பிளாஸ்டிக் பாதுகாப்பைத் தாண்டிய பயங்கரம்!

Vinkmag ad

பிளாஸ்டிக் பாதுகாப்பைத் தாண்டிய பயங்கரம்!

‘நீயில்லாமல் வாழ முடியாது’ என்பது போன்ற காதல் வசனங்களில் கூட பாதிக்கு மேல் பொய் இருக்கலாம்.

ஆனால், பிளாஸ்டிக் இல்லாமல் இன்று நம்மால் வாழ முடியாது என்பது 99 சதவிகித உண்மை.

அந்த அளவுக்கு, காலையில் எழுந்ததும் காபி சாப்பிடும் கப் முதல் இரவு தூங்கப் போகும்முன் கட்டுகிற கொசுவலை வரை பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் நம் வாழ்வில் அதிகம்…

அநியாயம்!

பிளாஸ்டிக்  முழுக்க  முழுக்க வேதிப்பொருட்களால்  தயாரானது என்பதையும், அதன் பயன்பாடு ஆபத்தானது என்பதையும் பலரும்  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆனாலும், பாலிதீன் கவரில் சூடாக இட்லியை வைத்து கொதிக்கிற சாம்பாரை ஊற்றுகிற அளவுக்கு பிளாஸ்டிக் மீது நம் மக்களுக்கு இருக்கும் அலட்சியம் பெரும் கவலைக்குரியது.

சாக்லெட், பொம்மை, பால் பாக்கெட், விருந்துகளில் பிளாஸ்டிக் இலை, தண்ணீர் பாட்டில், குடம், பாலிதீன் கவர் என அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒரு நிமிடம் கவனித்தாலே தலை சுற்றும்.

மெல்லக் கொல்லும் விஷமாக நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டின் விளைவு எப்படியிருக்கும்?

இன்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவரான கார்த்திக்கிடம் கேட்டோம்…

‘‘Phthalates, Vinyl Chloride, Styrene என்று பிளாஸ்டிக்கில் இருக்கும் பல்வேறு வேதிப்பொருட்களும் நோய்களை உண்டாக்குபவை.

ஹப்போ தைராய்டு,

சரும அலர்ஜி,

புற்றுநோய் என பல பிரச்னைகள் பிளாஸ்டிக்கினால் உண்டாகும் என ஆய்வுகள் கூறியிருக்கின்றன.

சூடான உணவுகளை பிளாஸ்டிக் பொருட்களில் வைக்கும்போது Bisphenol A என்ற ஆபத்தான வேதிப்பொருள் வெளியாகிறது என்பதை  சின்சினாட்டி பல்கலைக்கழக ஆய்வு நிரூபித்துள்ளது.

இது பல்வேறு ஹார்மோன் கோளாறுகளை  உண்டாக்குகிறது என்றும் எச்சரித்துள்ளது.

அதனால்,  சூடான தண்ணீர், காபி மற்றும் வேறு உணவுப் பொருட்களை வைக்க பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது.

20 மைக்ரானுக்கு மேல் உள்ள பாலிதீன் பைகளை மட்டுமே பயன்படுத்த அரசு அனுமதித்திருக்கிறது.

பாலிதீன் பைகளைத் தயாரிப்பவரின் பெயர் விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதையும் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

பாலிதீன் கவர் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றுதான் பாலிதீன் பைகளுக்குக் கட்டணமும் வாங்குகிறார்கள்.

பிளாஸ்டிக் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை எவ்வளவு தவிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நல்லது. பாலிதீன் பைகளுக்குப் பதிலாக காகிதங்கள், சணல், துணிகளால் தயாராகும் பைகளைப் பயன்படுத்தலாம்.

சமையல் அறையில் பிளாஸ்டிக் டப்பாக்களில் பொருட்களை வைப்பதற்குப் பதிலாக, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களையோ, பீங்கானையோ பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்’’ என்கிறார் டாக்டர் கார்த்திக்.

‘பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாத பட்சத்தில், நம்மை  பாதிக்காத அளவுக்குப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதுதான் சிறந்த வழி’ என்கிறார் வேதியியல் பேராசிரியரான அப்துல் ரஹ்மான்.

‘‘கடைகளில் வாங்கும் மினரல் வாட்டர் பாட்டில்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.

ஒருமுறை பயன்படுத்திவிட்டு இந்த மினரல் வாட்டர் பாட்டில்களைத் தூக்கி எறிந்துவிட வேண்டும்

தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கென இருக்கும் தரமான பெட் பாட்டில்களையே பயன்படுத்த வேண்டும்.

