தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்

Vinkmag ad

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்

​பேராசிரியர் அ.ராமசாமி

பண்பாடு என்பதை இரட்டை எதிர்வுகளின் மோதலாகக் கணித்துப்  பேசும் ஆய்வாளர்கள் தங்களின் சார்புக் கேற்ப தரவுகளைச் சேகரித்து வாதிட்டு நிறுவ முயலும் காலத்தை இன்னும் நாம் கடந்து விடவில்லை . நிகழ்காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் எதிர்வாக இருப்பது மைய நீரோட்டப் பண்பாடு x விளிம்புநிலைப் பண்பாடு என்று எதிர்வு எனச் சொல்லலாம்.

உலகம் , தேசம், மாநிலம், மாவட்டம், வட்டம், ஊராட்சி, கிராமம் என நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்படும் நிலப்பரப்பிற்குள் வாழும் ஒட்டு மொத்தக் கூட்டத்திற்குமான ஒற்றைப் பண்பாடு என்று எதனையும் சொல்லி விட முடியாது என்பதால் அத்தகைய வாதங்கள் அர்த்தமற்றவை என்றோ, தேவையற்றவை என்றோ ஒதுக்கி விட முடியாது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் மேலைத்தேயங்களின் பண்பாடு (Accidental ) கீழைத் தேயங்களின்  பண்பாடு (Oriental ) என்ற எதிர்வை உருவாக்கி விவாதித்ததை அறிவின் வெளிப்பாடு என உலகப் பல்கலைக்கழகங்கள் கருதின. உலகம் தழுவிய ஆய்வுகள் அல்லது நூல்கள் எனத் தங்களின் பணியைக் கருதியவர்கள் அதனை முதன்மைப் படுத்தினார்கள். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தச் சொல்லாடல் விதேசிப் பண்பாடு x சுதேசிப் பண்பாடு என்ற விவாதமாக மாற்றப்பட்டு அரசியல் தளத் திற்குள் போராட்டக்கருவியாக ஆக்கப்பட்ட போது ஆட்சி அதிகாரத்திற்கு அருகில் இருந்தவர்களால் ஆரியப் பண்பாடு xதிராவிடப் பண்பாடு என்ற எதிர்வும், அதனைத் தொடர்ந்து செவ்வியல் பண்பாடு x  நாட்டார் பண்பாடு என்ற எதிர்வும் உருவாக்கப்பட்டது.

உருவாக்கப்படும் எல்லாக் கருத்துக்களும் கருத்தியல்களும் அரசியல் கருத்துக்களாகவும் கருத்தியல்களாகவும் ஆகிவிடும் வாய்ப்புக்கள் உண்டு. ஏனென்றால் அரசியல் என்பது முரண்களின் – மோதல்களின் களன். அதிலும் ஜனநாயக அரசியல் என்பது வெவ்வேறு வகையான மோதல்களின் விளையாட்டு மைதானம். அதில் ஒரு கூட்டத்தின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பும் ஓர் அரசியல் அமைப்பு தன்னால் உருவாக்கப் பட்ட கூட்டத்திற்கான நலனை முன்னிறுத்திக் கருத்துக்களையும் கருத்தியல்களையும் உருவாக்கித் தான் ஆக வேண்டும். அப்படி உருவாக்குவது இயல்பான ஒன்றல்ல;நிர்ப்பந்தத்தின் விளைவு. ஜனநாயக அரசியலில் தங்களுக்கான அதிகாரத்தையும் பங்கையும் உறுதி செய்யும் நோக்கோடு தலித் என்னும் சொல் கருத்தாக மாறி, கருத்தியலாக வடிவம் பெற்றது. பின்னர் தனித்துவமான பண்பாடாக முன்னிறுத்தப் பட்டு, அதிகாரத்தின் பங்காளியாக மாறியிருக்கிறது. இந்தப் பயணத்தைச் சரியான அர்த்தத்தில் உணர முடிந்ததென்றால் பிறவகைப் பயணத்தின் வழித்தடங்களையும் நாம் சரியாகக் கணிக்க முடியும்.

