விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அஸ்ட்ரோசாட்

Vinkmag ad

விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அஸ்ட்ரோசாட்

 

பேராசிரியர் கே. ராஜு
விண்வெளி பற்றிய ஆய்வில் இந்தியா ஒரு சக்திவாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறது என்பதை 2015 ஆகஸ்ட் 27-லிருந்து 30 நாட்களுக்குள் நடந்த மூன்று நிகழ்வுகள் உறுதி செய்துவிட்டன. (1) ஆகஸ்ட் 27 அன்று உள்நாட்டிலேயே தயாரான GSLV-D6  செயற்கைக் கோள் ஏவப்பட்டது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவினால் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட இரண்டாவது வெற்றி. இரண்டு டன் எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு அந்நிய நாட்டு ஏவுதளங்களை நாம் நம்பியிருந்த நிலைக்கு இந்த வெற்றி முடிவு கட்டியது. (2) செப்டம்பர் 24 அன்று செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய விண்கலம்  செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்த ஒரு வருடத்தை நிறைவு செய்தது. நாடு செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் முயற்சியே அசாதாரணமான வெற்றி அடைந்தது. (3) செப்டம்பர் 28 அன்று நமது முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான அஸ்ட்ரோசாட்டினை  (Astrosat) பூமியைச் சுற்றும் பாதையில் நிலைநிறுத்தியது.
செப்டம்பர் 28 காலை சரியாக 10 மணிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி – சி30 எனும் செயற்கைக் கோளைச் சுமந்து செல்லும் ராக்கெட் ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து புறப்பட்டு 23 நிமிடங்கள் கழித்து அஸ்ட்ரோசாட்டினை பூமியைச் சுற்றும் பாதையில் நிலைநிறுத்தியது. பிஎஸ்எல்வி – சி30 ஆறு  வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் (கனடாவிலிருந்து ஒன்று, இந்தோனேசியாவிலிருந்து ஒன்று, அமெரிக்காவிலிருந்து நான்கு) சுற்றுப்பாதைக்கு கொண்டு சென்றது. பிஎஸ்எல்வி-யின் 30வது வெற்றிகரமான பயணம் இது. அஸ்ட்ரோசாட்டின் எடை 1513 கிலோகிராம். ஆயுள் ஐந்து ஆண்டுகள்.வானத்தில் தொலைதூரத்தில் உள்ள பொருட்களை ஆய்வு செய்வதற்காக இந்தியாவினால் முதன்முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் இது. கருந்துளைகள், பல்சார்கள், குவாசார்கள் போன்ற விண்மீன்கள் , வெள்ளைக் குள்ளக்கோள்கள் (white dwarfs), விண்வெளி பால்மண்டலத்தில் உள்ள அணுக்கருக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்குத் தேவையான அறிவியல் கருவிகள், தொலைநோக்கிகள் அனைத்தும் அஸ்ட்ரோசாட்டில் பொருத்தப்பட்டுள்ளன. அஸ்ட்ரோசாட்டின் வடிவமைப்பு புதுமையானது. ஒவ்வொரு வானியல் பொருளையும் தனித்தனியாக ஆனால் ஒரே நேரத்தில் கண்ணால் காணக்கூடிய ஒளி, புறஊதா அல்லது எக்ஸ்ரே கதிர்கள் ஆகிய மின்காந்த நிறமாலையில் உள்ள ஒளிக்கதிர்களின் உதவியுடன் ஆய்வுசெய்ய முடியும். இதற்கு முன்னர் மின்காந்த நிறமாலையில் உள்ள ஒவ்வொரு ஒளிக்கதிரினையும் ஆய்வு செய்ய அதற்கேற்ற தொலைநோக்கி பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களை தனித்தனியாக அனுப்ப வேண்டியிருந்தது. அஸ்ட்ரோசாட் அதற்கு முடிவு கட்டிவிட்டது. வானியல் பொருட்களை புறஊதாக் கதிர்கள், எக்ஸ்ரே கதிர்களைக் கொண்டு பூமியிலிருந்தவாறே ஆய்வு செய்ய இயலாது. அதை அஸ்ட்ரோசாட் மூலம்தான் செய்ய முடியும். புறஊதாக் கதிர்களால் காணக்கூடிய பால்வீதி மண்டலங்களில் உள்ள பொருட்கள் பற்றிய இந்த ஆய்வு, பால்வீதி மண்டலம் உருவானது பற்றியும் நட்சத்திரங்கள் உருவானது பற்றியும் நிலவும் மர்மங்களுக்கு விளக்க வல்லது என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
அஸ்ட்ரோசாட்டினை சுற்றுப்பாதைக்கு அனுப்பிய பிறகு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான வானவியல், வான்இயற்பியல் மையம் (IUCAA), அடிப்படை அறிவியல் ஆய்வுகளுக்கான டாட்டா நிறுவனம் (TIFR), வான்இயற்பியலுக்கான இந்திய நிறுவனம் (IIA), ராமன் ஆய்வு மையம் (RRI) போன்ற  பல்வேறு இந்திய அறிவியல் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இந்த செயற்கைக்கோளை அனுப்பியதன் காரணமாக இது ஒரு  தனித்துவம் மிக்க பயணமாக அமைந்துள்ளது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண் குமார்.
(உதவிய கட்டுரை : அக்டோபர் 30 தேதியிட்ட ஃபிரண்ட்லைன் இதழில் திரு. டி.எஸ். சுப்பிரமணியன் எழுதியது)

News

Read Previous

பெண் தற்கொலை

Read Next

விடாமுயற்சி

Leave a Reply

Your email address will not be published.