பாமியான் புத்த சிலைகளும் பர்மாவின் பவுத்த தீவிரவாத படுகொலைகளும்!

Vinkmag ad

பாமியான் புத்த சிலைகளும் பர்மாவின் பவுத்த தீவிரவாத படுகொலைகளும்!

-திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தார்

thahiruae@gmail.com

Mob  .974 + 66928662

“பர்மாவில் முஸ்லிம் தீவிரவாதிகளால் பவுத்தர்கள் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான பவுத்தர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் வீடுகளை விட்டு விரட்டப் பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும் ஈவிரக்கமின்றி கொத்து கொத்தாக படுகொலை செய்யப் பட்டார்கள்.பலர் நாட்டை விட்டு விரட்டப் பட்டு  உயிர்ப் பிழைக்க படகுகளில் ஏறி அடைக்கலத்திற்கு அண்டை நாடுகளுக்கு சென்றால் எந்த நாடும் ஏற்றுக் ஏற்றுக் கொள்வதில்லை.அதனால் கடலிலேயே உணவின்றி நீரின்றி இறந்தவர்கள் ஏராளம்.” இப்படி ஒரு செய்தி வந்திருந்தால் இந்நேரம் ஊடகங்கள் நிமிடத்திற்கு ஒரு முறை அதை ஒளி பரப்பி இருக்கும்.பத்திரிக்கைகள் முதல் பத்திரிக்கையில் கலர்ப் படம் போட்டு கண்டனம் தெரிவித்து இருக்கும்.முஸ்லிம் தலைவர்கள் ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறார்கள் என்று சிலர் கொதித்திருப்பர். முஸ்லிம்கள் கண்டனம் தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்று சிலர் விமர்சனம் செய்திருப்பர். இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் மேற்கு நாடுகள் அறிக்கை வெளியிட்டு இருக்கும். இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம் என்று தங்கள் அவதூறு பிரசாரத்தை காழ்ப்புணர்ச்சி கொண்ட மத வெறிக் கொண்ட தலைவர்கள் அதனை மேற்க்கோள் காட்டி முழங்கி இருப்பர்.

உண்மை என்னவென்றால் மேலே குறிப்பிடப்பட்ட கொடூரங்களும்,குரூரங்களும்  முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப் படுகிறது. பவுத்த தீவிரவாத மத குருக்கள் ஆசியுடனும், பர்மிய பவுத்த பயங்கரவாத அரசின் ஆதரவுடன் இவை பவுத்த இன மக்கள் மூலம்  வெறியூட்டப் பட்டு நிகழ்த்தப் படுகிறது.அதனால் ஊடகங்கள் உண்மையை வெளியிடாமல் மவுனம் சாதிக்கின்றன.

முஸ்லிம்களை பயங்கரவாதிகள் ,தீவிரவாதிகள் என அவதூறு பரப்பியே மற்ற பொது சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்திய அச்செல்லாம் நச்சும் நெஞ்சில் நஞ்சையும் வைத்துள்ள பெருமபாலான ஊடகங்கள் இப்போது முஸ்லிம் சமூகம் பர்மாவில் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்  படுகின்ற நிகழ்வை கண்டிக்காமல் கண்டுக் கொள்ளாமல் ஏன் ஒரு ஓரிரு வரி செய்தியாக கூட போட முன்வராமல் இருப்பது இவர்களுக்கும் தருணம் கிடைத்தால் அந்தப் படுகொலையில் பங்கேற்கவும் தயங்க மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.

பர்மிய இராணுவ அரசை எதிர்த்து ஜனநாயகம் ஏற்பட அமைதி தழைக்க போராடினார் என்று ஆங்சாங் சூகி என்ற பர்மிய பெண்ணுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது. உலக ஊடங்கங்கள் அவரை புகழ்ந்து தள்ளின. அதே பர்மாவில்தான் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப் படுவதை கண்டனம் தெரிவிக்காமல், கண்டுக் கொள்ளாமல் ஆங்சாங் சூகி இருக்கிறார். ஆம் சாயம் வெளுத்து விட்டது.இந்தப் பெண்ணின் முந்தையப் போராட்டமெல்லாம் அரசியல் ஆதாயம் பெற நிகழ்த்தப் பட்ட நாடகங்கள் என்பதும் இவர் மவுனம் சாதிப்பது இவருக்கும் முஸ்லிம்கள் அழிக்கப் பட வேண்டும் என்பதில் மறைமுக விருப்பம் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

இன்னொருவரை பற்றியும் இங்கே சொல்லியே ஆக வேண்டும் பவுத்த மத குரு தலாய்லாமா, இவர் மடத்தில் இருந்த நாட்களை விட அரசுகளின் மாளிகைகளில் இருந்த நாட்கள்தான் அதிகம்.சீனா திபெத்தில் அத்துமீறுகிறது,பவுத்ததத்தை அழிக்க முயல்கிறது என்றெல்லாம் பொங்கும் அவர் பர்மாவின் பவுத்த தீவிரவாதிகள் முஸ்லிம் மக்களை செய்யும் படுகொலையை கண்டுக் கொள்வதே இல்லை.

