டாக்டர் அப்துல் கலாம்

Vinkmag ad

டாக்டர் அப்துல் கலாம் 

 
 
மரணத்தின்மூலம் 
அதிகம் செய்தியளித்துச் சென்றிருப்பவர் 
எஸ் வி வேணுகோபாலன் 
ரணம் மிகப் பெரிய ஆசிரியர். வாழ்க்கை போதிக்காத பாடங்களை அல்லது வாழ்க்கை சொல்லித் தந்தால் மதிக்கத் தவறுகிற விஷயங்களை மரணம் சொல்லித் தரும்போது சமூகம் அதிர்ந்துபோய் கற்றுக் கொள்கிறது.  யாராலும் கொண்டாடப் படாத உயிர்கள் விடைபெறும்போதுகூட மிச்ச சொச்ச செய்திகள் சேகரமாகின்றன. அதிகம் பேசப்பட்ட மனிதர்களின் பிரிவு சமூகத்தை உள்ளார்ந்த முறையில் விசும்ப வைக்கிறது. அண்மைக் காலத்தில் அப்படியான மரணப் பெருவாழ்வைப் பெற்றவராக ஒரு சிலரை உலகம் குறித்து வைத்திருக்கிறது. பூபென் ஹசாரிகா என்னும் அற்புத இசைக் கலைஞன் மரணம் லட்சக்கணக்கான ரசிக இதயங்களை நாட்கணக்கில் குமுற வைத்ததை ஃபிரண்ட்லைன் இதழில் சில ஆண்டுகளுக்குமுன் வாசித்தபோது மிகப் பெரிய மரியாதை ஏற்பட்டது. வெனிசுவேலா மக்களின் நாயகன் ஹியுகோ சாவேஸ் மறைவு இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் அதிர்ச்சிக் கண்ணீரைப் பெருக்கியது. வயதை வைத்து ஒரு மரணம் சமாதானப்படுத்துவதில்லை என்பதை கடந்த பத்தாண்டுகளில் சில அரிய மனிதர்களது இறப்பின் போது அறிந்து கொள்ள முடிந்தது. டாக்டர் அப்துல் கலாம் மறைவு உலகம் முழுக்க பேசப்படும் இந்த நேரத்தில், அவரது வாழ்க்கையைக் காட்டிலும் மரணம் வழங்கிக் கொண்டிருக்கும் செய்திகள் புதிய கற்றல் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
மொழி, மாநிலம், மதம், பாலினம், கல்வி, மேதைமை, பதவி, பட்டம், பெருமை. புகழ் இவற்றைக் கடந்து கலாம் சாதாரண மக்களுக்கு அறிந்த பெயராக இருக்கிறார் என்பது பெருவியப்பை ஏற்படுத்துகிறது. ஊடகங்கள் கொடுத்த வெளிச்சம் என்று அதை எளிமையாகப் பார்த்துவிட முடியாது. புது தில்லியின் அசல் வடக்கத்திய முகங்களோடு அலைமோதி எட்டி எட்டி அவரது முகத்தைக் காண்பதற்குக் காத்திருந்த இளைஞர்களுக்கு அவர் எப்படி அறிமுகமானார்?அவர்களிடம் அவருக்கு சொல்ல என்ன இருந்தது ? அவர்கள் அவரிடம் என்ன உறுதிமொழியை அவரது வாழ்வுக்குப் பின்னும் அவரது உள்ளங்கையில் அடித்துச் சத்தியம் செய்துவிட்டுப் போக வந்திருந்தனர் ?
அப்துல் கலாம் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்ட அன்றைய இரவில் அடுத்த நாற்பதாவது நிமிடம் பதினோராம் வகுப்பு மாணவி நிவேதிதா பிரியா பெங்களூரிலிருந்து மின்னஞ்சலில் அற்புதமான ஓர் அஞ்சலிக் கட்டுரையை அவர் நினைவுக்கு வழங்கி இருந்தார். அந்தக் குட்டிப் பெண்ணோடு கலாம் இன்னும்கூட பல்லாண்டுகள் பேசிக் கொண்டிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. இது எப்படி சாத்தியம் ஆகிறது ?
