நிறைய மரங்கள்நட்டு!

Vinkmag ad

நிறைய மரங்கள்நட்டு!

 

மரங்களைக் காக்க வேண்டும் தம்பி

மழைதனைக் கொடுத்து உதவும் நம்பு

வெய்யில்தனைக் குறைத்து விடும் தம்பி

வெப்பத்தினைத் தடுத்து விடும் நம்பு!

 

இலைகள், மலர்கள், இனிய கனிகள்

இயைந்து கொடுக்கும் மரங்களே

பறந்து திரியும் பறவைகட்கு

பரிந்து கொடுக்கும் கிளைகளே!

 

நிறைய மரங்கள் நட்டு

நிதமும் நீரை வார்த்து

நன்று வளரும் வரைக்குமே

நலமாய்க் காத்து வாழ்வமே!

 

(2) வள்ளுவனை வழிபடு!

மனிதனாக வாழ்ந்திடவே

வள்ளுவனை வழிபடு

இனிய நாளாய் இருந்திடவே

திருக்குறளை ஓதிடு!

மனித நேயம் மலர்ந்திடவே

அறத்துப் பாலைப் படித்திடு

 

அறிவதனைப் பெருக்கிடவே

அறிவுடைமை அறிந்திடு

ஆளுமையை வளர்த்திடவே

வாய்மைதனைப் பழகிடு

கருணை உள்ளம் அமைந்திடவே

புலால் உணவை மறுத்திடு!

 

(3) முரசம் கொட்டினார்!

பாரதியார் யாரென்று

உனக்குத் தெரியுமா?

பாரதிரப் பாடியவர்

உனக்குத் தெரியுமா?

 

விடுதலையே மூச்சு என்று

விளக்கிப் பாடினார்

வீரு கொண்டு எழுவதற்கே

முரசம் கொட்டினார்!

 

உறக்கத்திலே இருந்தவரை

உலுக்கி எழுப்பினார்

மறைந்திருந்த மானமதை

தட்டி எழுப்பினார்!

 

(4 ) கல்வி நமது செல்வம்

கல்வி நமது செல்வம் – என்றும்

கரைந்திடாத செல்வம்!

அள்ளி அள்ளிக் கொடுத்தும் – அது

குறைந்திடாத செல்வம்!

கல்வி கற்க வேண்டும் – வாழ்வில்

கடைப் பிடிக்க வேண்டும்!

கல்வி கற்ற மக்கள் – உடலில்

கண்கள் பெற்ற மக்கள்!

கற்க கற்கக் கல்வி – அது

நிற்க வளர்க்கும் அறிவை!

நல்ல நல்ல நூல்கள் – அவற்றை

நித்தம் படிக்க வேண்டும்!

 

(5) நம் மொழியும் நாடும்.

தாய்மொழி நமது தமிழ்மொழியாம்

தமிழர் பெருமைவளர்க்கும் செம்மொழியாம்

இலக்கியம் இலக்கணம் நிறைந்த மொழி

இருள் நீக்கி ஒளிதனைத் தந்த மொழி!

 

என்றும் இளமை காக்கும் மொழி

எங்கள் தாய்மொழி தமிழ் மொழியாம்!

எழுச்சி ஊட்டிடும் வளர்ச்சியதாம்

என்றும் உயர்வாய் மதித்திடுவோம்!

 

காவியம் படைத்த உயர் நாடு

ஓவியம் வளர்த்த தமிழ் நாடு

வள்ளுவன் உதித்த வளநாடு

வள்ளுவம் வளர்த்திடும் தமிழ்நாடு!

 

 

அன்புள்ள

என் வி சுப்பராமன்

News

Read Previous

மத்திய அரசின் நிதியுதவி மற்றும் மானியத்துடன் தொழில் தொடங்க…..

Read Next

ஒரு பிணவறையின் அழுகை

Leave a Reply

Your email address will not be published.