அதாவது, பெட் பாட்டில்களில் இருக்கும் வேதிப்பொருட்கள் வெளியாகி, நாம் பயன்படுத்தும் தண்ணீருடன் கலக்காத அளவுக்காவது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்’’ என்பவரிடம், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டோம்.

‘‘இது முக்கியமான விஷயம். தான் இருக்கும் இடத்தை அழிக்கும் குணம் கொண்டது பிளாஸ்டிக்.

அது  மண்ணாக இருந்தாலும் சரி, தண்ணீராக இருந்தாலும் சரி, காற்றாக   இருந்தாலும்  சரி. அதனால், பிளாஸ்டிக்கை  நெருப்பு  வைத்து எரிக்கக் கூடாது.

அப்படி எரிக்கும்போது பிளாஸ்டிக்கில் இருந்து வெளியாகும் Dioxin என்ற வேதிப்பொருள் மனிதர்களுக்குப் பல்வேறு சுவாச
நோய்களையும், சரும அலர்ஜியையும், புற்று நோய்களையும் ஏற்படுத்தக்கூடும்.

மண்ணில் வீசப்படும் பிளாஸ்டிக் மண்வளத்தைக் கெடுத்து நச்சாக்கிவிடும். இதனால், தண்ணீர் குழாய்களில்  அடைத்துக் கொள்வதும், பாலிதீன் கவரைத் தின்னும் கால்நடைகள் பலியாவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

நீர்நிலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் நீர்வாழ் உயிரினங்களை அழிக்கும்.

இதற்கு ஒரே வழி பிளாஸ்டிக்கை மீண்டும் மறுசுழற்சி செய்வதுதான். காரணம், பிளாஸ்டிக்கை அழிக்க முடியாது.

பிளாஸ்டிக்கை வேறு ஒன்றாக உருமாற்றம்தான் செய்ய முடியும்.

அதனால், கண்ட இடங்களில் வீசாமல், முறையாக அதற்குரிய குப்பையில்தான் கொட்ட வேண்டும்.

இப்போது பிளாஸ்டிக்கை பல்வேறு இடங்களில் சேகரித்து விற்கிறார்கள்.

இதுபோல் சேகரிக்கும் பிளாஸ்டிக்குகள் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகிறது.

பிளாஸ்டிக் சாலைகளுக்காக அரசும் பயன்படுத்திக் கொள்கிறது.

பிளாஸ்டிக்குக்காக ஒரு தனித்துறையையே அரசு செயல்படுத்தி வருவதும் பாராட்டுக்குரியது.

பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

கடைசி இடத்துக்கு நாம் வர முயற்சிக்க வேண்டும்’’ என்று சிரிக்கிறார் அப்துல் ரஹ்மான்.

கவனமாக வாங்குங்கள்!

நாம் வாங்கும் பிளாஸ்டிக் பாதுகாப்பானதுதானா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு  எளிமையான வழி இருக்கிறது.

பிளாஸ்டிக் பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்ய  முக்கோண வடிவக் குறியீடு ஒன்று பொருட்களின் அடிப்பகுதியில்  குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த குறியீட்டுடன் 1, 2, 3, 4, 5, 6 என்று  ஏதாவது ஓர் எண் இருப்பதை நீங்கள்
கவனித்திருக்கலாம்.

இவற்றில் 2, 4, 5 ஆகிய  எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்குகள் ஓரளவு பாதுகாப்பானவை.

1, 3, 6 ஆகிய எண்களைக் கொண்ட பிளாஸ்டிக்குகள் ஆபத்தானவை.

 

சில பாட்டில்களில்  இந்த எண்கள் எதுவுமே இருக்காது. எண்களற்ற இவை மிகவும் ஆபத்தானவை.

இதை ஏழாம்  வகை பிளாஸ்டிக் என்று சொல்கிறார்கள்.

தண்ணீர் வைத்துக் கொள்ளும் பெட் பாட்டில்களுக்கு மட்டுமல்ல… எல்லா வகை பிளாஸ்டிக்  பொருட்கள் வாங்கும்போதும் இந்த 2,4,5 என்ற எண்கள் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களையே  வாங்க வேண்டும்.

News

Read Previous

கண்கள்

Read Next

எனக்குள் ஓர் குழந்தை

Leave a Reply

Your email address will not be published.