இஸ்லாம் ஒரு விடுதலை இயக்கம்

Vinkmag ad

இஸ்லாம் ஒரு விடுதலை இயக்கம்

ஏ.கே.ஏ. அப்துல் சமது எம்.ஏ.,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

ஒரே இறைவனை உளமாற ஒப்புக்கொண்டு அவனே உவந்து தேர்ந்து கொண்ட அண்ணல் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை வாழ்க்கையின் முன்மாதிரியாகக் கொண்டு நற்செயல்களைப் புரிந்து வாழும் சீலர்கள், முஸ்லிம்கள் என அறியப்படுகிறார்கள்.

அவர்கள் முற்றாகப் பின்பற்றி ஒழுகும் நெறியின் பெயர் “இஸ்லாம்” என்பதாகும்.

இயற்கை மதமாகிய இஸ்லாத்தை ஒரு மனிதன் தழுவி நடப்பது கொண்டு, அவன் அல்லாஹ்வுக்கு ஏதும் நன்றியோ, நன்மையோ செய்வதில்லை. மாறாக இஸ்லாத்தை ஏற்று நடக்கும் மனிதன் மீது அல்லாஹ்வின் அளப்பரிய கருணை பொழிகிறது. ஆயிரம் ஆயிரம் நிலைத்த நன்மைகளுக்கும், சன்மானங்களுக்கும் அந்த மனிதன் தகுதி பெற்றவனாகிறான். மனிதன் என்ற நிலையிலிருந்து — மனிதன் புனிதன் என்ற உயர்நிலைக்கு உயர்த்தப்படுகிறான்.

அறநெறிகள் அனைத்துமே மறு உலக வாழ்வை உறுதிப்படுத்துகின்றன; உயர்வு படுத்திப் பேசுகின்றன.

இஸ்லாமியத் திருநெறியின் ஒரு சிறப்பு அம்சம், அது இந்த உலக வாழ்விலும், சிறப்பானதை, அழகானதை, அனுபவிக்கச் செய்கிறது; ஆகுமானதாக வைத்திருக்கிறது. எதிலும் வரம்பு மீறிடாத அளவோடு கூடிய நியாயமான இவ்வுலக இன்பங்களைச் சுகிக்க அனுமதித்து, அத்தகைய வரம்பிட்ட வாழ்க்கை முறையையே எதிர்கால நிலையான நீடித்த வாழ்க்கை முறைக்கு, அடிப்படையாகவும், ஆக்கி வைத்திருக்கிறது.

மனித சமுதாய வாழ்வில் அது பெற்றுள்ள அந்தஸ்து, பல இரத்தப் புரட்சிகளாலும், சட்டச் சம்பிரதாயங்களாலும், ஆட்சி அதிகாரத்தாலும் பெற முடியாத – பெற்றுத் தர முடியாத மிக உயர்வான ஒன்றாகும்.

எனவேதான், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கொடுமைப் படுத்தப்பட்ட மக்களுக்கு இஸ்லாம் ஓர் விடுதலை இயக்கமாகப் காட்சியளிக்கிறது. அதன் திருக்கலிமா புரட்சி கீதமாம ஒலிக்கிறது. அதன் அமைப்பு, ஆதரவற்றவர்கள் அரவணைக்கப்படும் சாந்தி நிலையமாக தென்படுகிறது.

இஸ்லாமிய ஒளிக் கதிர்களால் தம் விழிகளை அகலமாக்கிக் கொண்ட மக்களில் ஒரு சாரார், இன்றைய தமிழகத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியத் திருவழியில் நடைபோடத் தாமாகவே ஒருப்பட்டு முன் வந்திருக்கிறார்கள்.

இறைவனின் அருளுக்குரிய உலகளாவிய ஒரு சமுதாயத்தில் இணைந்துவிட்ட அவர்களை தமிழ் முஸ்லிம் சமுதாயம் சுபசோபனம் கூறி, அணைத்து ஆரத்தழுவி மகிழ்கிறது.

“நடக்கலாமா இந்த நன்மை” எனக்கூறி நிற்கிறார்கள் ஒரு சாரார்.

