பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை

Vinkmag ad

பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை

முனைவர் சொ.சேதுபதி – (கிருங்கை சேதுபதி)

மகாகவி பாரதியார், தலைசிறந்த கவிஞர், பத்திரிகையாளர், மொழி பெயர்ப்பாளர், சிறுகதையாளர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி என்பது பலர் அறிந்த செய்தி. அந்தவரிசையில் இன்னும் சிறப்புற அறியவேண்டிய செய்தி. அவர் மிகச்சிறந்த சொற்பொழிவாளர் என்பதும்.

விடுதலைப் போராட்டவீரராகவும், பத்திரிகையாளராகவும் இருந்து கொண்டே ஏராளமான சொற்பொழிவுகளையும் அவர் நிகழ்த்தியிருக்கிறார். அரசியல், ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவுகளோடு, சீர்திருத்தச் சொற்பொழிவுகளையும் ஆற்றிய பாரதியாரை ஒரு சமயச் சொற்பொழிவாளராக்கிய பெருமை இஸ்லாம் மார்க்கத்திற்கு உண்டு.

அந்தவகையில் ஒருமுறை அல்ல, இருமுறை இரண்டு இடங்களில் பாரதியார் இஸ்லாமிய மார்க்கத்தின் மகிமை குறித்துப் பேசியிருக்கின்றார்.

புதுவை வாசத்திற்குப் பின், சிறைபுகுந்து மீண்ட பாரதியார் கடையம் பகுதியில் வசிக்கத் தொடங்கியபோது, அவர்தம் மேன்மையறிந்த இஸ்லாமிய நண்பர்கள் வந்து பழகினர். பொட்டல்புதூர் இனாம்தார், செய்யதுசுலைமான் போன்றோர் வந்து பாதிரியாரிடம் உரையாடுவது வழக்கம். அவர்கள் என் தந்தையின் விசாலமனப்பான்மையையும், அவரது சொற்களிலே மிளிரும் உண்மை ஒளியையும் கண்டு, அவர் பிரசங்கத்தைத் தம் ஊர் மக்களும் கேட்டு அனுபவிக்கவேண்டுமெனும் பேராவலினால் அவரைப் பொட்டல்புதூரில் வந்து சில பிரசங்கங்கள் செய்யும்படி வேண்டினார்கள்… அவ்வாறே பொட்டல்புதூரில் முகமதிய சங்கமொன்றில் என் தந்தை இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை என்ற விஷயம் பற்றிப் பிரசங்கம் செய்தார் என்கிறார் பாரதியாரின் இளையமகள் சகுந்தலாபாரதி (சகுந்தலாபாரதி, பாரதி – என் தந்தை, ப.91)

7.3.1920 ஞாயிற்றுக்கிழமை மாலை, ரவணசமுத்திரம் சின்னப்பள்ளிவாசலுக்கெதிரே, மேற்கூறிய விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் பாரதி மிகவும் ஆச்சர்யமான ப்ரசங்கமொன்று செய்தார்.

அந்தக் கூட்டத்திலே ஸபாநாயகராக முஸ்லீம் வேதசாஸ்திரங்களில் நிரம்பிய தேர்ச்சி கொண்ட பண்டிதரும், மக்கம் முதலிய புண்ய ஷேத்திரங்களில் யாத்திரை செய்துவந்த பெரிய பக்தரும், கீர்த்திமானுமாகிய ஜனாப் ஹாஜி முகமது மீரான் ஸாஹப் ராவுத்தர் அமரும்படி ஸபையார் வேண்டியதற்கிணங்கி அந்த வித்வான் அக்ராஸனம் (தலைமை) வகித்தார். அப்பால் தம்முடைய பிரசங்கத்தைத் தொடங்குமுன்னே, ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதி, தம்மால் இயற்றப்பட்ட, 1. ஐயமுண்டு பயமில்லை மனமே, 2. ஐயபேரிகை கொட்டடா, 3. உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா என்ற கீர்த்தனங்களை தெய்வீகமான நாதத்தில் பாடினார். ஸபையார் புளகாங்கிதமாயினர்… என்று அன்றைய நிகழ்வை சுதேசமித்திரன் நிருபர் ஒருவர் குறிப்புரையாகத் தர, பின்னர், ஹாஜி ஸாஹப், ஸபையோர்களே என்று தொடங்கி, பாரதியார் பேசிய உரையின் எழுத்துவடிவை, 18.3.1920 நாளிட்ட சுதேசமித்திரன் இதழ் வெளியிட்டிருக்கின்றது. இது வரையில் பலராலும் அறியப்படாதிருந்த இக்கட்டுரையினை, முதன்முதலில் தமது, காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 11 ஆம் தொகுதி நூலில் எடுத்து வெளியிட்டிருக்கிறார், பாரதி ஆய்வாளர் திரு. சீனி விசுவநாதன்.

அவ்வுரையை பாரதியார் விளக்கம் செய்து வரும்போது, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெருமையை விவரிக்கிறார். அவற்றை எழுத்தாக்கும்போது பின்வருமாறு ஒரு குறிப்பும் தருகிறார். இந்தக் கதைக்குறிப்புக்களும், பிறவும், நான் ஆங்கிலேயரின் எழுத்துக்களில் படித்ததின்றும் ஞாபகத்தால் எழுதப்படுவனவாதாதலின் இவற்றில் பல தவறுகளும் மாறுதல்களும் இருக்கக்கூடும். ஆனால், கதையின் முக்கியாம்சங்களிலேயும், நபியவர்களின் குணவிஸ்தாரங்களிலும் தவறுதலிராது என்று பக்திபூர்வமாகக் குறிப்பிடுகின்றார்.

