பாந்தவ்யம்

Vinkmag ad
 பாந்தவ்யம்
                        —————————————–
  மரங்களைப்  பற்றி  யோசிக்கவே கிளுகிளுப்பாக  இருக்கிறது..  சின்ன  வயதில்  ஏதாவது  கற்பனையாக யோசிப்பதற்கே  மரங்களின்  மேல் தான் உட்கார்ந்து  கொள்வேன்.  எங்கள்  வீட்டு  வாசலில்  பரந்து வளர்ந்திருந்த  பாதாமி  மரத்தின்  பசுமையான கிளைகள் தான்  எனக்கு  குட்டி சிம்மாசனம்.  அதில்  ஏறி  உட்கார்ந்து  கொண்டு  மனதுக்குள்  மன்னனாகவும்.  குதிரை வீரனாகவும்  நினைத்துக்  கொண்டு சுற்றித்  தாவி  ஓடும்  அணிலகளையும்  அரணைகளையும்  அரசாட்சி  செய்து  கொண்டிருப்பேன்.  என்  சிம்மாசனத்தை  அவ்வப்போது  சாமரமாக லேசாக  ஊஞ்சலாட்டி  மரம்  என்னை  உற்சாகப் படுத்தும்.  மனதுக்குள்  என்னென்னவோ  கற்பனைக்  கதைகளும்  இசையின்  துள்ளல்களும்    ததும்பி  பரவசம்  கூட்டும்.. 
  சிறகடித்து  மிதக்கும் பல  விசித்திர  தேவதைகளின்   ஊர்வலம்  நகர்ந்து  கொண்டிருக்கும்  என்னையே  மறந்து  நான்  வெவ்வேறு பாத்திரங்களாக மாறி  மரத்தோடு  முளைத்த  ஓரங்கமாக  மாறி விடுவேன்.  ஒவ்வொரு  முறையும்  என்னை ஓயாமல்  கத்தியழைத்த  என் அம்மாவின்  கூச்சலால் தான்  நான்  கற்பனை  கலைந்து  மீண்டும்  நானாகி  மரத்திலிருந்து  இறங்கி  பூம்க்கு  வருவேன்!
   அந்த மரம்  எனக்குள்  ஒரு  தாயாக  இன்னும்  நினைவில் ஒட்டிக்  கொண்டிருக்கிறது. 
  ஒரு  முறை  என் வீட்டில்  ஏதோ விசேஷத்திற்காக  நிறைய  உறவுக்கார்கள்  வந்திருந்தார்கள்  விசேஷத்தின்  விளைவாக  ஏகப்பட்ட  கூச்சல்  புகை  நெடி.. இடம்  நிறைந்த  நெருக்கடி!   ஹோம குண்ட்த்தின்  புகையைத்  தாங்கிக்  கொள்ல முடியாமல்  யாரும் கவனிக்காத  சமயம்  நான் மரத்தில்  ஏறி  உட்கார்ந்து  கொண்டு விட்டேன்.
  சிறிது  நேரம் கழித்து  என்னை  எதற்கோ  தேடிக் கொண்டிருந்த  என்  பெரியப்பா  மரத்தின்  மேல்  நான் உட்கார்ந்திருப்பதைப்  பார்த்தார்.  என்னைப்  பார்த்த  கணம் அவர்  முகம்  ஏதோ கலவரமாக  மாறியது. 
  “டேய்..கண்ணா….எப்ப்டீடா  மரத்து மேலே  ஏறினே?  சரி.. நீ  கொஞ்ச நேரம்  அசையாம  கையை காலை ஆட்டாம  இருக்க முடியுமா? நீ  அசையாம  பொம்மை  மாதிரி  இருந்தா  நான்  ஒனக்கு  சாக்கலேட்டுக்  கொடுப்பேன்!  சரியா?..அசையாம இரு..”  என்றரர்.
  எனக்கு சாக்கலேட்டு  பிரியம்.  நான்  “சரி பெரியப்பா..”  என்றேன்
 அவர்  அங்கே  தரையில்  கிடந்த  நீளமான  கழியை  எடுத்து  மேலே  என்  அருகில்  மெதுவாக உயர்த்தி  திடீரென்று பக்கவாட்டில்  பலமாக  ஆட்டினார்.  ஒரு  நீளமான  பழுப்பு நிறப் பாம்பு  என்  அருகிலிருந்த  கிளையிலிருந்து  விடுபட்டு  தரையில்  விழுந்து  நெளிந்தது.  அடுத்த  கணம்  பெரியப்பா  அதன்  தலையில்  ஒரு  போடு  போட்டார்.  அதன் மண்டை சிதறி  ரத்தம்  லேசாக  கசிந்து கொண்டிருந்த்து.
  “டேய்..கண்ணா..பாத்தியா..எவ்வளவு  பெரிய  பாம்பு!…..நல்ல வேளை   மெதுவா  இறங்கி வாடா….பயப்படாதே!  மெதுவா…..மெதுவா…”  என்றார்.
   என்  காலருகில்  இதுவரை  என்னைத் தொந்தரவு  செய்யாமல்  சாதுவாகத்  தொங்கிக்  கொண்டிருந்த  அந்தப்  பாம்பு  அரைக் கணத்தில்  ஆபத்தானதாக   மாறி  என் பெரியப்பாவின்  தடிக்கு  இரையாகி விட்டது.  ஏன்  இப்படி  நேர வேண்டும்?  வருத்தமாக  இருந்தது. 
  அந்த  நிகழ்ச்சியால்  எனக்கு  இன்னொரு  சங்கடமும்  நேர்ந்தது.  அதற்குப்  பிறகு  நான்  மரத்தில்  ஏறக் கூடாது  என்று  கண்டிப்பாக  என்  அம்மா  அதட்டினாள்.  மீறி  ஏறினால்  காலை  உடைத்து  விடுவதாக  அப்பா  மிரட்டினார். 
