நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர்

Vinkmag ad

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம் – 1)

30OCT
தமிழக அரசியல் களத்தில் பிழைக்கத் தெரியாத அப்பாவி மனிதர்களின் பட்டியல் ஒன்றை யாராவது தயாரிக்க விரும்பினால் அதில் நாகூர் ஹனிபாவின் பெயரை தாராளமாக முதல் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.
அரசியல் களத்தில் இவருக்கு பிழைக்கத் தெரிந்திருந்தால் எப்பொழுதோ இவர் அமைச்சராகி இருக்கலாம். ஏன்? அதற்கு மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  பொதுச் செயலாளராகவோ அல்லது பொருளாளராகவோ ஆவதற்குக் கூட முழுமையான தகுதி படைத்தவர் அவர். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
“88 வயதை எட்டியிருக்கும் வயோதிகரான நாகூர் ஹனிபாவுக்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் கழகத்தில் உயர்பதவி ஒன்றைக் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்ற கேள்வியை வாசகர்கள் முன்வைக்கலாம். திமுகவின் தொடக்க காலத்திலிருந்தே கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அவருக்கு உயர்பதவியொன்றை கொடுத்திருக்கலாமே என்பதுதான் நம் கேள்வி.
தன் குடும்பத்தாரின் நலன் மீதும், அவர்களது முன்னேற்றத்திலும் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கு கூட கலைஞர்  தன் ஆரம்பக்கால நண்பர்களின் நலனில் சிறிதும் காட்டவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.
ஹனிபாவுக்கும் கலைஞருக்கும் இடையே ஏற்பட்ட உறவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இருவருக்கும் ஏறத்தாழ சம வயது. டாக்டர் கலைஞர் அரைக்கால் சட்டை போட்டுத் திரிந்த காலத்திலிருந்து இருவருக்குமிடையிலும் அப்படியொரு பரஸ்பர நட்பு. கலைஞர் அவர்களை மு.க. என்று பாசத்தோடு அழைக்கும் தகுதி படைத்தவர் நாகூர் ஹனிபா. ஒரு கையை பேராசிரியர் அன்பழகன் தோளிலும்  மற்றொரு கையை கலைஞர் தோளிலும் போட்டுக்கொண்டு நெருக்கமாய் அரவணைத்து உரையாடும் உரிமை கொண்ட ஒரே தோழர் அவர்.
தன் இளமைக் காலங்களை பெரும்பாலும் நாகூர் மற்றும் நாகையில்தான் சுற்றித் திரிந்து காலத்தைக் கழித்திருக்கிறார் கலைஞர்  கருணாநிதி. அவர் கெளதிய்யா சங்கத்து தொண்டர்களுடன் இணைந்து சுற்றிய காலத்தை நாகூரில் வாழும் மூத்த குடிமகன்கள் நினைவு படுத்துகிறார்கள். தொடக்க காலத்தில், கலைஞர் அவர்களின் வளர்ச்சியில் இஸ்லாமியச் சகோதரர்களின் பங்கு கணிசமான அளவில்  இருந்திருக்கிறது.
கலைஞர் அவர்களின் கோபாலபுரம் வீடே படத்தயாரிப்பாளர்களாக இருந்த கூத்தாநல்லுர் கமால் பிரதர்ஸ் அந்தக்காலத்தில் 25,000  ரூபாய்க்கு வாங்கி அன்பளிப்பாக கொடுத்ததுதான். இந்த உண்மை பலருக்கும் தெரியாது. கமால் பிரதர்ஸின் பட நிறுவனத்தின் LOGO -வாக நாகூர் மினாராவை போட்டிருந்தது இன்னும் என் நினைவில் பசுமையாக பதிந்திருக்கிறது.
ஆரம்பக் காலத்தில் கலைஞருடன் நெருங்கிப் பழகிய கலைமாமணி காரை உமர் அவர்களை அண்மையில் ஒரு கல்யாண நிகழ்ச்சியில்  சந்தித்து உரையாடியபோது பற்பல சுவாராஸ்யமான விஷயங்களை அறிந்துக் கொள்ள முடிந்தது.