மிகப் பெரிய நாடகக் கலைஞர் தியாகி விஸ்வநாத தாஸ் சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரிதும் துணிச்சலாக சுதேசி இயக்க மேடையாக புராண நாடகங்களையும் நிகழ்த்தியவர், தான் விரும்பியவாறே நாடக மேடையில் நடித்துக் கொண்டிருந்தபோதே சென்னை யானை கவுனி அருகில் ஒத்தவாடை நாடகக் கொட்டகையில் உயிர் நீத்தார். ஆசிரியராகத் தாம் நினைவு கூரப்படுவதே தமக்குப் பேரின்பம் தரும் என்று சொல்லிக் கொண்டிருந்த கலாம், மாணவர்களிடையே கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் விடை பெற்றுக் கொண்டது, ஒரு போர் வீரனுக்கு களத்தில் ஏற்படும் மரணத்தை ஒத்தது என்று படுகிறது. தாழ்ந்த கடற்கரைப் பரப்பில் ஒரு படகோட்டியின் மகனாகப் பிறந்தவர் மலைபிரதேச ஷில்லாங் நகரில் (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரம்!) மறைந்தது அவர் வாழ்க்கையில் எட்டிய உயரத்தின் குறியீடு என்று மளிகைக் கடைக்கார அன்பர் ஞானராஜ் குறிப்பிட்டார். மாணவர்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும், கற்பித்தலுக்கும் இடையே அவரது இருப்பு காலத்தைக் கடந்து நிலைத்துவிட்டது.
பரண்மீது இசைக் கருவிகளை பத்திரம் செய்துவிட்ட வீடுகளில் இருப்போரும், அறிவியல் ஆசிரியருக்கும் இசைக்கும் என்ன தொடர்பு என்று பேசிக் கொண்டிருப்போரும், எப்போதும் படிப்பு படிப்பு என்பவர்கள்தான் மேலேறிச் செல்ல முடியும் என்று மாணவர்களைக் கொன்று தள்ளிக் கொண்டிருப்போரும் வீணையைக் கையில் ஏந்திய கலைவாணராக அப்துல் கலாம் புகைப்படம் நாளேடுகளில் தட்டுப்பட்டதைப் பார்த்திருந்தால் கொஞ்சம் குடலைப் புரட்டிப் போடக் கூடும். நடக்கட்டும். எல்லாம் நன்மைக்கே.
குழந்தைகளைப் பார்க்கையில் இயல்பாகப் புன்னகைக்கவும், குழந்தைமையோடு சிரிக்கவும் முடிகிற மனிதர்களை அடுத்தடுத்த தலைமுறை குழந்தைகளும் மறக்கப் போவதில்லை. உள்ளத்தின் கதவுகள் கண்களடா என்ற கவிஞன் மகத்தானவன். உள்ளம் திறக்காத யாரது கண்களிலும் உண்மையான மலர்ச்சி சாத்தியப்படுவதில்லை.  எல்லோருக்குமாகத் தன்னை ஒப்புக் கொடுக்கிற இதயம் எத்தனை இலேசாகி விடுகிறது!
அவரை ஏன் உனக்குப் பிடிக்கிறது என்ற கேள்விக்கு எந்த அசாதாரணமான விடையும் கிடைக்கும் என்று கூடத் தெரியவில்லை. அதை எப்படி சார் சொல்றது, ஆனால் டிவியில் அவர்  உடலைக் காட்டினப்ப கண் தானாக் கலங்குது என்றார் வழக்கமாகத் தெருவில் இளநீர் விற்றுச் செல்லும் ரமேஷ். எல் கே ஜி, யு கே ஜி குழந்தைங்க என் ஆட்டோவில் பள்ளிக்கூடம்போகும்போது ஏய் அந்தத் தாத்தா போயிட்டாருடி, டிவில எத்தனை தடவை பாத்திருப்போம் என்று பேசிக்கிட்டு வருதுங்க சார், அதுங்களுக்கு மனசுக்குப் பிடிச்சுப் போன நல்ல ஆத்மா சார் என்றார் முருகன்.  இப்படி எல்லை கடந்து நேசிக்கப்படும் இடத்தை அவரால் எப்படி சென்றடைய முடிந்தது?
எளிமையைத் தவமாகக் கொள்வோரை உலகம் பரிகசிக்கும் என்ற பொதுமொழியை அவரால் எப்படி பொய்யாக்க முடிந்தது? தாய்மொழிவழி கற்றலை தனது மக்களே வெறுத்துப் போகும்படி செய்து அரசுப் பள்ளிகளும் இனி ஆங்கிலவழி கற்பித்தலையே முன்னிலைப்படுத்தும் என்று போய்க் கொண்டிருக்கும் சம காலச் சூழலில் கலாமின் கல்விச் சூழலும், போராட்டங்களும், முன்னேற்றமும் எப்படி மரியாதை பெறத் தக்கதாகிறது?
