பெண்ணே..

Vinkmag ad
பெண்ணே..
===================================ருத்ரா
இந்திய சரித்திரம்
இன்னும் இமை திறக்கவில்லை.
அறிவு நூல்கள்
ஆயிரம்..ஆயிரம்..
ஆனாலும்
உன் வளையல் சத்தங்களுக்கும்
மல்லிகைப் பூ குண்டு வெடிப்புகளுக்கும்
மாங்கல்ய மாஞ்சாக்களின்
கண்ணாடித்தூள் அறுப்புக்காயங்களுக்கும்
இங்கே
எழுதாத இதிகாசங்கள்
எத்தனையோ? எத்தனையோ?
பிறப்பு எனும்
பிரபஞ்ச வாசலில்
மாணிக்கவெளியின்
மாயக்கணிதப்புதிரை
நீ விடுவிக்கின்றாய்.
ஆனால்
இந்த மண்ணின் பாஷ்யங்கள்
பிறப்பை தீட்டாக்கி
மோட்சத்தை தேடுகின்றன.
உலகத்திலேயே
கடைந்தெடுத்த போலித்தனம் அல்லவா இது!
தங்களுக்குள்ளேயே
பூட்டிக்கொண்டு
விடுதலைக்கு வீறிடுகின்ற‌
குரல்களில் தான்
ஆத்மா முதன் முதலில்
கசாப்பு செய்யப்படுகிறது.
ஆத்மாவின் “அகர முதல”வில்
பெண் தானே முதலெழுத்து.
அதை முண்டனம் செய்துவிட்டு
இறைமையின்
எந்த முகத்தை நோக்கி
இவர்கள்
கூக்குரல் எழுப்புகிறார்கள்.
பெண்களே!
கவனமாயிருங்கள்.
இந்த கணினிகளைக்கூட‌
குவித்து வைத்து சிதையடுக்கி
உங்களுக்கு
அக்கினிக்குளியல்
அரங்கேற்றப்பார்ப்பார்கள்.
ராஜாராம் மோகன் ராய்கள்
இந்த எருக்கஞ்செடிக்களின் காட்டிலிருந்து
இன்னும் ஒரு தடவை
வருவார் என எதிர்பார்க்க‌
இங்கே எந்த உத்தரவாதமும் இல்லை.
இந்தியாவின் பழமைவாதம்
இதோ
உங்கள் விலாப்புறத்திலேயே
கீதங்களாலும் சுலோகங்களாலும்
கவரி வீசிக் கொண்டிருக்கலாம்.
உன் உரிமைக்கு
கதிர்வீச்சுகள் நிறைந்த
ஒரு சமுதாய விஞ்ஞானம்
பின் புலமாய் இருப்பதை மறக்காதே!
காதலும்
கல்யாணமும்
உன்னை சிறைவைக்கும்
வெறும் “கட் அவுட்டு”கள் தான்.
மானிடத்தின் உறுதியான கற்கோட்டையை
நீயே தான் நிர்மாணிக்க முடியும்.
அதற்குள் இந்த‌
மீரா பஜன்களின்
ஊது பத்திகளில் கரைந்து போய்விடாதே.
====================================================================

News

Read Previous

திருநாதர் குன்று

Read Next

தில்லை ரகசியம் – நாவல்

Leave a Reply

Your email address will not be published.