இழிசினர், தாழ்ந்தோர் எனக் கூறி ஒதுக்கப்பட்ட கூட்டம், இன்று தலித் என்ற சொல்லால் குறிக்கும்படி உறுதி செய்துள்ளது. மாறுபாடுகள் இருந்த போதும் கிடைக்கும் பலனை உத்தேசித்து அப்படிக் குறிப்பதைப் பல இயக்கங்களும் ஏற்றுக் கொண்டு விட்டன. ஊடகங்களும் அவ்வாறே குறிக்கின்றன. தலித் என்ற சொல் குறிக்கும் கூட்டத்தினரைச் சுட்ட அட்டவணைச் சாதியினர் என்ற சொல் இருந்தது. அந்தச் சொல் அரசதி காரத்தால் வழங்கப்பட்ட சொல். அதுவும் அந்நிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சொல். அதிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகவும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சில சொற்கள் – ஹரிஜன்,ஆதிதிராவிடன் போன்றன- கண்டறியப்பட்டுப் புழக்கத்தில் வந்தன. அவையெல்லாம் பெற்றுத் தராத அதிகார பலத்தை தலித் என்ற சொல் பெற்றுத் தந்துள்ள வரலாறு இந்திய தேசத்தின் அண்மைக்கால வரலாறு. இந்த வரலாற்றில் ஊடகங்களில் பங்கு முக்கியமானது என்பதை ஆய்வாளர்களுக்கு விரித்து விளக்க வேண்டியதில்லை. இந்தக் கருத்தரங்கின் மைய விவாதமான பழங்குடிப் பண்பாடு என்பது தன்னைப் பெரிய மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொள்ளாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இன்றளவும் அரசதிகாரச் சொல்லாடல்களுக்குள் நிற்கும் பழங்குடியினர் பற்றிய பதிவுகளை ஊடகங்கள் எவ்வாறு தந்துள்ளன எனக் காணலாம்.

அச்சு ஊடகங்களும  மைய நீரோட்டமும்.

பொதுவாக ஊடகங்கள் அரசதிகாரத்தின் சார்பானவை என்ற போதிலும், அரசதிகாரத்திற்கு எதிரான நிலை பாட்டை எடுக்கவும், ஆலோசனை சொல்லவும் உரிமை உள்ளது என நம்பும் ஓர் அமைப்பு. இன்று தொலைக் காட்சி ஊடகங்களாகவும் திரைப்பட ஊடகங்களாகவும் மாறி நின்ற போதிலும், அச்சு ஊடகங்கள் கொண்டிருந்த அந்த நெறிகளையும் நோக்கங்களையும் ஊடகங்கள் முற்றிலுமாகக் கைவிட்டு விட்டன என்று சொல்வதற்கில்லை. தகவல் சொல்லுதல், அறிவூட்டல், களிப்பூட்டுதல் என்ற அடிப்படை நோக்கங்களின் வழியே ஊடகங்கள் ஜனநாயக அரசியலுக்கு ஏற்பத் தேச மக்களைத் தகவமைக்கும் பணியைச் செய்கின்றன. ஜனநாயக அரசியல் என்ற பேரடையாளத்தை நோக்கிப் பெருங்கதைகளை உருவாக்கும் ஊடகங்கள் பழங்குடியினரையும் பழங்குடிப் பண்பாட்டையும் அந்தக் கோணத்திலிருந்தே பார்க்கின்றன.

வாழிடம் காரணமாகச் சமவெளிகளிலிருந்து விலகி மலைப் பிரதேசங்களில் வாழும் பழங்குடியினர் மைய நீரோட்டப் பண்பாட்டுடன் ஒட்டாத உறவுடைய பண்பாடு கொண்டவர்கள் என்ற பொதுப்புத்தி சார்ந்த பார்வையை உருவாக்கித் தந்ததில் ஆய்வாளர்களுக்கு எவ்வளவு பங்கு உண்டு அதே அளவு பங்கு ஊடக வியலாளர்களுக்கும் உண்டு.

தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் அடியன், அரநாடன், இருளர், எரவல்லன்,ஊராளி , கம்மாரா, கணியன், காட்டு நாய்க்கன், காடர், காணிக்காரன், குடிய மேலக்குடி, கொச்சவேலன், கொண்டகாப்பு, கொண்டாரெட்டி,கோமகன்,கோத்தர், தோடர், குறிச்சன், குறும்பர், குறும்பன், சோழகர், மலை அரையன்,மலை பண்டாரம், மலை வேடன், மலைக்குறவன், மலசர், மஹாமலசர்,மலையாளி, மலையக் கண்டி, மன்னன், முதுவர், முத்துவன், பழையன்,பளியன், பள்ளியர், பனியன் என 36 பழங்குடிகள் வாழ்வதாக அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அவர்களுள் தோடர், கோத்தர், குறும்பர்,பளியர், இருளர், காட்டுநாய்க்கன் போன்ற குழுக்கள் பரவலாகப் பல இடங்களில் வாழ்பவர்கள் என்றும்,  மலையாளி, காடர், மலைசர், மலைமலசர், காணிக்காரர்கள், குறிச்சன், மலைவேடன், ஊராளி, குருமன் போன்ற பழங்குடிகள் ஒரே இடத்தில் வசிக்கக் கூடிய குடிகள் என்றும் அப்புள்ளி விவரங்கள் தரும் தகவல்கள் எல்லாம் ஊடகங்களுக்கு முக்கியமானவை அல்ல.

அச்சு ஊடகங்களும் சரி, செல்லுலாய்டு ஊடகங்களான தொலைக்காட்சி, திரைப்படங்களும் சரி பழங்குடி யினரைப் பற்றிய தகவல்களைச் சுற்றுலாவின் பகுதியாகவே வாசகர்களுக்கும் பார்வையாளர்களுக்குத் தருகின்றன. சமவெளி மனிதர்கள் பார்க்க வேண்டிய மலைப்பிரதேசத்துப் பசுமையோடு சேர்த்து பழங்குடி யினரின் படங்களும் இடம் பெறுவதைப் பல பயணச்சிறப்பிதழ்களில் நீங்கள் வாசித்திருக்கலாம். சமவெளி மனிதர்களின்

​ ​

ஆடைகள், அணிகலன்கள், உணவுப்பழக்கங்கள், மருத்துவ முறைகள், வழிபாட்டு முறைகள் ஆகியனவற்றைக் கொண்ட சிறு கூட்டத்தை அதிசயப் பொருள்களாகவும், பதிவு செய்து வைத்துக் கொள்ளும் காட்சிப் பொருள்களுள் ஒன்றாகவும் காட்டியுள்ள அச்சு ஊடகங்கள் தான் அவர்களை மைய நீரோட்டத்திலிருந்து விலகியவர்கள் என்ற கருத்தை உருவாக்கியதில் முன்னோடிப் பங்கை வகித்தன. விலகி நின்றவர்கள் என்று காட்டியதின் விளைவாக ஆதரிக்கப் பட வேண்டியவர்கள்; சலுகைகள் வழங்கப்பட வேண்டியவர்கள், நாகரிகப்படுத்தப் பட வேண்டியவர்கள் என்ற தொடர் கருத்துக்களும் உருவாக்கப்பட்டன.

காட்சி ஊடகங்களும் பழங்குடியினரும்

அச்சு ஊடகங்கள் உருவாக்கிய இந்தக் கருத்தும் கூட ஐரோப்பிய மையச் சிந்தனையின் வெளிப்பாடு தான். நேஷனல் ஜியாக்ரபி, அனிமல் பிளானட், டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சி ஊடகங்கள் இன்றும் இதே கருத்தோட்டத்துடன் பழங்குடியினரையும் பழங்குடிப் பண்பாட்டையும் அவற்றின் பார்வை யாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பியர்களைத் தவிர அனைவரும் பண்பாடற்றவர்கள் என்று கருதி,அவர்களின் மேல் தங்கள் பண்பாட்டைத் திணித்து விட வேண்டும் என்று கருதிய காலனிய மனோபாவம் பின் காலனியக் காலத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