அறிவு, ஆற்றல், மூளை, சிந்தனை, படைப்பூக்கம், திறமை போன்றவை பிறப்பினால், பரம்பரையினால், மரபின் வேர்களால்தான் தீர்மானமாகின்றன என்று பொதுபுத்தியில் காலகாலமாக ஏற்றப்பட்டிருக்கும் மண்ணில் ஒரு கடற்கரையோரத்தின் இஸ்லாமிய படகோட்டிக் குடும்பத்து வாரிசு எப்படி அய்யா மக்கள் குடியரசுத் தலைவராக ஏற்கப்பட முடிந்ததை இன்று உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது?
அப்துல் கலாம் அறிவியல் உலகில் கண்டுபிடிப்புகள் எதிலும் சாதனை படைத்தவரல்ல. அப்படி சாதித்துக் கொண்டிருப்போர் பலரை சமூகத்திற்கு அடையாளப்படுத்தும் சிரமங்களை அரசோ, ஊடகங்களோ மேற்கொள்வதுமில்லை. அவர் அணு விஞ்ஞானியுமல்ல. அவர் ராக்கெட் தொழில்நுட்பத்தைச் சார்ந்தே அதிகம் இயங்கிவர். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் படிக்கட்டுகளை உருவாக்கியவர், அறிவியலில் ஆர்வத்தை இடைவிடாது தூண்டியவர் என்கிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா நடராசன். 1999 மே 11 அன்று பொக்ரானில் அணுகுண்டு வெடிப்பு பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியதில் அவரது முக்கிய பங்கு குறித்து சாதாரண மக்களுக்கு ஓரளவுக்குமேல் தெரிந்திருக்கப் போவதுமில்லை, இன்று பேசப்படும் அளவுக்கு.
குடியரசுத் தலைவர்கள் எல்லோரும் நினைவில் நிற்பதில்லை. இப்போது இருப்பவர் யார், முந்தைய குடியரசுத் தலைவர் யார் என்று கேட்டுப் பாருங்கள், முப்பது விழுக்காட்டுக்குமேல் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டுப் போவார்கள். கலாம் எப்படி நினைவில் நின்றுவிட முடிந்தது?
அவரது சிந்தனையோட்டங்கள், கருத்துக்கள் அனைத்துமே ஆதரவு பெற்றவை என்று சொல்வதற்கில்லை. சிலவற்றில் அவரோடு உடன்பட இயலாது போனவர்களாலும் அவர் புறக்கணிக்கப் படவில்லை. இது சம கால அரசியல் சமூக சூழலில் மிகவும் வித்தியாசமான அம்சம். எப்படி இது சாத்தியமானது”
வெகுளித்தனமான முகம், மென்மையான புன்னகை, இயங்கிக் கொண்டே இருக்கத் துடித்த வாழ்க்கை, கற்பித்தலில் இருந்த பேரார்வம், இளைய தலைமுறையோடு சுற்றிக் கொண்டுவிட்ட அவரது தொப்புள்கொடி, சபித்தல்-புலம்பல்-வெறுத்தல்-விலகிப் போதல் இவற்றுக்கு மாறாக நம்பிக்கை விதைத்தல், உந்தித் தள்ளுதல், காட்சிப் படுத்துதல், உடனிருந்து இயக்குதல் என அமைந்திருந்த அவரது நடவடிக்கைகள் கண்ணுக்குப் புலப்படாத வீச்சு மிகுந்த உளவியல் எதிர்வினைகளை சமூகத்தில் ஏற்படுத்தவே செய்திருக்கிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்ற அடையாளம் இன்று அரசியலுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரின் காரணமாக எதிர்மறை நிலையிலிருந்து மரியாதை ஏற்படுத்தி இருக்கக் கூடும். சற்று நிதானத்தோடு கடக்க வேண்டிய பள்ளங்கள் நிறைந்த சாலை இது. காசு கருதாத மனிதர்களை காசு பற்றிய கவலையில் இருப்போரும் கொண்டாடத் தான் செய்கின்றனர். அதன் உளவியல் மிகப் பெரிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது.

