மலேரியாவுக்கெதிரான போர்

Vinkmag ad

அறிவியல் கதிர்
மலேரியாவுக்கெதிரான போர்
பேராசிரியர் கே. ராஜு
தொற்றுநோயைப் பரப்பும் உயிரிகள் (ஒட்டுண்ணிகள்) பிறிதொரு உயிரியில் தங்கி அதன் சத்தை உட்கொண்டு பல்கிப் பெருகும் தன்மை உடையவை. எளிதில் தீராத நோய்களையும் உயிருக்கு உலை வைக்கும் நோய்களையும் இந்த ஒட்டுண்ணிகள் உருவாக்கக்கூடியவை. இந்த ஒட்டுண்ணிகளில் புரோட்டோசோவா, ஹெல்மின்த்கள், ஈகோபாரசைட்கள் ஆகிய மூன்று முக்கியமான வகைகள் உண்டு. உலகின் ஏழை எளிய மக்களையே அதிகம் பாதிக்கும் இந்த ஒட்டுண்ணிகள் மனிதகுலத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாடாய்ப்படுத்தி வருகின்றன. மலேரியா, ஆற்றுப்படுகை பார்வையிழப்பு (river blindness), யானைக்கால் போன்ற தொற்றுநோய்கள் உலகின் ஏழை நாடுகளில் உள்ள மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்குப் பெரும் தடைக்கற்களாக இருக்கின்றன. பல ஒட்டுண்ணிகள் மனிதர்களை மட்டுமல்ல, வளர்ப்புப் பிராணிகளையும் கால்நடைகளையும் கூட தாக்கி எளிய மனிதர்களின் சுமையை அதிகரிக்கின்றன.
தொற்றுநோய்களைப் பரப்பும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் புதுமையான சிகிச்சைமுறையைக் கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு 2015ஆம் ஆண்டு உடற்கூறியல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆர்டிமிசினின் என்ற மலேரியா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த பீகிங் மருத்துவக் கழக மருந்தியல் வல்லுநர் யோயோ டு-வுக்கு பரிசுத் தொகையில் சரி பாதி வழங்கப்பட்டது. மலேரியா கொசுக்களால் பரப்பப்படும் நோய். இந்த நோயைத் தரும் ஒட்டுண்ணி புரோட்டோசோவாக்கள் முதலில் காய்ச்சலையும் சில நேரங்களில் மூளைக் காய்ச்சலையும் மரணத்தையுமே கூட தருவிப்பவை. உலக சுகாதார நிறுவனத்தின் மலேரியா பற்றிய 2014ஆம் ஆண்டு அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் 3.4 பில்லியன் மக்கள் மலேரியா நோய் பீடிக்கும் ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டது. 2013ஆம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 198 மில்லியன் மக்கள் மலேரியாவினால் பீடிக்கப்பட்டனர் என்றும் 584,000 பேர்களை அது மரணத்திற்கு இட்டுச் சென்றது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. இதில் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்பட்டது ஆப்பிரிக்காவில். மரணங்களிலும் 90 சதம் அங்குதான். அதிலும் பிரதானமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டனர்.
மலேரியா கொடுமையான நோய் என்பதால் அதிலிருந்து விடுபடுவதற்கான ஆராய்ச்சிகளும் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இந்தியாவில் பணிபுரிந்து வந்த ரொனால்ட் ராஸ் என்ற பிரிட்டிஷ் மருத்துவர் இந்த நோய் கொசுக்களால் பரவக்கூடியது என்று கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1902ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்களுடைய ரத்தத்தின் சிவப்பணுக்களில் ஒட்டுண்ணிகள் இருப்பதைக் கண்டுபிடித்தற்காக அல்ஜீரிய மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் லாவெரென் என்ற மருத்துவருக்கு 1907ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொயினா மருந்து ரத்தத்திலிருந்து ஒட்டுண்ணிகளை அழிக்கவல்லது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். கொசுக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் டி.டி.டி. (DDT)-வைக் கண்டுபிடித்த ஸ்விட்சர்லாந்து வேதியியலாளர் பால் ஹெர்மனுக்கு 1949ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. டி.டி.டி.-யும் மலேரியாவுக்கெதிரான மருந்து குளூரோக்வினும் பல நாடுகளில் மலேரியாவைக் கட்டுப்படுத்த பேருதவியாக இருந்தன. ஆனால் சில பத்தாண்டுகளிலேயே இந்த மருந்துகளைத் தாக்குப் பிடித்து எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள கொசுக்கள் பழகிவிட்டன. எனவே 1960களில் மீண்டும் மலேரியா நோயினால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. புதிய மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் விளைவாகத் தற்போது அறிமுகமாயிருக்கும் மருந்துதான் ஆர்டிமிசினின்.  இந்த மருந்து Artemisia annua என்ற தாவரத்திலிருந்து பிழிந்தெடுக்கப்படுகிறது. 1972ஆம் ஆண்டில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது.        
                   (நன்றி : 2016 பிப்ரவரி ட்ரீம் 2047 இதழில் பிமன் பாசு எழுதிய கட்டுரை)

News

Read Previous

வஃபாத்து அறிவிப்பு

Read Next

அயிரை அப்துல் காதர் மனைவி வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.