கலைஞரை திருவாரூரில் இருந்து அழைத்து வந்து, தான் பணிபுரிந்த மார்டன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்துவிட்டவர் கவி.கா.மு.ஷெரீப் அவர்கள். இதனை கலைஞரே தானெழுதிய “நெஞ்சுக்கு நீதி” என்ற நூலில் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.
B.E. படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த தங்கள் மகனுக்கு வேலை வாய்ப்பு கேட்டு கோபாலபுரத்திற்குச் சென்ற கவி கா.மு.ஷெரீப்  அவர்களுடைய மனைவியிடம் கலைஞர் கூறிய சால்ஜாப்பு வார்த்தை இதுதான். “நான் சிபாரிசு பண்ணுவதை கவிஞர் விரும்பவே மாட்டார். சிபாரிசு செஞ்சா ரொம்ப வருத்தப்படுவார் .அவரிடம் ஒரு கடிதம் வாங்கிட்டு வந்தீங்கன்னா நான் சிபாரிசு செய்கிறேன்”
சபாஷ் கலைஞர் ஐயா அவர்களே! சபாஷ்!
ஒருவருக்கு உண்மையிலேயே உதவி செய்ய வேண்டுமென்று மனது வைத்தால் நிச்சயம் காதும் காதும் வைத்தாற்போல் செய்திருக்கலாமே. தமிழக முதல்வராக பதவி வகிக்கும் ஒருவருக்கு தன்னைத் திரையுலகில் அறிமுகம் செய்துவைத்த ஒரு புண்ணியவானின் மகனுக்கு வேலை வாங்கிக் கொடுக்க முடியாதா என்ன?
திராவிட முன்னேற்றக் கழகம் துளிர் விட்ட காலத்திலிருந்தே முதற்கட்டத் தலைவர்களோடு தோளொடு தோள் நின்று, கட்சியின் இன்ப  துன்பங்களில் பங்கெடுத்து, சிறைவாசங்கள் அனுபவித்து, மேடைதோறும் முழங்கி, கட்சியை வளர்த்த நாகூர் ஹனிபாவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த சன்மானம்தான் என்ன? கலைஞர் காட்டிய நன்றிக்கடன்தான் என்ன?
“அவருக்கு M.L.C. பதவி கலைஞர் அளித்தாரே, வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை கொடுத்தாரே, ‘கலைமாமணி’ பட்டம் கொடுத்தாரே,  இது போதாதா?” என்றெல்லாம் வாதாடலாம். இதெல்லாம் ஆனைப்பசிக்கு சோளப்பொறி. ஹனிபா கட்சிக்காக ஆற்றிய அரும்பணிக்கு  ஈடாக இதெல்லாம் ஒன்றுமே கிடையாது எனலாம். அப்படி என்னதான் அவர் கட்சிக்காக செய்தார் என்பது இக்கட்டுரையில் போகப் போக  தெரிந்து கொள்ளலாம்.
இரண்டு முறை நாகூர் ஹனிபாவுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டுமே Wrong Timings. வெற்றி  பெறுவது முடியாத காரியம் என்று தெரிந்திருந்தும் நாகூர் ஹனிபா இரண்டு முறை பலிகடா ஆக்கப்பட்டார்.
முதல் முறை 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் பொதுத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் நாகூர் ஹனிபா போட்டியிட்டார்.  பிரபலமாகத் திகழ்ந்த நாகூர் ஹனிபாவை அறிஞர் அண்ணா வேட்பாளராகத் தேர்வு செய்ததற்கு காரணமே உதயசூரியன் சின்னத்தை பிரபலப் படுத்துவதற்காகத்தான். “ஓடி வருகிறான் உதயசூரியன்” என்று நாகூர் ஹனிபா பாடிய பாடல் திமுகவின் அதிகார பூர்வமான  சின்னத்தை பொதுமக்களின் மனதில் பசுமரத்தாணியாய் பதிய வைத்தது.