கற்றலைத் தொடராத யாரும் தொடர்ந்து கற்பித்துக் கொண்டிருக்க முடியாது. அப்துல் கலாம் தொடர்ந்து ஒரு மாணவராகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டிருந்த நிலையினால் தான் சிறந்த ஆசிரியராகத் திகழவும் முடிந்தது என்பது கவனிக்கத் தக்கது. கற்றல் என்பது அடுத்தவரை மதிப்பதாகிறது. கற்பித்தலும் அதே நேர்க்கோட்டில் அமைவது அற்புதமான முரண்.  ஆசிரியர் – மாணவர் பரஸ்பர உறவு நிலையில் அப்துல் கலாம் மகத்தான பரிசோதனைகளை மிக இயல்பாகவே வெற்றிகரமாக நடத்திக் காட்டிக் கொண்டிருந்தார் என்று கருத இடமிருக்கிறது.
புகழைப் புறந்தள்ளி, வெளிச்சத்தின் பக்கமே முகத்தைத் திருப்பிக் கொண்டிராது தனது கடமைகளில் கருத்தாக இருப்போர் சாதாரண மக்க்களது மதிப்பைப் பெறுவது இன்றும் நிகழ்கிறது என்பது கலாம் மரணத்தின்போது வெளிப்படும் இன்னொரு முக்கிய பாடமாகிறது.
சகோதரத்துவத்தின் உன்னத அடையாளமாக அப்துல் கலாம் பார்க்கப்படுவது நம் காலத்தின் வரம் என்று சொல்லவேண்டும். பொக்ரான் நிகழ்வை வைத்து, தங்களது இந்துத்துவ அடையாளத்தின்மீது போட்டுக் கொண்ட முகமூடியாக 2002 குடியரசுத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தது ஆர் எஸ் எஸ் – பா ஜ க அரசியல் முகாம். அவரது மறைவின்போது இன்னும் அந்த இந்துத்துவ வெறி தணியவில்லை என்பதை விசுவ இந்து பரிஷத் தலைவர் ஒருவரது அறிக்கை தெளிவாக்குகிறது. இஸ்லாமியர் என்றாலும் கலாம் நல்லவராம். அவரைத்தான் மற்ற இஸ்லாமியர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமாம். அப்படியானால் இந்துக்களுக்கு யார் முன்மாதிரி ? அத்வானிஜி, வாஜ்பாய்ஜி, மோடிஜி அல்லது அமித் ஷா ஜி? இவர்களா….இந்தச் சிறையில் அகப்படாது தனது கருத்தியலை கலாம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது முக்கியமான விஷயம். எதிர்கால இந்தியா குறித்த கனவை மேலும் பன்மடங்கு மக்களிடம் எடுத்துச் செல்ல அந்தப் பதவியில் சில காலம் இருக்கக் கிடைப்பது நல்ல வாய்ப்பு என்று அவர் கருதி இருக்கக் கூடும். வேறு புகழ் எதையும் அந்தப் பதவியில் இருக்கையில் அவர் தேடிக் கொள்ளவில்லை. தமமைத் தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கு அவர் ஒரு சில நேரங்களில் தமக்கு நியாயமாகப் பட்ட விஷயங்களில் சங்கடம் ஏற்படுத்த நேர்ந்ததையும் தவிர்க்கப் பார்க்கவில்லை.
அப்துல் கலாம் வாழ்க்கையை அவர் மரணமே இன்று பரந்த மக்கள் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. இருக்கும்போது அவரைப் பற்றி இவ்வளவு யாருமே பேசிக்கொள்ள வில்லையே என்று பலசரக்குக் கடை ஊழியர் நாராயணன் கேட்டார்.