​​

அதே நேரத்¢தில் மேற்கத்திய பல்கலைக்கழகங்களின்¢ சமூக அறிவியல் துறைகளில் விவாதச் சொல்லாடல் களுள் ஒன்றாக சொந்தப்பண்பாடு x அந்நியப் பண்பாடு என்ற சொல்லாடலும் இருக்கிறதும் கவனிக்க வேண்டிய ஒன்று. தேசம் என்ற எல்லைக்குள் இவ்வெதிர்களைப் பற்றிப் பேசும் அறிவாளிகள் இவ்விரண்டின் கலப்பு பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் கூட விவாதிக்கின்றனர். அந்த விவாதத்தின் முறையியலைப் பின்பற்றி பழங்குடியினர் பண்பாடு பற்றிய ஆய்வுகள் தொடரப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன். தமிழகப் பரப்பிற்குள் இருக்கும் ஒரு சிறு பழங்குடியினரின் வாழ்க்கை முறைகளை அவர்களின் சொந்தப் பண்பாடாகவும், சமவெளி மனிதர்களின் வாழ்க்கை முறைகளை அந்நியப் பண்பாடாகவும் நிறுத்திப் பேசும் பொழுதுதான் அந்தப் பழங்குடியினரின் அடையாளங்களும், அவற்றின் இருப்புக்கான நியாயங்களும் புரிபடும். பழங்குடிப் பண்பாட்டை ஆய்வு செய்யும் ஒரு ஆய்வாளர் தன்னை அதன் உள்ளிருப்போராகக் (Insider) கருத வில்லையென்றால் அக்குடியின் அடையாளங்கள் மாற்றம் பெற்று பெருங்கூட்டத்திற்குள் கலக்க வேண்டிய பரிந்துரைகளையே ஆய்வுகள் முன் வைக்கும். அப்படிப்பட்டப் பல ஆய்வுகள் தமிழகப் பல்கலைக்கழகங் களில் நிகழ்ந்துள்ளன சிலவற்றை நான் வாசிக்கவும் செய்திருக்கிறேன். நீங்களும் வாசித்திருக்கக்க் கூடும்.

தமிழ்ச் சினிமாவின் நீட்சியாகவும், அங்கே வாய்ப்புக்கிடைக்காத நிலையில் தொலைக்காட்சி அலைவரிசை களில் வேலை செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாகக் கருதும் தமிழ் அலைவரிசை ஊடகக்காரர்கள்,தங்களுடைய ஊடகப் பார்வையையே கூட அந்தக் கோணத்தில் தான் வெளிப்படுத்துகின்றனர். அதனால் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு எனத் தனியாகப் பழங்குடியினர் பற்றிய பதிவுகளில் அக்கறைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. திரைப்படங்கள் அவர்களை விநோதமான பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகள், பொருத்தமற்ற சிந்தனைகள் கொண்டவர்களாகச் சித்திரிப்பது போலவே அலை வரிசைகளும் சித்திரித்துக் காட்டுகின்றன.

தமிழ்த்திரைப்படங்களில் முழுமையாகப் பழங்குடிப் பிரதேசப் பின்னணியுடன் வந்த படங்கள் எனச் சிலவற்றைச் சொல்ல முடியும். மலைச்சாரல், சோலைக்கிளி, நிலாப்பெண்ணே போன்ற பெயர்களில் வந்த அத்திரைப்படங்கள் எதிலும் பழங்குடியினர் ஒட்டுமொத்த வாழ்வையோ, பண்பாட்டுக் கூறுகளையோ காண முடியாது.  இம்மூன்று படங்களிலும் இருக்கும் ஓர் ஒற்றுமை எதுவென்றால் அப்படங்களின் நாயகிகள் பழங்குடிப் பெண்களாக இருந்தது தான். நகரத்தில் இருந்து வரும் நாயகனின் மனத்தைக் கவர்ந்த உடல் அழகு கொண்ட பெண்ணாக இருந்த அவளைக் கதாநாயகன் காதலித்து அக்காதலை நிறைவேற்றப் படாத பாடுகளைச் சந்திப்பதாகக் கதை பின்னப்பட்டிருந்தன. அந்தக் காதலை நிறைவேற்ற பழங்குடியினரின் பண்பாட்டுக் கூறுகளான அகமணமுறை தடையாக இருப்பதாகக் காட்டிய இயக்குநர்கள், காதல் தோல்விப் படம் அல்லது வெற்றிப் படங்களைத் தந்தனர். மலைச்சாரலும் நிலாப்பெண்ணேவும் காதல் தோல்விப் படங்கள்¢. சோலைக்கிளி காதல் வெற்றிப் படம்.