1957-ல் திருச்சியில் அன்பில் தர்மலிங்கம் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவின்போதுதான் நாகூர் ஹனிபா நாகை தொகுதியில்  சட்டசபை வேட்பாளராக நிறுத்தி வைப்பதைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் அறிஞர் அண்ணா. திமுக தேர்தலில் முதன்முறையாக  போட்டியிட்டது இந்த தேர்தலின்போதுதான். பொதுமக்களிடம் திமுகவிற்கு எப்படிப்பட்ட ஆதரவு இருக்கிறது என்று நாடிஜோஸியம்  பார்ப்பதற்கு நாகூர் ஹனிபாதான் சரியான பரிசோதனைக்கூடத்து எலி என்று அறிஞர் அண்ணா முடிவு செய்திருந்தார். திமுக  அப்பொழுதுதான் அரசியல் களத்தில் துளிர்விடத் தொடங்கிய நேரம்.
நாகூர் ஹனிபாவை நேரில் சந்திக்கும் போதெல்லாம் அவரை பாடவைத்து ரசித்து ஒரு ரூபாய் பரிசளிப்பார் தந்தை பெரியார். நாகூர் ஹனிபாவின் குரலால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பெரியார், ஹனிபா மீது ஒரு தனிப்பட்ட மரியாதை வைத்திருந்தார். அரசியல் வியூகம் காரணமாக இந்த தேர்தலின்போது கர்மவீரர் காமராசரின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் நின்ற இராமலிங்கம் என்பவரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் நிலை ஏற்பட்டது.
நாகூர் ஹனிபா இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது அவரது பொல்லாத நேரம் எனலாம். மக்களின் ஆதரவை நாடி பார்ப்பதற்கு  அவர் பலிகடா ஆக்கப்பட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.
இரண்டாவது முறை நாகூர் ஹனிபா பலிகடா ஆக்கப்பட்டதும் மாண்புமிகு கலைஞர் அவர்களின் கைங்காரியத்தால். 2002-ஆம் ஆண்டு வாணியம்பாடியில் இடைத்தேர்தல் வந்தது. நாகூர் ஹனிபா எங்களுடன் பஹ்ரைனில் இருந்தபோதுதான் கலைஞரின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. வாணியம்பாடி தொகுதியில் அவரை வேட்பாளராக நிறுத்துவதென கலைஞர் அவர்கள் முடிவெடுத்திருந்தார்.  முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அந்தப் பகுதியில் நிற்பதற்கு இஸ்லாமியச் சமூகத்திலிருந்து ஒருவரை நிறுத்தினால்தான் வாக்குகளை அள்ள முடியும் என்று கலைஞர் நினைத்தார்.
இந்த தேர்தலில் நாகூர் ஹனிபா ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது கட்டளையை தலையாய ஆணையாய் ஏற்று, மறுப்பேதும் சொல்லாமல் களத்தில் இறங்கினார் நாகூர் ஹனிபா. எந்த ஒரு இடைத்தேர்தலின்போதும் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்பது தமிழக அரசியலில் எழுதப்படாத விதியாக  இருந்தது. அப்பொழுது திமுக ஆளுங்கட்சியாக இருக்கவில்லை.
உருதுமொழி பரவலாக பேசப்படும் அப்பகுதியில் நாகூர் ஹனிபாவின் பாடல்களுக்கு அவ்வளவாக வரவேற்பு இருந்ததில்லை. நாகூர் ஹனிபாவுக்கு பதிலாக கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத்தை நிறுத்தியிருந்தாலாவது அவர் ஜெயித்திருப்பார் என்று வேடிக்கையாக கூறப்பட்டது. தொகுதிக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு நபரை தங்கள் வேட்பாளராக ஏற்க அப்பகுதி மக்கள் தயாராக இல்லை என்பது மட்டும் திட்டவட்டமாக முடிவு வருவதற்கு முன்பே தெரிந்திருந்தது. திமுக தொண்டர்களே முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சமயம் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த நாஞ்சில் சம்பத், நாகூர் ஹனிபாவிடம் கூறிய டயலாக் இதுதான். “மாமா! உங்களை குர்பானி கொடுக்குறதுக்கு கலைஞர் முடிவு பண்ணிட்டாரு போல” என்று நாஞ்சில் சம்பத் சொன்னபோது நாகூர் ஹனிபா மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறியிருக்கிறார். தான் ஜெயிக்க மாட்டோம் என்று நாகூர் ஹனிபாவுக்கே நன்றாகத் தெரியும்.