அணு சக்தி குறித்தோ, மரண தண்டனை குறித்தோ, பொருளாதாரக் கொள்கை பற்றியோ அப்துல் கலாம் என்னவும் பேசி இருக்கட்டும். என்னவும் சிந்தித்திருக்கட்டும். இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் தளமும், இந்துத்துவ வல்லரசுக் கனவும் அடிப்படையிலேயே வேறு வேறானவை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவற்றை அவரது ஆவணப்படுத்தப் பட்டவற்றிலிருந்து அறிவார்ந்த உலகம் வகைப்படுத்திக் கொடுக்கட்டும். விவாதங்கள் தொடரட்டும். ஆனால், கலாம் மரணம் கோருவது அதை அல்ல என்று சொல்லத் துடிக்கிறது.

ஒற்றை ஒற்றை மனிதர்களாகப் பிளவுண்டு, தன்னலமே பெரிதாகக் கொண்டு, அடுத்தவரை கவிழ்க்காமல் தமது முன்னேற்றம் எல்லை என்பதான நோக்கத்தை வளர்த்துக் கொண்டு, யாருக்கு என்ன நேர்ந்தாலும் தனது சொந்த வாழ்க்கையின் கவனம் பிசகாது நடந்துகொள்ளும் உளவியலைப் பெருமை பீற்றிக் கொண்டு தலைமுறைகள் உருவாவதை அவர் நிச்சயம் பாராட்டியிருக்கவில்லை.  அய்யா, கொஞ்சம் உற்றுக் கவனியுங்கள், எல்லோருக்குமான உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம் என்ற இன்பமான எதிர்காலம் குறித்த ஆர்வத்தை இளமையிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள், வெயிலும், மழையும், சூறைக்காற்றும், சுனாமியும் எல்லோருக்கும் பொது என்பதைக் கற்பியுங்கள் என்றுதான் பரந்த ஜனத்திரளை அவரது மரணம் அறைகூவிக் கேட்டுக் கொள்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.
அகந்தை அற்ற சாதனையாளரான எங்கள் குழந்தைப் பண்பாளரே, அப்துல் கலாம் அவர்களே, உங்கள் வாழ்விலிருந்து எடுத்துக் கொள்வதைவிடவும் உங்களது மரணத்திலிருந்து எடுத்துக் கொள்ள நிறைய விடுவித்துச் சென்ற உங்களுக்கு எங்கள் அன்பு வணக்கம்…..கண்ணீர் வணக்கம்…பெருமித கம்பீர வணக்கம்.

News

Read Previous

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள்

Read Next

மேதகு அப்துல் கலாம் அவர்களே!

Leave a Reply

Your email address will not be published.