ஏப்ரல் -21, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்

Vinkmag ad

ஏப்ரல் -21, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்

புதுவையின் குயிலோசை புவியெலாம் ஒலித்திட
புரட்சிக்கவி வண்ணத்தில் பொலிவென வந்தது!
மதுமதி கலையென மனங்களும் ரசித்திட
மலர்ந்திட்ட கவிதையோ மயக்கத்தை தந்தது!
எதுகையும் மோனையும் இலக்கிய தமிழினில்
எண்ணற்ற கவிதைகள் எண்ணத்தில் நின்றது!
பதுமையின் பாவலர் பாடிய விடுதலை
பாய்ந்திடும் அம்பென பழமையை வென்றது!

பாரதியின் தாசனே பைந்தமிழின் நேசனே
புதியதோர் உலகுசெய்ய புறப்பட்ட தமிழனே!
பேராதிக்க வெறியினை பெயர்த்தெடுத்த எழுத்தாணி
பொழிந்திட்ட காவியங்கள் புரட்சிகர அமிழ்தமே!
வேரினில் பழுத்தபலா விதவையர் எனச்சொன்ன
வாழ்வியல் கவிதைகள் வைரத்தின் மகுடமே!
பாரினில் படிக்காத பாவையர் களர்நிலமாய்
பாட்டாலே சாடியே படைதிட்டார் புதுத்தடமே!

தமிழுக்கு அமுதென தரணிக்கு உணர்த்திட்ட
தனித்துவ பாடலே தமிழின மந்திரம்!
உமிழ்ந்திடும் மொழியெலாம் உனக்கது பெருமையா
உணர்ந்திட தமிழனை உசுப்பிய நெஞ்சுரம்!
திமிங்கல மொழியினால் தெள்தமிழ் மங்குமோ
தெளிந்திட தந்திட்டான் தனித்தமிழ் நல்வரம்!
அமிழாத அவன்புகழ் அகிலத்தில் நிலைக்குமே
அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்!

-ப.கண்ணன்சேகர், திமிரி.
செல் – 9894976159

News

Read Previous

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Read Next

அமீரகத்தில் இந்திய பிராபர்டீ விற்பனை

Leave a Reply

Your email address will not be published.