நோன்பின் மாண்பு

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
15 நோன்பின் மாண்பு
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!
உலகெங்கும் உள்ள எல்லா மதங்களிலும், திருவிழா மற்றும் பண்டிகைகள் வகை வகையான உணவுகளை உண்பதன் மூலமும், கூத்து, கேளிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமும் கொண்டாடப்படுகின்றன.
ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டும் பட்டினி கிடப்பதன் மூலம் ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுவே இஸ்லாமிய நோன்பும், அதைத்தொடர்ந்து கொண்டாடப்படும் ‘ஈகைத்திருநாள்’ என்று அழைக்கப்படும் பெரு நாளும் ஆகும்.
நோன்பு இருப்பதையும் தர்மம் செய்வதையும் கட்டாயமாக்கிய மார்க்கம் இஸ்லாம்.
பசித்திருத்தலையும், பசிதீர்த்தலையும் கடமையாக்கிய மார்க்கம், இஸ்லாம்.
பசியோடு இருத்தலைக் கடமையாக்கிய இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை நோக்கமே, பசியாற்றுவதை அடிப்படையாகக் கொண்டது.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். காரணம் இல்லாமல் ஒரு நோன்பைக்கூட விடுவதற்கு அனுமதி இல்லை. ஏனெனில் பிறகு வாழ்நாள் முழுவதும் நோன்பு நோற்றால்கூட அந்த நோன்புக்கு ஈடாகாது.
இஸ்லாம் கூறும் ஐம்பெரும் கடமைகளில் நோன்புக்கென தனி மாண்பு உள்ளது. இது ஒரு ரகசிய இறை வணக்கம்.
தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை மற்றவர்கள் அறிகின்ற வகையில்தான் நிறைவேற்ற முடியும். ஆனால் நோன்பு நோற்கிறீர்களா இல்லையா? என்பதை நீங்கள் பிறருக்குச் சொன்னால்தான் தெரியும்.
மேலும் தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற வழிபாடுகள் எல்லாம் மனிதன் முகஸ்துதிக்காகவும், விளம்பரத்திற்காகவும் செய்ய இடமுண்டு. ஆனால் பட்டினி இருந்து நோன்பு நோற்பதில் விளம்பரம் தேட இயலாது.
ஒருவர் நோன்பு நோற்காமலேயே நோன்பாளி என்று வெளியே காட்டிக்கொள்ள முடியும். அப்படியிருந்தும் உண்மையாகவே ஒருவர் நோன்பு நோற்கிறார் என்றால் இதற்கு அடிப்படையாக இருப்பது இறையச்சம். இறைவன்     நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் எனும்  நம்பிக்கை.
வெறுமனே பசியையும், தாகத்தையும் தாங்கிக் கொள்வதற்கு மட்டும் ஏற்படுத்தப்பட்ட செயல் அல்ல, நோன்பு. அதற்கு மாறாக மன விருப்பங்களை உடைத்து, மனக்கட்டுப்பாட்டைப் பேணும் ஒரு பயிற்சிக் களம் தான் நோன்பு. அந்த வகையில் அதிகாலை தொடங்கி மாலை வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பதன் மூலம் மனிதன், பசியையும், தாகத்தையும் மட்டுமல்ல, தன் உடல் இச்சைகளையும், மன உணர்வுகளையும், தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான பயிற்சியை நோன்பு வழங்குகிறது.
மனக்கட்டுப்பாடு என்னும் நற்பண்பை நோன்பு கற்றுத்தருகிறது. மனக்கட்டுப்பாடு உள்ளவர்களே நோன்பு நோற்கிறார்கள். அதே நேரத்தில் நோன்பு நோற்பவர்கள் மனக்கட்டுப்பாட்டைப் பெறுகிறார்கள்.
சந்திரனின் சுழற்சியைக் கொண்டே இஸ்லாமிய ஆண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் கோடை காலம், மழைக்காலம், குளிர்காலம், பனிக்காலம் என நோன்பு மாறிமாறி வருகின்றது. இதனால் எல்லாப் பருவ காலங் களிலும் நோன்பு நோற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக மழையையும், குளிரையும், பனியையும், வெயிலையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை முஸ்லிம்கள் பெறுகிறார்கள்.
நோன்பு நோற்பதன் மூலம் மனிதன் தன்னைத் தீமையில் இருந்து காத்துக்கொள்கிறான். தொழுகையைப் போன்றே அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் அளிக்கும் சக்தி நோன்புக்கு உண்டு.
ரமலான் மாதம் முழுவதும் இறைவனைப் பற்றிய சிந்தனைகளுடனும், நம்பிக்கையுடனும் நோன்பு இருப்பது நல வாழ்வை நல்கும். பசித்திருப்பது பல நோய்களுக்கு நிவாரணியாக அமையும் என்பதை மருத்துவ உலகம் மறுக்கவில்லை.
நோன்பு மனிதனுக்குப் பொறுமையைக் கற்றுத் தரு கிறது. சுயநலமற்ற உணர்வு வளர நோன்பு வகை செய்கிறது. நோன்பு நோற்பவர் பசியின் வேதனையை உணருகிறார். இருந்தபோதிலும், அதைப்பொறுமையுடன் சகித்துக்கொள்கிறார்.
நோன்பு இருப்பதால் பிறரின் பசியையும், தாகத்தையும் அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாள் பசி, வாழ்நாள் முழுவதும் வாடுபவர்களின் வறுமையை அவருக்கு உணர்த்துகிறது. இதனால் சுயநலமற்ற முறையில் பிறருக்கு உதவுகின்ற மனப்பக்குவத்தை அவர் பெறுகிறார்.
ரமலான் மாதம் முழுவதும் தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல் ஆகியவற்றில் கழிகிறது. இதனால் உடலுக்கும், உள்ளத்திற்கும் தெம்பும், புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. பதினோரு மாதங்கள் மனிதனின் வயிறு இடையறாது இயங்கி வந்தது.
ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் உடலுக்கு மட்டுமல்ல, குடலுக்கும் நன்மை கிட்டுகிறது. நோன்பு நோய்களைக் குணப்படுத்துவது மட்டுமல்ல, நோய் வராமலும் தடுக்கின்றது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை (கொலஸ்ட்ரால்) குறைக்கிறது. இதய அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. எதிர்ப்பு சக்தியை உடல் பெறுவதால் நோய் நெருங்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள      முடிகிறது.
மருத்துவ குணம் மிக்க நோன்பு, மனிதனுக்கு நோயின்றி வாழ இறைவனால் அருளப்பட்ட நோய் நிவாரணியாகும்.
ஈமானை மொழிவதாலும், கூட்டுத் தொழுகையில் பங்கேற்பதாலும் இஸ்லாம், ‘சமத்துவப் பூங்கா’வாகத் திகழ்கிறது என்பதைச் சென்ற அத்தியாயங்களில் கண்டோம்.
அதை போலவே நோன்பும், சமத்துவத்திற்குச் சாமரம் வீசுகிறது.
நோன்பு திறக்கும்போது பள்ளிவாசல்களில் ஏழையும், பணக்காரரும் அருகருகே அமர்ந்து நோன்புக்கஞ்சி அருந்துவது, இஸ்லாம் காட்டும் சமத்துவத்திற்கு மற்றுமொரு சான்று.

News

Read Previous

காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா

Read Next

தட்பவெப்பம்

Leave a Reply

Your email address will not be published.