மே தினக் கவிதை

Vinkmag ad

மே தினக் கவிதை

வேர்வையின் துளியது விழுகின்ற மண்ணெல்லாம்
வெற்றியின் தேவதை வசிக்கின்ற தலமாகும்!
போர்த்திட்ட பசுமையாய் பூத்திடும் பூமியில்
பொதுமையின் சித்தாந்தம் பொங்கிட நலமாகும்!
கார்முகில் உழைப்பினால் கடும்மழை பொழிவாக
கருத்தோடு உழைத்திடு காண்பது வளமாகும்!
ஏர்முனை பிடித்திடும் ஏழ்மையின் தோழனும்
இவ்வுலக அச்சாணி இயக்கத்தின் பலமாகும்!

நாள்தோறும் உழைப்பினால் நலிவுற்ற தொழிலாளி
நலமுடன் வாழ்ந்திட நடத்தினர் போராட்டம்
தோள்தட்டி துவங்கிய தோழர்கள் கோரிக்கை
தொடர்ந்திட உலகெலாம் துளிர்த்தன ஆர்ப்பாட்டம்!
கேள்விகள் கேட்டிட கிடைத்தது வெற்றியே
கேடில்லா வாழ்வாலே கண்டனர் நீரோட்டம்!
நாள்தோறும் எட்டுமணி நலமுடன் பணியாற்றி
நாட்டுயர்வை கொண்டது தொழிலாளர் தேரோட்டம்!

செந்நிற குருதியே செழுமையின் அடையாளம்
ஜெகமெலாம் செழிக்கட்டும் சிரித்தாடும் கொடியோடு!
சிந்தனை மின்னல்கள் சிறகென அசைந்திட
சந்தன  வாசமாய் சரித்திர நடைபோடு!
உந்திடும் செய்கையே உழைப்பென நின்றாட
உன்னாலே உருவாகும் உயர்வாக நம்நாடு!
முந்தைய காலத்து முழுமையின் உழைப்பாலே
முன்னேற்றம் கண்டிட மேதினம் கொண்டாடு!

-ப.கண்ணன்சேகர், திமிரி
9894976159

News

Read Previous

லியாக்கத் அலி ஆசிரியரின் மூத்த சகோதரர் வஃபாத்து

Read Next

கணினி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

Leave a Reply

Your email address will not be published.