நாம் எல்லோரும் ஸஹோதரர், கிருஸ்தவர், ஹிந்துக்கள், பெளத்தர், மஹமதியர் எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக இருந்து துணைசெய்து, எல்லோருக்கும் பொதுவாகிய கடவுளின் பக்தியில் உண்மையான தீன் கொண்டு, அதனின்றும், நோவு, சாவு, துன்பம், கவலை முதலிய அரக்கர்களை வென்று, மக்கள் தேவர்களைப் போல வாழும்படி கிருபை செய்ய வேண்டும் என்று நான் அல்லாஹுத்தஆலாவை மிகவும் வணக்கத்துடனும் உண்மையுடனும் வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமீன் என்று நிறைவு செய்கிறார் பாரதியார்.

அதனைத்தொடர்ந்து, அவைத்தலைவராக இருந்த ஜனாப் ஹாஜி மஹமது மீரான் ஸாஹப் ராவுத்தர் அவர்கள், சபையோர்களே, இன்று நமக்கு ஸ்ரீமான் பாரதியார் மிகவும் அருமையான உபதேசங்கள் செய்தார். அவர் சொல்லிய அம்சங்களிலே சரித்திர விஷயங்கள் போன்ற சில ஆங்கிலேயரின் எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டபடியால் சிற்சில இலேசான விஷயமாக மாறுதல்கள் இருந்தன. எனினும், மதக்கொள்கை விஷயமாக அவர் பேசியதில் இஸ்லாம் மார்க்கத்தின் உண்மையான தத்துவத்தை எடுத்துக் காட்டினார். நீங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தின்படி நடந்து அல்லாஹ்வின் அருள் பெற்று நித்திய வாழ்வெய்துவீர்களாகுக என்று பேசியிருக்கின்றார்.

இதன்பின்னர் 20.6.1920, இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் உரை நிகழ்த்துகிறார் பாரதியார். ஆனால், அங்கே தொடங்குகின்ற போது, நான் அல்லாஹ்வின் மீது பாடிக்கொணர்ந்திருக்கும் தமிழ்ப்பாட்டை இங்கு வாசித்துக்காட்ட அனுமதி தரும்படி வேண்டுகிறேன். ஏற்கனவே, அரபி பாஷையில் பாத்திஹா (ஜபம்) ஓதி முடிந்துவிட்டது. அதற்கு அனுஸரணையாக இந்தத் தமிழ்பாட்டைப் பாடுகிறேன் என்று கூறி, நாம் நன்கு அறிந்த அல்லா… அல்லா … என்று தொடங்கும் பல்லவியையும் இரண்டு சரணங்களையும் அங்கே இசைக்கிறார். அங்கு நிகழ்த்திய பேருரையில் பக்திப் பாங்கு மிகுந்து சுடர்வதை முற்றிலும் படிப்பவர்கள் நன்கு உணர்ந்து கொள்ளமுடியும்.

அவற்றின் இடையில், இறைமையைப் பேசுகிற அவர், இந்த உலகம் முக்காலத்திலும் உள்ளது இது அசைகிறது அண்டங்களாக இருந்து சுழன்றோடுகிறது காற்றாகத் தோன்றி விரைகின்றது. மனமாக நின்று சலிக்கிறது ஸ்தூல அணுக்களும் சூக்கும அணுக்களும் ஸதா மஹா வேகத்துடன், மஹா, மஹா, மஹா, மஹா வேகத்துடன் இயங்கிய வண்ணமாகவே இருக்கின்றன. இந்த உலகத்திலிருந்து கொண்டு இதனை அசைக்கிற சக்தியையே கடவுளென்கிறோம். எல்லாம் அவன். உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள். என்றெல்லாம் விளக்கிச்சொல்லும் அவரது கருத்துகளின் இசைத் தமிழ்தான் இந்தப் பாடல் எனலாம்.

இந்தக் கட்டுரையிலும், பரவலாக நமக்குக் கிடைக்கும் பாரதியார் கவிதைகள் தொகுப்பு நூல்களிலும் அல்லா பாடலில், பல்லவியைத் தொடர்ந்து, இரு சரணங்களோடு முடிவுற்றுவிடுகின்றன. ஆனால், 1920 ஜூலை மாத கதாரத்னாகரம் என்ற இதழில், இதன் மூன்றாவது சரணமும் இடம்பெறுகின்றது. அத்தோடு, இப்பாடலுக்கான ஸ்வர வரிசைகளின் மாதிரியையும் தந்திருக்கிறார்.

ஸ்வர வரிசைகளின் குறிப்போடு அந்த முழுமைப்பாடலையும் தேடி விளக்கித் தமது காலவரிசையில் பாரதி பாடல்கள் நூலில் தந்த பெருமை, பாரதி ஆய்வாளர் திரு. சீனி விசுவநாதன் அவர்களையே சாரும். அவை பின்வருவாறு:

பல்லாயிரம் பல்லாயிரம் கோடிகோடி யண்டங்கள்

எல்லாத் திசையிலுமோ ரெல்லையில்லா வெளிவானிலே

நில்லாது சுழன்றோட நியமஞ்செய்தருள் நாயகன்

சொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி !

(அல்லா, அல்லா, அல்லா!)

 

 

தினமணி – ஈகைப் பெருநாள் மலர் 2015

News

Read Previous

அன்னை

Read Next

முதல் புத்தகம் – தமிழ்

Leave a Reply

Your email address will not be published.