீதான கடனே.

இந்நிலையில், மீண்டும் இலவசங்களுக்காக ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல்
செலவிடுவதாக உறுதியளிப்பது, தமிழக மக்களை உண்மையில் காப்பாற்றுவதற்கா,
இல்லை மீளாத் துயரில் தள்ளுவதற்கா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க
வேண்டும்.

– மு.ஆனந்தன், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: anandhan.adv@gmail.com – 94430 49987

நன்றி – தமிழ் இந்து – 12.05.2016
Tamil Hindu Link –
http://tamil.thehindu.com/

News

Read Previous

அவர் இரங்க வேண்டுவமே !

Read Next

ஸலாத்தின் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published.