  ஆனால்  என்னால்  மரம்  ஏறாமல்  இருக்க முடியாது. அது என்  பொழுது போக்குக்கு  பெரிய  இழப்பு.  மரத்தின்  கிளைகளில்  கொஞ்ச நேரமாகவாவது  ஆடாமல்  இருந்தால் எனக்கு  செத்தது  போல்  இருக்கும்.  ஏதோ ஒரு  தோழனை  விரோதித்துக்   கொண்டது  போல்  தோன்றும்  மரத்தின்  மேல் பாம்பு  இருந்ததற்காக  மரத்தை  எப்படி  வெறுத்து  ஒதுக்க  முடியும்? .   
  வீட்டில்  பெற்றோர்கள்  இல்லாத  சமயம்  மெதுவாக  மீண்டும்  நான்  பாதாமி  மரத்தின்  மேல் ஏறிக்  கொண்டேன்.  யாருமில்லாத  இந்த  சமயத்தில்  ஆசை  தீரக்  கிளைகளில்  ஆடித்  தீர்க்க  வேண்டுமென்று  ஆசைப் பட்டேன்.  ஆனால்  என்  கெட்ட வேளை  என் அம்மாவந்து விட்டாள்.  நான்  வீட்டுக்குள்  இல்லாததைக் கண்டது  நேராக  வாசலுக்கு வந்து   மரக் கிளையில்  என்னைக்  கண்டு  பிடித்து விட்டாள்.
  அம்மாவுக்கு  கடுமையான  கோபம். மறு நாள்  அப்பாவின்  ஏற்பாட்டில்  இரண்டு  மூன்று  ஆட்கள் கோடாரியைத்  தூக்கிக்  கொண்டு  மரத்தை  வெட்ட  வந்து  விட்டார்கள்.  எனக்கு   சொல்ல  முடியாத  அதிர்ச்சி.
  நான்  “அப்பா…அப்பா..”  என்று  கத்தி கூப்பாடு  போட்டு  அழுதேன்.  தரையில்  புரண்டேன்.  “தயவு  செஞ்சி  மரத்தை  வெட்டாதீங்க அப்பா!  மரத்துக்கு  என்னப்பா  தெரியும் அதுக்கு  பாம்பு  ஏறினாலும்  பல்லி  ஏறினாலும்  எது ஏறினாலும்  எல்லாமே  ஒண்ணு  தான்…  தப்பு  செஞ்சது  நான்  தான்.. இனிமே  சத்தியமா  ஏற மாட்டெம்ப்பா…மன்னிச்சுடுங்க  மரத்தை விட்டுடுங்கோ!  “  என்று  கதறினேன் .
  அப்பாவுக்கு மனம்  இளகியது.  அம்மாவுக்கும்  கண்ணில்  ஈரம்  துளிர்த்த்து.  !
 “பாவம் கொழந்தை..இனிமே  ஏற  மாட்டான்!.. வெய்யக்  காலத்துலே  நல்ல  நிழலா  குளு குளுன்னு இருக்கு.  அதை  வெட்டுவானேன்! “  என்றாள் அம்மா.   அப்பாவுக்கு  அது சந்தோஷமாக  இருந்திருக்க வேண்டும்.
  “ ஒரு  மரம்  நம்  வீட்டோட  பல  வருஷங்கள்  சேர்ந்து  வளரும்போது  அதுவும்  அநேகமா  நம்ப  பிள்ளையைப்  போலவே  ஆயிடுது.  பாசமா  குளிர்ச்சியா  அரவணைப்பாகி  விடுகிறது..  எல்லா  சமயத்திலியும் ஒரு  உயிர்  இன்னொரு  உயிருக்கு  ஆபத்தாக  விரோதமாகி   விடுவதில்லை. 
  இயற்கையில்  யாருக்கும் எதற்கும்  உட்பகையில்லை.  அது  ஒரு  தற்செயலான  வருந்தத் தக்க  விபத்துத்  தான்.  அதற்கு  தெரிந்தும்  தெரியாமலும்  எவ்வளவோ  காரணங்கள்  இருக்கலாம். 
   பல வருஷங்களுக்குப் பிறகு  தொழிலும்   சூழலும்  மாறிப் போய்  நான்  பிரிந்து  போன  என்  சொந்த ஊருக்கு  மீண்டும்  போனேன்.  நான்  பிறந்து  வளர்ந்த  வீடு  இப்போது  கைகள்  மாறி  அடுக்கு மாடிக் கட்டிடமாக  வளர்ந்து  அடையாளம்  தொலைந்து  போயிருந்தது. 
  ஆனால்  அதிசயமாக  என்  இள வயது  மரம்  மட்டும்  சற்றுப்  பழுப்பேறிய  கிளைகளுடன்  சற்று  தளர்ச்சியாகி   சோகையாகி  நீண்டு  மெலிந்து  அங்கே இன்னும்  பிடிவாதமாக   நின்று கொண்டிருந்தது.
   எனக்காகத் தான்   காத்துக் கொண்டிருந்தது  போல்  அது  தன் மெலிந்த  கிளைகளை  லேசாக  இங்குமங்கும்  ஆட்டி சந்தோஷத்தை தெரிவித்துக்  கொண்டது.
    அப்படித்  தான் எனக்குத் தோன்றியது!
 
               வைதீஸ்வரன்            அமுதசுரபி  திபாவளி  மலர் 15      

News

Read Previous

வத்திக்கான் வானொலியின் 80ஆண்டு சேவை

Read Next

மனிதம்!

Leave a Reply

Your email address will not be published.