இலங்கையில் தமிழ் மக்கள் பவுத்த தீவிரவாதிகளால் படு கொலை செய்யப் பட்ட போது மவுனம் காத்து பின்னர் அறிக்கை மட்டுமாவது விட்ட இந்தியா பர்மாவில் முஸ்லிம்கள் படு கொலை செய்யப் படுவதை கண்டு  பேசாமலே இருக்கிறது. அணிசேரா நாடுகளின் தலையிடாக் கொள்கை என்ற பெயரில் அநியாயங்கள் நடக்கும்போது போது அதில் தலையிடாமல் தடுக்காமல் இருப்பது மகாத்மா காந்தியை மீண்டும் கொலை செய்வதற்கு ஒப்பாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்  அமெரிக்காவாலும் மேற்கு நாடுகளாலும் தொடங்கப் பட்ட ஐ நா சபை பலஸ்தீன், சூடான், இந்தோனேசியா என்று முஸ்லிம் நாடுகளை துண்டுப் போடவும் ,ஆப்கான்,இராக் என்று முஸ்லிம் நாடுகளில் குண்டுப் போடவும்தான் பயன் படுத்தப் பட்டது.முஸ்லிம்கள்,மற்றும் தமிழர்கள் படுகொலை செய்யப் படும் போது மவுனம் சாதித்து விட்டு இறந்தப் பின்பு இரங்கல் அறிக்கையும், பின்னர் ஒன்றிக்கும் உதவாத மனித உரிமை கமிஷன்கள் அமைத்து அவர்களின் அறிக்கைகளும் குப்பையில் போடாமல் வைத்திருப்பதுதான் மிச்சமே தவிர அதனால் எந்த குற்றவாளியும் இது வரை தண்டிக்கப் படவில்லை. எனவே இவர்கள் பர்மாவில் நடக்கும் முஸ்லிம் இனப் படுகொலையை தடுப்பார்கள் என எதிர்ப் பார்ப்பது நினைத்து பார்க்க முடியாத கற்பனை .

முஸ்லிம் நாடுகளும்  கூடி தீர்மானம் போட்டு விட்டு தங்களால் முடிந்த  நிவாரணம் பொருட்கள் மட்டும் அனுப்பி வைத்து விட்டு சும்மா இருந்து விடுகின்றன. இப்போது என்ன செய்யப் போகின்றன என்பதை பொறுத்துப் பார்ப்போம்.

சவூதியில் முஸ்லிம் பெண்கள் கார் ஓட்டும் உரிமை மறுக்கப் படுகிறது. ஆப்கானில் ஹிஜாபிற்குள் வைத்து முஸ்லிம் பெண்களை அடிமைப் படுத்துகிறார்கள் என்ற பொங்கிய போராளிகள் பர்மாவில் முஸ்லிம் பெண்களையும் குழந்தைகளும் படுகொலை செய்யப் படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் ?

பாகிஸ்தானில் மலாலா சுடப் பட்டதற்கு பொங்கியவர்கள் எங்கே? இங்கே முஸ்லிம் மழலைகள் பர்மாவில் படுகொலை செய்யப் படுகிறார்களே? நீலிக்கண்ணீர் வடிக்கும் போலி மனித உரிமை போராளிகள் (பேர்வழிகள்) எங்கே போனார்கள்

முஸ்லிம் நாடுகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை கூட எதிர்க்கும் கருணைவான்கள், அப்பாவிகளை அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக பர்மாவில் படுக் கொலை செய்கிறார்களே அவர்கள்  எங்கே ?மவுன விரதம் இருக்கிறார்களா?

புத்தத்தை தழுவி யுத்தத்தை அசோகர் கைவிட்டது அந்தக் காலம் இப்போது புத்தத்தின் பெயராலேயே ஈழத்திலும் ரோஹிங்க்யாவிலும் பவுத்தர்கள் அப்பாவி மக்களை படுகொலை நிகழ்த்தியதும்,நிகழ்த்தி வருவது வித்தியாசமான உண்மையாகும்.

