பொறுப்பினைச் சுமத்தும் சட்டங்கள் தேவை

Vinkmag ad
பொறுப்பினைச் சுமத்தும் சட்டங்கள் தேவை
                                                            பேராசிரியர் கே. ராஜு
பாதுகாப்பான உணவு எல்லா நேரங்களிலும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் நமது கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டியது மிகமிக முக்கியம். விவசாயம், உணவு சம்பந்தமான உள்நாட்டுக் கொள்கைகள், மானியங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதற்கேற்ற விதத்தில் அமைய வேண்டும். உணவுப் பொருள் தயாரிப்பு, தரக் கண்காணிப்பு, முடிவுகள் அறிவிப்பு, பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கைகள், தேவையெனில் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளல் போன்ற பல்வேறு அம்சங்களில் ஆரோக்கியமான, வெளிப்படையான அமைப்புகள் இயங்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். உணவு தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பொறுப்பினைச் சுமத்தும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதைவிட முக்கியம், அவை காகிதச் சட்டங்களாக நின்றுவிடாமல் அமுல்படுத்தப்படவும் வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்பது அதை சந்தைக்குக் கொண்டுவருபவரின் முழுப் பொறுப்பாக ஆக்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களில் நச்சுப் பொருட்கள், விலங்கியல் மருத்துவத்தில் பயன்படும் மருந்துகள், பாதரசம்-ஆர்சனிக் போன்ற விஷத்தன்மையுள்ள உலோகங்கள்.. பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரிலும் குளிர்பானங்களிலும் பூச்சி மருந்துகளின் மிச்சங்கள்.. தேனிலும் கோழிக்கறியிலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள்.. சக்தி கொடுப்பதாகக் கூறப்படும் பானங்களில் அளவுக்கதிகமான காஃபின்… நன்கு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் எண்ணெய்களிலும் அதிக அளவில் உப்பு, சர்க்கரை, கெட்ட கொழுப்பு ஆகியவை கலந்திருக்கின்றன என்பது கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் கிடைத்த அனுபவம். உணவுப் பொருட்களைத் தவிர வேறு பொருட்களை எடுத்துக் கொண்டால், அழகு சாதனங்களில் விஷத்தன்மையுள்ள உலோகங்களும் வர்ணக் கலவைகளில் காரீயமும் கலந்திருக்கின்றன. ஆனால் இந்தக் கலப்படங்களைப் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் மிகக் குறைவாக உள்ளது. எனவே, தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடைபெற வேண்டிய தேவை உள்ளது. பன்னாட்டு உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ந்த நாடுகளில் கறாரான தரக்கட்டுப்பாட்டினை ஏற்று செயல்படுகின்றன. அங்கெல்லாம் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை உடனடியாக சந்தையிலிருந்து விலக்கிக் கொண்டு நடந்துவிட்ட தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கவும் அவை தயங்குவதில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவை வேறுவிதமாக நடந்துகொள்கின்றன. பன்னாட்டு கம்பெனிகளிடம் நம் மத்திய மாநில அரசுகள் கைகட்டி சேவகம் செய்வதை அவை புரிந்துகொண்டு மக்களை பகடைக்காய்களாக உருட்டி விளையாடத் தயங்குவதே இல்லை. இயற்கை உணவுகளுக்கு கிராக்கி கூடிவருவதைப் பார்த்த அந்நிறுவனங்கள் அந்த சந்தையைக் கைப்பற்றவும் முனைந்திருக்கின்றன.  அரசு கண்காணித்து  அத்துமீறல்களைத் தடுத்துநிறுத்தும் என்று எதிர்பார்க்க முடியவில்லை. மக்களுடைய விழிப்புணர்வுதான் அரசை நிர்ப்பந்திக்க முடியும் என விரிவாகப் பேசி முடிக்கிறார் சுனிதா நாராயன்.

News

Read Previous

நன்னீர் அருந்திடுக ! தண்ணீர் மருந்தறிக !

Read Next

கல்வி

Leave a Reply

Your email address will not be published.