கீழக்கரை சதக்கத்துல்லாஹ் அப்பா !

Vinkmag ad

கீழக்கரை சதக்கத்துல்லாஹ் அப்பா !

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரைப்பட்டினம் கீழக்கரை. இங்கிருந்து அக்காலத்தில் அரபு, கிரீஸ், ரோம், சீனா போன்ற நாடுகளுக்கு முத்து, பவளம், வாசனைத்திரவியங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அரபி பாடல்களில் கிற்கிறா என சொல்லப்படுகிற கீழக்கரையில், தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்தவர் தான் இமாம் சதக்கத்துல்லாஹ் அப்பா. உரைநடை இலக்கியங்கள், கவிதை இலக்கியங்களை அதிக அளவில் இயற்றியவர். தமிழகத்தில் பிறந்து அரபி மொழியில் அற்புத ஞானம் வாய்க்கப்பெற்ற இவர் மீது பலரும் புகழ் பாமாலைகள் சூட்டும் வகையில் வாழ்ந்து மறைந்த பெருமைக்குரியவர் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் 1042-இல் பிறந்து 1115-இல் கிழக்கரையில் மறைந்தவர் சதக்கத்துல்லாஹ் அப்பா.

காயல்பட்டினம் சுலைமான் வலி-ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேசுவரத்தைச் சேர்ந்த பாத்திமா தம்பதியரின் 3 ஆவது மகன். இவருக்கு மரியம் என்ற மனைவி, முஹம்மது லெப்பை ஆலிம் என்ற ஒரு மகனும், 5 மகள்களும் இருந்துள்ளனர்.

காயல்பட்டினத்தில் வாழ்ந்து வந்த சதக்கத்துல்லாஹ், பின்னர் தனது குடும்பத்தினருடன் கீழக்கரைக்கு வந்து தங்கி இஸ்லாமிய மார்க்க வழிமுறைகளை முறையாக பின்பற்றினார் என்றும், உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுத பல தகவல்களை தந்துதவியதாகவும், இஸ்லாமிய தமிழ் இலக்கணத்தையும் வளப்படுத்தியவர் என்றும், பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவை ஆண்ட மன்னர் ஒளரங்கசீப்புக்கும், இவருக்கும் சிறந்த நட்புறவு இருந்துள்ளது. ஒளரங்கசீப் முயற்சியால் தொகுக்கப்பட்ட பதாவா ஆலங்கீர் எனப்படும் மார்க்க சட்டங்களின் தொகுப்பு செம்மையுறவும், தர்சே நிஜாமி என்ற குர்ஆன் பயிற்று நூல் சிறப்பாக வெளிவருவதற்கும், இவருடைய பங்களிப்பு அளப்பரியது என புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் கிடைக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன.

மார்க்க வரம்பை மீறாமலும், கல்வி ஒழுக்கமுடன் வாழ்ந்தும், சிதைந்து போயிருந்த இஸ்லாமியப் பழக்க வழக்கங்களை சீர்திருத்தியவர், 17 ஆம் நூற்றாண்டின் சிறந்த சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்ததாக கூறப்படுகிறது. இவரது அடக்கஸ்தலம், கீழக்கரையில் கேரள மாநிலத்தவர்களால் அமைக்கப்பட்ட கல்லுப்பள்ளி எனப்படும் ஜும்மா மசூதி வளாகத்தில் வலப்புறத்திலும், இவரது நண்பரான வள்ளல் சீதக்காதி மரைக்காயரின் சமாதி இடதுபுறத்திலும் அமைந்துள்ளது.

ஏர்வாடி தர்காவுக்குச் சென்று திரும்புபவர்கள், சதக்கத்துல்லாஹ் அப்பா தர்காவுக்கு வருவதும் வழக்கமாக உள்ளது. இவரது அடக்க ஸ்தலத்தை மொகலாய மன்னர் ஒளரங்கசீப் முயற்சியில் அழகிய மண்டபமாக கீழக்கரையில் காட்சியளிப்பதாகவும், இவரது உடலைத் தாங்கி வந்த பித்தளையால் செய்யப்பட்ட பிரேதப் பெட்டி, மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் இவருக்காக பிரத்யேகமாக செய்து அனுப்பி வைத்ததாகவும், இது இவரது சமாதியின் மேல் மன்னரின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது.

அரசருக்கு சதக்கத்துல்லாஹ் அப்பாவின் இரு நிபந்தனைகள் :

ஒரு முறை மன்னர் இவருக்கு எழுதிய கடிதத்தில் தம்முடைய பிரதிநிதியாக வங்காளத்தில் ஆட்சி செய்யத் தகுதியான ஒரு சீடரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். மன்னரின் வேண்டுகோளை ஏற்று, தனது நண்பரான சீதக்காதி மரைக்காயரை அப்பதவிக்கு பரிந்துரை செய்தார். சீதக்காதியும் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். வங்காளம் சென்று பதவியிலிருந்த அவரோ அங்குள்ள தட்ப வெட்பநிலை ஒத்து வராததால், சில மாதங்களில் அங்கிருந்து திரும்பி விட்டார்.

சதக்கத்துல்லாஹ் அப்பா மீது மன்னருக்கு நாளுக்கு நாள் அன்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, தலைநகரான தில்லி மாநகருக்கு வந்து அங்கேயே தங்கி இருக்க வேண்டும் என தூது அனுப்பினார். மன்னரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த சதக்கத்துல்லாஹ் அப்பா, ‘இங்கு எளிய முறையில் எனது கடமைகளை செய்து வருகிறேன்’ என்றும் ‘நெடுந்தூரப் பயணத்தை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன்’ என்றும் சொல்லு அனுப்பினாராம்.

மன்னர் ஒளரங்கசீப்போ, தென்னகத்தில் எனது சார்பில் அரசாங்கப் பிரதிநிதியாக தாங்கள் இருக்க வேண்டும் எனக்கூறி, அதை செப்புப் பட்டயமாக எழுதி, அரச குடும்பத்தினர் மூலமாக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

‘அரசாங்க வேலை எதுவும் எனக்கு வேண்டாம்’ என்றாராம். உடனடியாக, மன்னரோ, உங்களுக்கு அந்தப் பதவியில் இருக்க பிடிக்கவில்லையென்றால், உங்கள் மகனையாவது அந்தப் பதவிக்கு நியமிப்போமே’ என்ற மன்னரின் வேண்டுகோளை தவிர்க்க விரும்பாமல், மன்னருக்கு சம்பளமில்லாத கெளரவப் பதவியாக இருக்க வேண்டும் என்றும், மற்றொன்று நீதித்துறை அலுவல்கள் எதிலும் எக்காரணத்தைக் கொண்டும் அரசு தலையிடக்கூடாது என்றும் இரு நிபந்தனைகளை விதித்தாராம்.

மன்னரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, அவரது ஒரே மகனான முஹம்மது லெப்பை ஆலிம்மை மதுரை, காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கான அதிகாரியாக நியமித்ததாகவும், அவரும் மார்க்கத் தீர்ப்புகள் வழங்கும் தலைமை நீதிபதியாக திறம்பட பணியாற்றியதாக கூறப்படுகிறது.

-சி.வ.சு. ஜெகஜோதி

 

நன்றி : தினமணி – ஈகைப் பெருநாள் மலர் 2015

 

News

Read Previous

சுறா, செல்ஃபி மற்றும் முதுமை!

Read Next

நன்றி

Leave a Reply

Your email address will not be published.