முஸ்லிம்களுக்கு எதிராக பர்மாவில்  ரோஹிங்க்யா மாநிலத்தில் என்ன நடக்கிறது.?வரலாற்றோடு முடிந்து விட்ட நாட்களில் இருந்து நம் முன்னே நடந்துக் கொண்டிருக்கும் நாட்கள் வரை, இதோ ஒரு சில குறிப்புகள்!

பதினேழாம் நூற்றாண்டு வரை அராக்கன்  மன்னராட்சியில் உட்பட்டு  இருந்த ரோஹிங்யா மாகாணம் முஸ்லிம் மற்றும் பவுத்த சமூகம் நல்லிணக்கத்துடனே  வாழ்ந்து வந்திருக்கிறது 1782 ஆம் ஆண்டு போடாவ்பாயா என்னும் பர்மா மன்னனால் அப்பகுதி  கைப்பற்றப் பின்னர்தான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. பர்மிய ராணுவத்தால் முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப் பட்டார்கள். பலர் கொத்தடிமயாக்கப் பட்டார்கள்.

1962 ஆம் ஆண்டு ஜெனரல் நீவின் என்பவரின் பர்மியமயமாக்கல் என்ற கொள்கையின் கீழ் பவுத்தர்களை தவிர மற்றவர்கள் அதாவது முஸ்லிம்கள்  தாங்கள் பிறந்த நாட்டிலேயே அயல்நாட்டினராக அறிவிக்கப் பட்டனர்.

1978  ஆம் ஆண்டு ஆபரேசன் நாகாமின் அல்லது ஆபரேசன் கிங் டிராகன் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது.இதன் நோக்கம் சட்டத்துக்கு புறம்பாக நாட்டில் குடியேறியுள்ள வந்தேரிகளை வெளியேற்றுவதே என அறிவிக்கப் பட்டது.முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் பல பள்ளிவாசல்கள் அழிக்கப் பட்டன.அவர்களின் நிலங்கள் அபகரிக்கப் பட்டன.பலர் பங்களாதேஷிறகு தப்பி ஓடினர்.அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப் பட்டவர்கள் பர்மிய அரசால் சிறையில் அடைக்கப் பட்டு கொடுமைப் படுத்தப் பட்டனர்.பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர்.பலரும் படுகொலை செய்யப் பட்டனர்.

1982  ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட குடியுரிமை சட்டம் முஸ்லிம்களை கருவறுக்கும் முக்கிய திட்டம் என்றே சொல்லலாம்.அதைத் தொடர்ந்து  முஸ்லிம்கள் சொத்து வாங்க தடை விதிக்கப் பட்டது.அவர்கள் தாங்கள் வாழும் கிராமத்தை விட்டு வெளியே செல்ல அரசு அனுமதி பெற வேண்டும்.முஸ்லிம்கள் திருமணம் செய்ய,குழந்தை பெற,பள்ளியில் சேர என்ற தனிப்பட்ட விஷயங்களுக்குக் கூட அரசின் அனுமதி பெற வேண்டும்.பழுதாகி விட்ட பள்ளிவாசல்கள் புனர் நிர்மாணம் செய்ய அனுமதி மறுக்கப் பட்டது.  மேலும் மாதிரி கிராமம் என்று பர்மிய அரசால் உருவாக்கப் பட்ட திட்டங்களில் கட்டுமானப் பணிகளில் கொத்தடிமை தொழிலாளர்களாக முஸ்லிம்கள் பயன் படுத்தப் பட்டனர்.

.1991 ஆம் ஆண்டு ஆப்பரேசன் பீத்தாயி அல்லது தூய்மை படுத்துதல் மற்றும் நாட்டை அழகு படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் அரசால் முஸ்லிம்களை வெளியேற்றும் பணி தொடங்கப் பட்டது.வன்முறை தூண்டப் பட்டது.அதனால் நாட்டை விட்டு தப்பி பங்களாதேஷ் நாட்டில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அகதிகளாக  அடைக்கலமாகினர்.

1997  ம் ஆண்டில் மண்டலே கலவரம், 2001 டாவுங்கூ கலவரம் நடந்த கலவரங்களில்  பவுத்த தேரர்களும் நேரடியாகவே பங்கேற்று கலவரத்தை தூண்டினர். முஸ்லிம்களுக்கு எதிரான வெறியாட்டங்கள் தூண்டப் பட்டனர். இனப்படுகொலைகள் நிகழ்த்தப் பட்டன.அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீண்டும் பலர் பங்களாதேஷ் தப்பி ஓடினர்.