Êகுஷ்பு நடித்து வெளிவந்த சுயம்வரம் வேறுவகையான ஒரு மலையினப் பெண்ணின் வாழ்க்கையைக் காட்டியது. கொடியவர்களிடம் சிக்கிய நாயகியை மீட்டு வாழ்வு கொடுக்கும் நாயகனின் தியாகமாகக் காட்டப்படும் அந்தப் படம் ஏமாந்த ஒரு மலையினப் பெண்ணாக நாயகியைக் காட்டியது. இதற்கு மாறாக நாயகனைப் பழங்குடியினத்தவனாகக் காட்டி அவனது எஜமான விசுவாசத்தையும் முரட்டுத்தனத்தையும் ஸ்ரீகாந்த் என்ற நடிகர் நடித்த வர்ணஜாலம் என்ற படம் காட்டியுள்ளது.

மந்தைத் தனத்தைத் தனது போக்காகக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட உலகம் அவ்வப்போது  சில நாட்டார் மற்றும் மலையின மக்களின் நேசத்திற்குரியவர்களாக இருந்தவர்களைப் பற்றியும் படங்களை எடுத்துள்ளது. அந்த மனிதர்கள் அரசியல் சட்டம் மற்றும் பொது ஒழுங்குக்கு எதிரானவர்களாக இருந்த போதும் அவர்களின் சாகசங்களுக்காகத் திரைப்பட நாயகர்களாக ஆனதுண்டு. அப்படி நாயகனாகக் காட்டப் பட்ட அண்மைக்கால மனிதன் வீரப்பன். அதற்கு முன்னால் சீவலப்பேரி பாண்டி, மலையூர் மம்மட்டியான் போன்றவர்களும் பழங்குடி மனிதர்களின் பின்னணியில் காட்டப்பட்டனர். பல நேரங்களில் இந்த நாயகர் களின் உதவியால் வாழும்படி நேர்ந்த மலையின மக்கள் அவர்களைச் சட்டத்திற்குப் புறம்பாகக் காத்ததாகவும், அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களாகவும் காட்டப்பட்டனர். பொது ஒழுங்கு என்பதைப் பழங்குடியினர் அறிந்தே மீறியவர்களாகவும், அறியாமல் மீறுகிறவர்களாகவும் சித்தரித்து அதர்மம், கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் வந்து வெற்றி பெற்றன. இப்படங்களில் காட்டப்பட்ட பண்பாட்டுக் கூறுகள்,அடையாளங்கள் போன்றவற்றைப் பழங்குடியினப் பண்பாடு எனப் பேசுவதைவிட நிலவுடைச் சமூக அடையாளங்கள் எனப் பேசுவதே சரியாக இருக்கும்.

மொத்தப் பின்னணியாக இல்லாமல் படத்தின் சில பகுதிகளை மலைப்பிரதேச வெளியாகக் காட்டிய படங்களும் உண்டு. பாதை தவறியோ, விரும்பியோ மலைப்பிரதேசங்களுக்குள் சென்று விடும் நாயகனும்,நாயகியும் அப்பகுதி மக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் பங்கேற்பதோடு அவர்களின் குல தெய்வக் கோயிலில் தங்கள் காதலுக்குச் சாட்சியாகத் திருமணம் செய்துகொள்வதாகவும், மலையின மக்களின் ஆசியையும் வாழ்த்துக்களையும் பெறுவதாகப் பல படங்கள் வந்துள்ளன. சிவாஜிகணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் காலத்திலிருந்தே இந்த அம்சம் ஓர் திரைப்பட உத்தியாகவே பின்பற்றப் பட்டு வருகிறது.  எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த ஒளிவிளக்கு, இதய வீணை போன்ற படங்களில் அவரது பிம்ப உருவாக்கத்திற்கு உறுதுணையாக எழுதப்பட்ட பாடல்வரிகளைப் பாடி ஆடும் பழங்குடியினர் நடனங்கள் இடம் பெற்றன. சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன் போன்ற படங்களில் குடும்பம் ஏற்காத காதலை மலையின மக்களின் சாட்சியோடு கதாநாயகன் ஏற்றுக் கொள்வதான பாடல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய காட்சிகள் பின்னர் வந்த கமல்ஹாசன்[ நீயா] , ரஜினிகாந்த் [ஜானி] கார்த்திக், அஜித்,விஜய் எனப் பல நாயக நடிகர்களின் படங்களிலும் இடம் பெற்றுள்ளன.

