ஜகாத்’தும், வறுமை ஒழிப்பும்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
17. ‘ஜகாத்’தும், வறுமை ஒழிப்பும்
மனித வாழ்வை அலைபோல அலைக்கழிப்பதில் வறுமைக்குப் பெரும் பங்கு உண்டு. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கம் உலகம் முழுவதும் உலவுவதை யாராலும் மறுக்க முடியாது. இதற்காக சர்வதேச அளவில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இருந்தபோதிலும் வறுமை ஒழிந்ததா என்றால், ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
பசி, பட்டினி, பஞ்சம் முதலிய சமூகப் பிணிகளை அகற்றி, செழிப்பான, வளமான சமுதாய அமைப்பை உருவாக்குவதில் ஜகாத்துக்கு முக்கிய பங்கு உண்டு. வசதி படைத்தவர்கள், ஏழைகளுக்கு ‘ஜகாத்’தை வழங்கியே வாழ வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக இஸ்லாம் அறைகூவல் விடுக்கிறது.
இது ஒரு பொருளாதார, சமூக மேம்பாட்டுத் திட்டம் என்பதுடன் பொருள் வழி வணக்கமும் ஆகும்.
‘நற்செயல் என்பது உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும், ஒருவன் முழுமையாக நம்புவதும்- மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாக) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும்,  அனாதைகளுக்கும்,  வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும்’ (திருக்குர் ஆன்-2:177) என்று இறைவன் கூறுகின்றான்.
புனித ரமலான் மாதத்தில் நோன்பை எந்த அளவுக்கு இறையச்சத்தோடு நிறைவேற்றுகிறோமோ, அதைப்போல அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்.
‘ஜகாத்’- இறைநம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது.
இறைவனுடன் மனிதன் கொண்டிருக்கும் தொடர்பை, தொடர்ந்து நிலை நிறுத்தக் கூடிய ஒரு கொள்கை அடிப்படையிலான- ஒழுக்க ரீதியிலான திட்டமே ‘ஜகாத்.’
பொருளாசையை விட இறை நேசத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை முன் மொழியும் உன்னத திட்டம் இது.
‘ஜகாத்’ ஏழைகளின் உரிமை; அது அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டியது என்பதை, ‘அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது, யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்’ (70:24) என்ற இறை வசனம் விளக்குகிறது.
வசதியுள்ள முஸ்லிம்கள் மீது கட்டாயமாகச் சுமத்தப்பட்ட ஒரு கடமையாக இருப்பதால், இதை யாராலும்  தட்டிக்கழித்து விட முடியாது; தட்டிக்கழிக்கவும் கூடாது.
தங்கத்தையும், வெள்ளியையும், செல்வத்தையும் சேர்த்து வைத்து அதை ஏழை, எளியவர்களுக்குக் கொடுக்காதவர்களின் மறுமை வாழ்வு பற்றி திருமறையில், ‘எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யை நீர் அறிவிப்பீராக! ஒரு நாள் வரும்; அந்நாளில் இதே தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப் படும்- இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள்’ (திருக்குர்ஆன்-9:34) என்று இறைவன் கூறுகின்றான்.
‘ஜகாத்’ வழங்குவதால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்தச் செல்வந்தரின் செல்வம் குறைந்து விடாது. இந்தக் கருத்தை உருவகப்படுத்தி அழகிய உவமையுடன் இறைவன் திருமறையில் கூறுகின்றான்:
‘அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருட்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதில் இருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது’ (2:261).
செல்வமும், அதன் பயன்பாடும் சமுதாயம் முழுவதிலும் சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். அந்தச் செல்வத்தால் முழு சமுதாயமும் பயன் பெற வேண்டும். அதன் அடிப்படையில், ‘உங்களிலுள்ள செல்வந்தர்களுக்கு உள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக  இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்க கட்டளையிடப்பட்டுள்ளது’ (திருக்குர்ஆன்-59:7) என்று இறைவன் கூறுகின்றான்.
இந்த நோக்கத்திற்காகவே ஜகாத்தும் கடமையாக்கப்பட்டிருக்கிறது.
‘வறுமை இறை மறுப்பின் பக்கம் இட்டுச் செல்லும்’ என்பது நபிமொழி. இதைக் கருத்தில் கொண்டே மறுமை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதைப் போன்றே, இவ்வுலக வாழ்க்கையிலும், உடல் சார்ந்த தேவைகளிலும் இஸ்லாம் மிகுந்த கவனம் செலுத்துகிறது.
பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஏற்ற தாழ்வு, சமுதாயத்தைச் சீரழித்து, சமத்துவத்தின்  வேரழித்து விடும். இதனால்தான் ‘ஜகாத்’தை கட்டாயம் வழங்க வேண்டும் என்று கடமையாக்கி கட்டளையிடுகிறது, இஸ்லாம்.
ஏழை-பணக்காரர் என்ற பாகுபாட்டைக் களைகின்ற சமத்துவ நெறிக்கு வலிவூட்டும் வழியாகவே ‘ஜகாத்’தும் கருதப்படுகிறது.

News

Read Previous

உலக நுகர்வோர் தினக் கவிதை

Read Next

அபுதாபியில் வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கம்

Leave a Reply

Your email address will not be published.