அப்துல் கலாம்

Vinkmag ad

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

 
அப்துல் கலாம் என்னும்  அவதார புருஷனின் 
சப்தம்  அடங்கியது , சகாப்தம் முடிந்தது .
நிசப்தம் நிறைந்தது நெஞ்சங்களிலே
அடக்கம் நிறைந்த  அற்புத மாமனிதர்
அடக்கமானார் ராமேஸ்வரத்தில் . 

புனிதமான ராமேஸ்வரம் இந்த மா
மனிதரால் மேலும் புனிதமடைந்தது

ராமேஸ்வரந்தன்னில் , ஏழையாய்ப் பிறந்தபோதும் 
தாமே உழைப்பின் மூலம் , தளராதுயர்ந்து நின்றார் 
மாமேதையாகி   இந்த மாநிலம் போற்றச்  செய்தார் 
கோமேதகம் போல ஒளி குன்றாது பரிமளித்தார்


 
பிறை மதத்தில் பிறந்தவர் பிற மதமும் நேசித்தவர் 
குரானைப் படித்தவர் குறள்வழி வாழ்ந்தவர் .
சிறாரை நேசித்தவர் , சிதிக்கச் செய்தவர் 
குறைகள் அற்றவர் , குன்றாய் நிமிர்ந்தவர் 
 
அணு விஞ்ஞானத்தை அணு அணுவாய் அறிந்தவர் 
அணுவளவும் தயங்காது அனைவருக்கும் போதித்தவர் 
அணுவை ஆக்கத்திற்கே  பயன்படுத்தச் சொன்னவர் 
அணுகுதற்கு எளியவர் பழகுதற்கு இனியவர் 
 
விஞ்ஞான உலகினில்  விந்தைகள் புரிந்தவர் 
அஞ்ஞானம் போக்க  அறிவுரைகள்   சொன்னவர் 
மெய்ஞான வழியில் மேம்பட வாழ்ந்தவர் 
தன் ஞானம் பற்றி தலைக்கனம்  அற்றவர்  
இஞ்ஞானம் பெற்ற விஞ்ஞானி எவருளர் .
இஞ்ஞானியை  நாம் எஞ்ஞான்றும் மறவோம் , 

 

 
ஜனாதிபதி மாளிகையிலிருந்தபோது
ஊரையே கூட்டி வைத்து கொட்டமடித்தவர்கள் பலர்.
காலி செய்யும்பொழுது இருநூறு பெட்டிகளை
அள்ளிச்சென்றவர்கள்  சிலர். – ஆனால்
 

சொந்தங்களையும் அண்டவிடாமல்
வந்தவர்களுக்கு எல்லாம்
சொந்தச்செலவில் சோறு போட்ட
விந்தை மனிதர் இவரேயன்றோ . 

பதவியிலிருக்கும்போது , பதவியின் அதிகாரத்தால்
பதவிசுகம் அனுபவித்து பலகோடி சேர்ப்போரிடையே
பதவிசாய்ப் பணிபுரிந்து  , பதவிக்கே பெருமைசேர்த்தவரின்
பாதாரவிந்தங்களை பணிந்து   வணங்குகிறேன் . 

மாணவ சமுதாயம் மாண்புற வழிகள் சொன்னார்
இளைஞர் சமுதாயம் எழுச்சியுற எண்ணம் கொண்டார்
பாரதம் வல்லரசாக , பார்புகழ்  நல்லரசாக
பாதையைக் காட்டிச்சென்ற  ,பாரதத் தலைவன் வழியில்
அவர்கண்ட கனவை , நம் கனவாய் வரித்து அந்த
கனவை நனவாக்குவதே  கடமையாய் உறுதி கொள்வோம். 

மேகாலயாவில் மாணவர் பல்கலைக்கழகந்தன்னில்
மேன்மையடயச் செய்யும் மேதகு உரையாற்றிடவே
மேடையில் ஏறி நின்ற மேதையின் இதயம் நின்று
வேதனையளித்ததுவே , வெற்றிடம் தோன்றியதே . 

ஆக்கபூர்வமாய் வாழ்ந்து நெஞ்சில்
நீக்கமற நிறைந்த உடல்
பேக்கரும்பில்  மீளாத 
தூக்கமதைத் தழுவிடுதே 

கண்ணீரல்ல அந்த மாமனிதருக்கு அஞ்சலி
மண்ணின் மைந்தரின் மகத்தான கனவுகளை
எண்ணத்தில் நிறுத்தி நனவாக்கினால்தானே
விண்ணில் இருந்து வழங்கிடுவார் ஆசிகளை . 

அவரது கனவுகளை
அனைவரும் ஸ்வீ கரிக்கலாம்
அதற்காக அயராது உழைக்கலாம் .
அனைத்து மதங்களையும் நேசிக்கலாம்
நேர்மையை வாழ்வில் கடைபிடிக்கலாம்
தேசத்தை என்றும் நேசிக்கலாம்
எழிமையாய் வாழப் பழகலாம்
கல்வியை மாணவருக்கு போதிக்கலாம்
அறிவையும் ஆற்றலையும் வளர்க் கலாம்
வறியவர்க்கு உதவிகள் வழங்கலாம் .
இளைஞர்களை ஊக்குவிக்கலாம் .
இந்தியாவை வல்லரசாக்கலாம்
இவ்வையகமே இதைக்கண்டு வியக்கலாம்
வானவியல் உள்ளவரை வாழ்க அப்துல் கலாம் . 

 
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
30 .07.2015

News

Read Previous

வீடுகளில் புற்றுநோயை வளர்க்கிறோமா?

Read Next

மூலிகை வளம்

Leave a Reply

Your email address will not be published.