பாடல்காட்சிகளில் பழங்குடியினரைக் காட்டியதை விடவும் எதிர்மறைக் கூறுகளுடன் நகைச்சுவைக் காட்சிகளில் பழங்குடியினரைப் பற்றிய பதிவுகள் உள்ளன. நாகரிகமான மொழி , உடை , உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் என்பதான கருத்தின் அடிப்படையில் பல நகைச்சுவை நடிகர்கள் காட்சிகளை அமைத்துள்ளனர். குறிப்பாக செந்தில், கவுண்டமணி, வடிவேலு போன்ற கறுப்புநிற காமெடி நடிகர்களைக் கொண்டு அமைக்கப்படும் நகைச்சுவைக் காட்சிகளைப் பலரும் பார்த்திருக்கக்கூடும். சரத் குமார் நடித்த வெற்றிப் படமான சூரியனில் இடம் பெற்ற ஒரு நகைச்சுவைக் காட்சியில் . பழங்குடிப் பண்பாட்டின் ஒரு கூறான தீமிதித்தல் என்பது மாற்றுச் சொல் மூலம் கேலிப்பொருளாக்கப் பட்டதைப் பலர் பார்த்திருக்கக் கூடும்.  பூக்குழி இறங்குதலுக்கு முக்கிய விருந்தினராகச் செல்லும் கவுண்டமணி, பூக்குழி என்ற சொல்லை நேரடிப்  பொருளில் அர்த்தப்படுத்திக் கொள்வதும், அங்கே பூக்களுக்குப் பதிலாக தீக்கங்குகள் இருப்பதும் வேடிக்கை நிகழ்ச்சியாக ஆக்கப்பட்டிருக்கும். இது போன்று பழங்குடிப் பண்பாட்டுக் கூறுகளான வைத்திய முறைகள், குறி சொல்லுதல், வழிபாட்டு முறைகள், பெண்களுக்குரிய பழங்குடிச் சடங்குகள் போன்றன அங்கதத் தொனியுடன் வியாபாரப் பொருளாகத் தமிழ் சினிமாவில் ஆக்கப்பட்டுள்ளன.

அவர்களது மொழி, நடையுடை, பாவனைகளைத் தாண்டி அவர்களை ஏமாற்றித் திரிபவர்கள் எனக் காட்டிய சினிமாவும் உண்டு. ராஜவம்சத்து இளவல் எனச் சொல்லிக் கொண்டு போலீஸ் வாகன ஓட்டியாக இருக்கும் வடிவேலுவையும், ஜமீந்தார் வீட்டுப் பெண் எனச் சொல்லிக் கொண்டு போலீஸ்காரியாக இருக்கும் கோவை சரளாவையும் வைத்து உருவாக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளைப் படம் முழுக்க அமைத்துள்ளார் ஒரு இயக்குநர். மகளிர்க்காக என்ற படத்தில் காட்டப்படும் காட்சிகள் மொத்தமாகப் பழங்குடியினத்தினர் மீதான எதிர்மறை நிலைப்பாட்டைக் கொண்டது.

காத்திரமான ஊடகப் பதிவுகள்

எதிர்மறையான இந்தப் போக்கிலிருந்து விலகி அவர்களின் வாழ்க்கை சுரண்டப்படுகிறது; அவர்களிடம் விழிப்புணர்வு உண்டாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து நீண்டகாலத்திற்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது. நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் இயக்கத்தில் சுகாசினி மையக் கதாபாத்திரத் தைத் தாங்கி நடித்த அந்தப் படத்தின் பெயர் ஒரு இந்தியக் கனவு¢. சமவெளியில் இருக்கும் முதலாளி களாலும், அரசியல்வாதிகளாலும் சுரண்டப்படுவதைத் தனது பத்திரிகையில் எழுதும் பொருட்டு அவர்களைச் சந்திக்கச் சென்ற பத்திரிகையாளராக சுகாசினி ஏற்ற அந்தப் பாத்திரம், பத்திரிகைப் பணியை விட்டு விட்டு அவர்களின் நியாயங்களுக்காகப் போராடும் வேலைக்குள் நுழைகிறது. ஆனால் பெரிய அளவு வெற்றி கிட்ட வில்லை என்றாலும், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிந்தது என்பதாகப் படம் நிறைவுறும்.