வாணியம்பாடியில் தேர்தலில் மொத்தம் பதிவான 2,02,883 வாக்குகளில், அதிமுக வேட்பாளர் ஆர்.வடிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்ட நாகூர் ஹனிபா பெற்ற வாக்குகள் வெறும் 43,878 மட்டுமே. முதல் சுற்றிலிருந்தே திமுக வேட்பாளரான நாகூர் ஹனிபா பின் தங்கியிருந்தார். 9-வது சுற்று வாக்குஎண்ணிக்கையின்போது வாக்கு வித்தியாசம் மிக அதிகமாகிவிடவே ஓட்டு எண்ணும் இடத்திலிருந்து ஹனிபா வெளியேறி விட்டார். ஒரு மூத்த திமுக பிரமுகருக்கு கருணாநிதி நன்கு தெரிந்தே தேடித்தந்த அவமானம் இது.
நாகூர் ஹனிபாவின் மூத்த மகனும், என் நண்பனுமான E.M.நெளஷாத் அலி இப்போது திராவிட முன்னேற்றக் கழக கொள்கைப் பாடல்களை மேடைகளில் பாடி வருவதாக நான் கேள்விபட்டபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது. சூரியனுக்கே ‘டார்ச்’ காட்டியவர்கள், ஹனிபாவுக்கே ‘அல்வா’ கொடுத்தவர்கள், ஹனிபாவின் மகனுக்கு ‘கல்தா’ கொடுக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்?
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது “ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா!”என்று நாகூர் ஹனிபா முழங்கியபோது ஆர்த்தெழுந்தார்கள் தொண்டர்கள். உணர்ச்சிப் பெருக்கால் நரம்புகள் முறுக்கேற தலைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு மகுடி ஊதிய பாம்பாக படை எடுத்தார்கள் கழகச் சிங்கங்கள். அதே பாடலை இப்போது மேடைகளில் என் நண்பன் பாடுகையில் அந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இடம், பொருள், ஏவல் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்? உகந்த சூழல் இல்லாத போது அது நகைப்பிற்கிடமாக ஆகி விடுகிறது.
அஞ்சா நெஞ்சன் அழகிரி நாகூர் ஹனிபாவை “டேய்! கருப்பா”  என்றுதான் அழைப்பார். நான் ‘அஞ்சா நெஞ்சன் அழகிரி’ என்று குறிப்பிடுவது ‘அக்மார்க்’ முத்திரை குத்தப்பட்ட ஒரிஜினல் அஞ்சா நெஞ்சனை.
நாகூர் ஹனீபாவின் தோலின் நிறம் கருப்பு. குருதியின் நிறம் சிவப்பு. இந்த ‘கருப்பு-சிவப்பு’ காம்பினேஷன் அவர் உடலில் மட்டுமல்ல.  உள்ளத்திலிருந்தும் இதுவரை வரையிலும் யாராலும் நீக்கவே முடியவில்லை. “என் இரத்தத்தை எடுத்து சோதித்தால் கூட அதில் வேறு கட்சியின் கலப்பு இருக்காது” என்று அடிக்கடி கூறுவார் இசைமுரசு E.M.ஹனிபா.
இவ்வளவு ஏன்? நாகூர் ஹனிபாவின் தலைகூட சிவந்துதான் போய்விட்டது. ஆம்! அவர் தலையில் மிளகாய் அரைத்தவர்கள்தான் எத்தனைப்பேர்கள்?
ஹனிபாவின் தலையில் மிளகாய் அரைத்தவர்களில் பட்டியலில் முதல் இடம் வகிப்பவர் மாண்புமிகு தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.
