அழையா விருந்தாளி’ களால் வரும் ஆபத்துக்கள் !

Vinkmag ad

’அழையா விருந்தாளி’ களால்

வரும் ஆபத்துக்கள் !

மும்தாஜ் – காரைக்கால்

மழைக்காலம் வந்துவிட்டால், வீட்டுக்குள் சின்ன சின்ன பூச்சிகள், வண்டுகள் எல்லாம் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்துவிடும். அவற்றின் வருகையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது.

அவற்றில் சில நம்மை தொந்தரவு செய்யாமல் அதுவாகவே வந்து, அதுவாகவே போய் விடும். சில பூச்சிகள் நம்மை கேட்காமல் வீட்டினுள் வந்ததுமில்லாமல், நம்மை கடித்து விட்டு வேறு செல்லும். அது என்ன பூச்சி, அது கடித்தால் விஷம் ஏறுமா? ஏறாதா? என்று நமக்கு எதுவும் தெரியாது.

அது விஷப்பூச்சியோ, விஷமில்லாத பூச்சியோ, எது கடித்தாலும் சில முதலுதவிகளை உடனடியாக செய்துவிட்டால், அது கடித்ததால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

சரி, பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

வெங்காயம்

பூச்சி ஏதோ கடித்துவிட்டது என்று தெரிந்ததும், ஒரு வெங்காயத்தை எடுத்து நறுக்கி அதை கடிபட்ட இடத்தில் வைத்து தேய்க்க வேண்டும். வெங்காயச் சாறு கடிபட்ட இடத்தில் படவேண்டும். இது அரிப்பை கட்டுப்படுத்துவதோடு, பூச்சி கடித்ததினால் ஏதாவது விஷம் ஏறியிருந்தாலும் அதை தடுத்து விடும். திரும்ப திரும்ப இதை செய்வதால் பூச்சி கடித்த சுவடே தெரியாது. சிலந்தி, தேனீ, எறும்பு இப்படி எது கடித்தாலும் வெங்காயம் நல்ல பலனை தரும்.

பால்

பூச்சி கடியால் ஏற்படும் எரிச்சலை எடுக்க பாலை பயன்படுத்தலாம். கொஞ்சம் பாலோடு, தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து பூச்சி கடித்த இடத்தில் தடவ வேண்டும். இது விஷத்தை போக்கி வலி, எரிச்சலை கட்டுப்படுத்தும். பாலிற்கு பதில் தயிரையும் பயன்படுத்தலாம்.

உப்பு

பூச்சி கடித்த இடத்தை உப்பு தண்ணீர் கொண்டு கழுவலாம். பிறகு அந்த இடத்தில் தேங்காய் எண்ணெயெ தடவிக் கொள்ளலாம். உப்பு தண்ணீரால் கழுவும் போது முதலில் எரியும் பிறகு சரியாகிவிடும்.

பூண்டு

பூண்டின் வாசனைக்கு பூச்சிகள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும். மலை ஏறுபவர்கள் அதற்கு முன் தினம் உணவில் பூண்டை கட்டாயம் சேர்த்துக் கொள்வார்கள். வியர்வையில் பூண்டு நாற்றம் வந்தால் பூச்சிகள் உங்களை நெருங்கவே பயப்படும். பூச்சிகள் கடித்துவிட்டால் அந்த இடத்தில் பூண்டை அரைத்து தடவ நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை தோல்

பூச்சி கடித்ததும் அந்த இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் வாடை வரும் என்று நினைப்பவர்கள் வெங்காயத்திற்கு பதில் ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை தோலை பயன்படுத்தலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்

பூச்சி கடித்துவிட்டால் அந்த இடத்தில் ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு பஞ்சில் தொட்டு வைக்கலாம். இது பூச்சி கடித்த இடத்தில் ஏற்படும் அரிப்பை தடுக்கும். சாதாரண வினிகரையும் பயன்படுத்தலாம். ஆனால் ஆப்பிள் சிடர் வினிகருக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வெனிலா

வெனிலா எசன்சுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து கை – கால்களில் பூசிக் கொண்டு படுத்தால் கொசுக்கள் உங்களை நெருங்கவே நெருங்காது.

 

( நர்கிஸ் – செப்டம்பர் 2015 )

News

Read Previous

படிக்கலாம் வாங்க

Read Next

மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகளும், கதைகளும் படிக்க

Leave a Reply

Your email address will not be published.