பாதிக்கப்படும் – சுரண்டப்படும் மக்களை ஒன்று திரட்டிப் போராடும் வர்க்கப் போராட்டக் கதைதான் என்றாலும், கதைக்களன் மலையின மக்கள் வாழ்வு என்பதாக அமைக்கப்பட்டிருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் கோமல் எழுதி நாடகமாக நடிக்கப்பட்டுப் படமாக ஆக்கப்பட்ட அப்பதிவு செல்வராஜின் தேநீர், ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன், கு.சின்னப்ப பாரதியின் சங்கம் போன்ற நாவல்களுடன் வைத்துப் பழங்குடியினப் பதிவாகக் கருதத் தக்க ஒன்று. இந்தப் பதிவுகளோடு சேர்த்துப் பேசிய வேண்டிய நாடகம் ஒன்றும் உள்ளது. கவிஞர் இன்குலாப் எழுதிய குறிஞ்சிப் பாட்டு நாடகத்தின் காலம் சங்ககாலப் பேரரசு , சிற்றரசுகளின் மோதல் பின்னணியில் இருந்தாலும் எழுப்பும் விவாதங்கள் அனைத்தும் பழங்குடியினரின் பொருளாதாரம், பண்பாட்டு அடையாளம், போன்றவற் றிற்கான மீட்பையே விவாதப் பொருளாக ஆக்கியிருந்தது. பாரியின் பறம்பு மலையைப் பாதுகாக்கப் போராடும் வரலாற்றுப் பின்னணியில் சூழலியப் பிரச்சினைகளை எழுப்பிய குறிஞ்சிப் பாட்டு பேரடையாளம் x சிற்றடையாளம் என்ற சொல்லாடல் ளுக்குள் நுழைந்து பழங்குடிப் பண்பாட்டின் மேன்மைகளைப் பேசியது.

மாறி வரும் உலகச் சூழலில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை வேட்டையாடும் பன்னாட்டுக் கம்பெனிகள், அவர்களை வரவேற்கும் பேரரசுகள், அவற்றைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் நடுத்தர வர்க்க மனோபாவம் என்ற தளங்களில் நுழையும் தன்மையால் நிகழ்கால நாடகமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது. இன்குலாபபின் ஔவை நாடகம் கூட நிகழ்த்தப் பட்ட விதத்தில் நிகழ்காலத் தன்மையுடன் , குறிப்பாகப் பெண்ணிய வெளிக்குள் நுழைந்தது. அந்நாடகத்தை இயக்கிய மங்கையே குறிஞ்சிப் பாட்டு நாடகத்தைப் பழங்குடிப் பண்பாட்டைச் சிதைக்கும் புறப் பண்பாடுகளுக்கெதிரான போராக நாடக நிகழ்வுகளை ஆக்கிக் காட்டியிருந்தார். நாடகம் நிகழ்த்தப் பட்ட விதத்தில் பல குறைபாடுகள் இருந்த போதும் பழங்குடியினர் பண்பாட்டை ஒரு அகத்தாரின் பார்வையில் பேசிய வகையில் அந்நாடகம் குறிப்பிடத்தக்க நாடகம் என்றே சொல்ல வேண்டும்.​

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Visit THF pages and blogs

http://www.tamilheritage.org/– Tamil Heritage Foundation

http://www.heritagewiki.org/– மரபு விக்கி

http://suba-in-news.blogspot.com/ – தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்

http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!

http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!

http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!

http://ksuba.blogspot.com – Suba’s Musings

http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!

http://rareartcollections.blogspot.com/ – அருங்கலைப் படைப்புக்கள்

 

http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்

http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்

http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்

http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்

http://thfreferencelibrary.blogspot.com – தமிழ் மரபு நூலகம்

http://mymintamil.blogspot.com – மின்தமிழ் மேடை

http://thf-villagedeities.blogspot.de/ – கிராம தேவதைகள்

http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி

News

Read Previous

முதுகுளத்தூர் தொகுதியில் 14 மனுக்கள் நிராகரிப்பு

Read Next

இஸ்லாத்தின் பார்வையில்… திருக்குர்ஆனும் இலக்கியமும்

Leave a Reply

Your email address will not be published.