மகராஷ்ட்டிர மாநிலத்தின் முதல் பெண் வழக்கறிஞர்

Vinkmag ad
“ஜுலை” மாதம்
த.மு.எ.ச.வுக்கு  
சொந்தமானது !!!
 காஸ்யபன் 
 
மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு சொந்தமான மாதம்தான் “ஜூலை” மாதமாகும்.!
சரியாக நாற்பது ஆண்டுகளூக்கு முன் 1975 ஜூலை மாதம் 12,13, தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அந்தப் புரட்சிப்பெண்மணி கோதாவரி பருலெகர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமாகப்  புகழ் பரப்பி நிற்கும் அமைப்பு உருவான மாதம் அது..
மாநிலத்தின் முதல் பெண் வழக்கறிஞர் 
1907ம் ஆண்டு பிறந்த கோதாவரி கோகலே, சுதந்திர போராட்ட வீரர் கோபாலகிருஷ்ண கோகிலெயின் சகோதரரின் மகளாவார் ! பூனே நகரத்தின் புகழ் பெற்ற ஃபெர்கூசன் கல்லூரியில் பொருளாதாரமும், அரசியல் விஞ்ஞானமும் படித்துப்  பட்டம் பெற்றவர் ! அதுமட்டுமல்லாமல் சட்டக்கல்லூரியில் சேர்ந்து மகராஷ்ட்டிர  மாநிலத்தின் முதல் பெண் வக்கீலாக ஆனவர் !
படித்து முடிநதும் கோகலே ஆரம்பித்த Servants of India Society ல்  ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்த இளம் பெண்ணாகத்  திகழ்ந்தவர் ! அதில் பணியாற்றிய இளைஞர் பருலேகரோடு விவசாயிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார் !
இனி, பழங்குடி மக்களுக்காகவே வாழ்க்கை  
தானே மாவட்டத்தில் உள்ள “ஒர்லி” இனமக்களை ஒருங்கிணைக்கும் பணி அவரிடம் கொடுக்கப்பட்டது ! அந்தப் பழங்குடி இன மக்களோடு தங்கினார் ! பின்னாளில் அவர் எழுதிய நூலில் “காலை எழுந்ததும் குளிக்க வேண்டும் என்று கூறினேன் ! ஒரு பெண் எனக்கு திறந்த வெளியில் இரண்டு பாறைகளுக்கு இடையே தேங்கி இருந்த ஒரு “குட்டை”யைக்  காட்டினார் ! பாசி படர்ந்து பச்சை போர்த்தி இருந்த அதில் குளிக்க நான் தயங்கினேன் ! அப்போது வேறொரு பெண் பானயோடு வந்து பாசியை விலக்கி நீரை எடுத்துக் கொண்டு மேலே ஏறினாள் ! அவளிடம் கேட்ட போது குடி குடிநீருக்காகக் கொண்டு செல்வதாகக் கூறினாள்.    குளிக்க நான் தயங்கும் இந்த நீரைத்தான் இந்த மக்கள் குடிக்க பயன்படுத்துகிறார்கள் என்பது என்னை அதிர்ச்சியில் தள்ளியது ! நான், என் படிப்பு, என் உழைப்பு ,என் வாழ்க்கை அத்துணையையும் இந்த மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்க  அன்று முடிவு செய்தேன் ‘ என்று கோதாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அப்பாவி மக்களைத் திரட்டிப் போராட ஆரம்பித்தார் ! தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த  பருலேகரை மணந்தார் ! தெலுங்கான விவாசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்சி, வங்கத்தில் நடந்த “தேபாகா “எழுச்சி, கையூரில் நடந்த கிளர்ச்சி ஆகியவற்றிற்கு ஒப்பான “ஒர்லி இன மக்களின்” போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் !
கோதூதி : தாய் தெய்வமானவர்
கணவர் பருலேகர் ” Revolt of Warli ” என்ற தலைப்பில் எழுதிய நூல் இன்றும்  ஆவணமாக  கருதப் படுகிறது !
அந்தமக்கள் கோதாவரியம்மையாரை “கோதூதி” என்றே அழைக்கிறார்கள் ! அவரை தங்கள் “தாய்தெய்வமா”க வழிபடுகிறார்கள் !
தன் அனுபவங்களை ” மனிதன் விழித்தெழுந்த போது ” என்ற நூலாக எழுதினார். மராட்டிய மொழியின் சிறந்த படைப்பாக அதனை சாகித்திய அகாடமி விருதுகொடுத்து தன்னைபெருமைப்படுத்திக் கொண்டது !
மேடையில் தமிழ் எழுத்தாளர்கள்  நாரண துரைக்கண்ணன், ஆர்.வி ஆகியோர் இருக்க அந்த புரட்சி பெண் த.மு.எ.ச.வை துவக்கி வைத்தார்!
தமுக்கம் மைதானத்தின் ஒரு மூலையில்  அமர்ந்து கொண்டு இந்தக்கட்சியை பரவசத்தொடு பார்த்த நான் எவ்வளவு பாக்கியவான் !
*******************
காஸ்யபன், எண்பது வயதுக்காரர்.
நாகபுரியில் வசித்து வரும் மூத்த எழுத்தாளரான இவர்
எல் ஐ சி நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில்
முன்னணியில் இயங்கியவர்.
தொடர்பு எண்:9422806234
Kashyapan Syamalan <kashyapan1936@gmail.com>

News

Read Previous

2 ஆண்டுகளில் 200 தமிழ் மின்னூல்கள் !

Read Next

அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி

Leave a Reply

Your email address will not be published.