மீண்டும் 2012 ஆம் ஆண்டில் இருந்து பர்மிய பவுத்தர்களின் அக்கிரமங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக உக்கிரமானது. அன்றாடம் பவுத்த துறவிகள் பிரச்சாரம் மூலமும் அரசு எந்திரங்கள் மூலமும் முஸ்லிம்கள் இன ஒதுக்கல் செய்யப் பட்டார்கள். பலர் விரட்டப் பட்டார்கள். படு கொலை செய்யப் பட்டார்கள்.உயிரோடு எரிக்கப் பட்டார்கள்.பெண்கள் வன்புணர்ச்சி செய்யப் பட்டார்கள். இவை பர்மிய ஊடகங்கள் மூலம் மறைக்கப் பட்டது. தீவிரவாதிகள் என முஸ்லிம்களை மட்டுமே காட்டி பழக்கப்பட்ட மேற்கு ஊடகங்கள் பாதிக்கப் பட்டது இதில் முஸ்லிம்கள் என்றதும் கண்டுக் கொள்ளாமல் இருந்து விட்டன.

தன்னை தானே பர்மாவின் பின்லேடன் என்று அழைத்துக் கொள்ளும் அசின் விராது என்ற புத்தத் துறவி முஸ்லிம்களுக்கு எதிராக வெறியூட்டும் பேச்சுக்களை பேசி தற்போது ரோஹிங்க்யாவில் நடைபெறும்  இனப் படுகொலையை  தலைமையேற்று நடத்தி வருகிறான்.இவன் ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு வன்முறையை தூண்டியதற்காக கைது செய்யப் பட்டு 2012 ஆம் ஆண்டில்தான் பொது மன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப் பட்டான்.

இந்தப் படுகொலையில் இருந்து தப்பிக்க காடுகளிலும்,கடலில் படகுகள் மூலமும் ஓடிய முஸ்லிம்கள் வழி தவறி உணவின்றி நீரின்றி இறந்தவர்கள் ஏராளம். அவர்களிலும் பிழைத்தவர்கள் தாய்லாந்து,இந்தோனேசியா ,மலேசியா என அண்டை நாடுகளுக்கு சென்றாலும் அவைகளும் தேசியத்தின் பெயரால் மனிதத்தை தொலைத்து விட்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தன. எனினும் ஊடகங்கள் மூலம் அவை உலகின் வெளிச்சத்திற்கு வர தற்போது அவற்றில் சில நாடுகள் தற்காலிக அடைக்கலம் தந்துள்ளன.

அப்பாவி பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக  கொல்லப் படுகிறார்கள்.

விலங்குகள் கொல்லபட்டால் கூட கண்ணீர் விடும்  அமைப்புகளும். பாமியானில் புத்த சிலைகள் உடைக்கப் பட்ட போது அதற்காக கண்டனம் தெரிவித்த சர்வதேச நாடுகளும் இப்போது கொல்லப் படுவது முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக மவுனமாக இருக்கின்றன.

அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப் பட்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பர்மிய வீராங்கனை ஆங்சாங் சூகியும் இப்போது படுகொலை நடை பெரும் போது அமைதியாக இருக்கிறார்கள்.

ஐநா செயலர் பான்கி மூன் படுகொலை முழுவதும் முடிந்ததும் கண்டனம் தெரிவிப்பார். அது வரை அவர்  காத்திருப்பார்.

நாம் நமது மனித பிரபஞ்சத்தின் நமது சகோதரர்கள் படுகொலை செய்யப் படுவதைக் கண்டு செய்தியாக படித்து விட்டு போய் விடாமல் அவர்களுக்க் நீதி கிடைக்க சுதந்திரம் கிடைக்க,பாதுகாப்பு கிடைக்க  படுகொலை தடுக்கப் பட குரல் கொடுக்க வேண்டும்.ஈழத்தின் தமிழர்களாக இருந்தாலும் பர்மாவின் முஸ்லிம்களாக இருந்தாலும் அனைவரும் மனிதர்கள்தான்

இதோ பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (சூரா மாயிதாவின் 32 ஆம் வசனம் )

*************************************************************************************************************************

News

Read Previous

வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி? அரசு சித்தா மருத்துவர் எளிய ஆலோசனை

Read Next

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published.