“இனி நடப்பதைத் தடுக்காமல் விடமாட்டோம்” என சீறி நிற்கிறார்கள் மற்றொரு சாரார்.

விரும்பிய நெறியை – மதத்தைப் பேண, பின்பற்ற பிரச்சாரம் செய்ய உள்ள உரிமையை அடிப்படையான சட்ட உரிமையாகத் தந்துள்ள நாடு இந்தியா.

இந்த உரிமையை உரிமையாக்கிக் கொண்ட மக்களுக்கு உரியதைத் தடுத்து நிறுத்துவோம் என நீட்டி முழங்குவோர் யாராயினும், அவர்கள் இந்த நாட்டு அரசியல் அமைப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் குற்றவாளிகள் என்பதை மறந்துவிடக் கூடாது.

பேச்சுரிமை வேண்டும் :

எழுத்துரிமை வேண்டும் எனப் போராடும் வீரர்கள் இவ்விரு உரிமைகளையும் பயன்படுத்தி, இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள எண்ண உரிமையை – மத உரிமையைச் சிதைக்க வேண்டுமென முற்படுவது எவ்வளவு எதிர்ப்பு, ஏளனம், ஏச்சுப் பேச்சு, அவதூறு, கொடுமை இத்தனையையும் எதிர்நோக்கி, கடந்த 14 நூற்றாண்டுகள் ஏறு நடைபோட்டு வந்திருப்பது இஸ்லாமிய சமுதாயம்.

அது தன் எண்ணிக்கை பலத்தை அல்ல; இறைவனின் பேருதவியை எதிர்பார்த்து வாழும் சமுதாயம், இறைவனால் பாதுகாக்கப் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்ட சமுதாயம்.

பரந்து விரிந்த பேரரசுகளைக் கட்டியாண்ட ஃபிர்அவ்ன்களையும், இறைவனைவிடத் தன்னை மேன்மையாக்கிப் பேசிய நம்ரூதுகளையும், அவர்களின் ஆர்ப்பாட்டங்களையும், அடக்குமுறைகளையும் கண்ட சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம்.

இந்தச் சமுதாயத்தில் இணைந்த புதிய சகோதரர்களுக்கு எந்தப் பொல்லாங்கும் நேருவதை இல்லாமல் ஆக்குவதற்குரிய பொறுப்பு தங்களுக்கும் இருக்கிறது என்பதை எந்த முஸ்லிமும் மறந்துவிடுவதற்கில்லை; மறப்பதும் இல்லை.

“ரமலான்” என்ற புனித மாதத்தின் பகற்காலங்களில் உண்ணாமல் நோன்பு நோற்று எண்ணங்களையெல்லாம் இறைவழியில் செலுத்தி, தவ வாழ்வு வாழ்ந்த இஸ்லாமியப் பெருமக்கள், நம் புதிய சகோதரர்களின் நிம்மதியான வாழ்வுக்காக செய்யும் “துஆ’’ அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படும் என்பது உறுதியாகும். எனவே அவர்களுடைய நல்வாழ்வுக்காக “துஆ”ச் செய்யுமாறு சமுதாயப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். வள்ளல் பெருமானாரின் தலையைக் கொய்ய வாளெடுத்து சூளுரைத்து வந்தவர்களையும், வள்ளல் நபி காட்டிய அறநெறியின் திருக்காவலர்களாகக் கண்ட வரலாறு, இஸ்லாமிய வரலாறு.

சமுதாயத்திற்கு எதிராக சலசலப்புக் காட்டுவோருக்கும், சஞ்சல மொழி கூறுவோருக்கும் நல்வழி காட்டியருளுமாறு வல்ல அல்லாஹ்விடத்தில் இந்த ரமலானிலும் – புனித பெருநாள் அன்றும் பிரார்த்திபோமாக …

( 1981-ல் எழுதப்பட்ட கட்டுரை )

 

  • தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2015

 

 

News

Read Previous

PUTHINAM

Read Next

அன்னை

Leave a Reply

Your email address will not be published.