பார்வையிழப்பு, யானைக்கால் நோய்கள்

Vinkmag ad

அறிவியல் கதிர்

பார்வையிழப்பு, யானைக்கால் நோய்கள்
பேராசிரியர் கே. ராஜு

ஆற்றுப்படுகை பார்வையிழப்பு (river blindness), யானைக்கால் நோய் ஆகிய இரு தொற்று நோய்களும் மலேரியாவைப் போன்றே பரவலான துயரத்தையும் இயலாமையையும் உருவாக்கவல்லவை. இந்த இரு நோய்களும் ஹெல்மின்த்கள் என்ற ஒட்டுண்ணிகளால் பரப்பப்படுபவை. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை இவ்விரு நோய்களும் பாதிப்படையச் செய்திருக்கின்றன என்றால் அவற்றின் வீச்சை நம்மால் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக அங்கோலா, காங்கோ, எத்தியோப்பியா, கென்யா போன்ற சகாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகள் (sub-Saharan African countries), தெற்காசியா, மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் இவ்விரு நோய்களும் பரவியிருக்கின்றன. நீர் வேகமாக ஓடும் ஆறுகளிலும் ஓடைகளிலும் பல்கிப் பெருகும் ஒரு வகை கருப்பு ஈக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது ஆற்றுப்படுகை பார்வையிழப்பு தொற்றுநோய் பீடிக்கிறது. இது விழிப்படலத்தில் கடுமையான அழற்சியை ஏற்படுத்துவதால் பின்னர் நிரந்தரப் பார்வையிழப்புக்கு இட்டுச் சென்றுவிடுகிறது.
மிகமிக மெல்லிய நூலைப் போன்ற புழுக்கள் நிணநீர் அமைப்பை (lymphatic system) தொற்றுவதால் யானைக்கால் நோய் ஏற்படுகிறது. நோய் பீடித்த ஒருவரைக் கடிக்கும் கொசுக்கள் மூலம் இது பிறருக்குப் பரவுகிறது. யானைக்கால் நோய் வலியையும் உடல் தோற்றத்திற்கு கடும் பாதிப்பையும் தரக் கூடியது. யானைக்கால் நோய் உள்ளவர்களின் கால்கள் பெரிதாக வீங்கிவிடுவதைப் பார்த்திருப்பீர்கள். உலகில் சுமார் 12 கோடி மக்கள் இந்த நோயால் தாக்குண்டவர்கள் என்றும் 73 நாடுகளில் உள்ள 140 கோடி பேர் இந்த நோய் தாக்கும் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது ஒரு கணக்கெடுப்பு. 1974ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள கிடாசாட்டோ நிறுவனத்தைச் சேர்ந்த சடோஷி ஓமுரா என்ற நுண்ணுயிரியல் வல்லுநர் ஸ்ட்ரெப்டோமைசெஸ் என்ற மண் பாக்டீரியா வகைகளைப் பிரித்தெடுத்தார். இந்த நுண்ணுயிரிகளைக் கொண்டு ஸ்ட்ரெப்டோமைசின் என்ற மருந்து உட்பட பல ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைத் தயாரிக்க முடியும். இந்த பாக்டீரியா வகைகளை சோதனைச் சாலையில் ஓமுரா செயற்கை முறையில் வளர்த்தார். பல்லாயிரக்கணக்கான வளர்ப்புகளிலிருந்து 50 வகைகளைத் தேர்ந்தெடுத்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுக்கெதிராக அவற்றைப் பயன்படுத்த முடியுமா என ஆராய விரும்பினார். அமெரிக்காவில் எம்டிஆர்எல் சோதனைச்சாலையில் பணிபுரிந்து வரும் ஒட்டுண்ணி உயிரியல் வல்லுநர் வில்லியம் காம்ப்பெல் என்பவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்டீரியா வளர்ப்புகளை அனுப்பிவைத்தார். வளர்ப்பு மிருகங்களிலும் பண்ணை மிருகங்களிலும் இருந்த ஒட்டுண்ணிகளுக்கெதிராக ஓமுரா அனுப்பியிருந்த வகைகளில் ஒன்று மிகச் சிறப்பாகச் செயல்படுவதை காம்ப்பெல் குழுவினர் கண்டுபிடித்தனர். அந்த உயிரிப்பொருளைச் சுத்தப்படுத்தி அதற்கு அவெர்மெக்டின் எனப் பெயரிட்டனர். அவெர்மெக்டினை வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி இவர்மெக்டின் என்ற புதிய மருந்தினை காம்ப்பெல் குழுவினர் உருவாக்கினர். ஆற்றுப்படுகை பார்வையிழப்பு, யானைக்கால் ஆகிய இரு தொற்றுநோய்க் கிருமிகளை அழித்தொழிப்பதில் இவர்மெக்டின் மிகச் சிறப்பாகச் செயல்படுவதை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  இவர்மெக்டினை ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தடவை எடுத்துக் கொண்டாலே இவ்விரு தொற்றுநோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்று சொன்னால் அம்மருந்தின் வீரியம் எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆர்டிமிசினின் என்ற மலேரியா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த பீகிங் மருத்துவக் கழக மருந்தியல் வல்லுநர் யோயோ டு-வுக்கு 2015ஆம் ஆண்டு நோபல் பரிசுத் தொகையில் சரி பாதி வழங்கப்பட்டது என சென்ற வாரக் கட்டுரையில் பார்த்தோம். ஆற்றுப்படுகை பார்வையிழப்பு, யானைக்கால் நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடித்ததற்காக  வில்லியம் காம்ப்பெல், சடோஷி ஓமுரா ஆகிய இருவருக்கும் மீதித் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது.
அவெர்மெக்டின், ஆர்டிமிசினின் ஆகிய இரு மருந்துகளின் கண்டுபிடிப்பு தொற்று நோய்களுக்கெதிரான சிகிச்சையை எளிதாக்கியிருப்பது மனித குலத்திற்கு பெருமகிழ்ச்சியளிக்கும் செய்தி என்பதில் சந்தேகம் இல்லை.
(உதவிய கட்டுரை : பிப்ரவரி 2016 ட்ரீம் 2047 இதழில் பிமன் பாசு எழுதிய கட்டுரை)

News

Read Previous

முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியல்

Read Next

வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published.