‘இரும்பு மனிதர்’ என்று சர்தார் வல்லபாய் பட்டேலைச் சொல்வார்கள். அவரை நான் பார்த்ததில்லை. என் கண்முன்னே இந்த இரும்பு மனிதரின் வைராக்கியத்தை இதுநாள்வரை கண்டு வருகிறேன். பணத்திற்கும், பதவிக்கும் விலைபோகாத ஓர் அரசியல் நேர்மை, பிறரை அடிவருடி பிழைக்காத தன்மான உணர்ச்சி, – இவற்றின் மொத்த உருவம்தான் நாகூர் ஹனிபா.
“Lip Service” வழங்குவதில் கலைஞருக்கு நிகர் கலைஞரேதான். ஹனிபாவின் சேவையை பாராட்டி ‘கலைஞர் விருது’ வழங்கி “இது  எனக்கு நானே விருது அளித்துக் கொண்டது போலாகும்” என்றார்.
“அளவு கடந்த பாசத்தை என்மீது கொட்டி, பற்றினைக் கழகத்தின் மீது காட்டி கழகத்தினரின் பேரன்பபை பரிசாக பெற்றுள்ளவர் இசைமுரசு அனிபா அவர்கள்” என்று நாகூர் ஹனிபாவுக்கு எழுதிய வாழ்த்து மடல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார் மாண்புமிகு கலைஞர் அவர்கள்.
கலைஞர் மீது அளவு கடந்த பாசத்தைக் கொட்டியவருக்கு கலைஞர் எந்த விதத்தில் அவருக்கு கைம்மாறு செய்தார் என்ற கேள்விக்கு சரியான பதில் இதுவரை எவரிடத்திலும் இல்லை.
“அரசியலில் நான் அடியெடுத்து வைத்த சிறுபிராயம் தொட்டு நாகூர் அனிபாவை அறிவேன். அன்று கேட்ட அதே குரல். வளமிக்க குரல், அனைவரையும் வளைக்கும் குரல். ஆதிக்கக்காரர்களின் செவிப்பறை கிழிக்கும் இடியோசைக் குரல். அந்தக் குரல் மட்டுமா இன்றளவும் நிலைத்து நிற்கிறது? அவர் நெஞ்சில் பதிந்த கொள்கை உறுதியுமன்றோ ஆடாமல் அசையாமல் அப்படியே நிலைத்து நிற்கிறது”
ஹனிபாவின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட முத்துவிழா மலரில் இவ்வாறு நாகூர் ஹனிபாவுக்கு புகழாரம் சூட்டுகின்றார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
தன் அரசியல் வாழ்வை நீதிக் கட்சியில் தொடங்கி திராவிடக்கட்சியில் பயணித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இதுநாள்வரையில் விடாப்பிடியாக கலைஞரின் புகழைப் பாடிக் கொண்டிருக்கும் அப்பாவி மனிதர் இவர்.
இவரை மாற்று முகாமுக்கு அழைத்த போதெல்லாம் இவர் கூறிய ஒரே பதில் “எனக்கு ஒரே இறைவன்; ஒரே கட்சி” என்பதாகும்.
இவரது அரசியல் நேர்மையை மெச்சுவதா அல்லது ‘பிழைக்கத் தெரியாத மனிதராக இருக்கிறாரே’ என்று இவர் மீது அனுதாபப்படுவதா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.
1939-ஆம் ஆண்டு 13 வயதுச் சிறுவனாய் இந்திமொழி திணிப்புக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் கைது செய்யப்பட்ட சிறுவனாய் அரசியல் களத்தில் இறங்கிய இந்த பண்பாளனுக்கு  அரசியல் அனுபவமானது 75 ஆண்டுகளைத் தாண்டி விட்டது. இந்த பழுத்த அரசியல்வாதிக்கு  அவருடைய ஆருயிர் நண்பர் கொடுத்தது ‘அல்வா’வைத் தவிர வேறொன்றுமில்லை.
அரசியல் சதுரங்கக் களத்தில் நிறம் மாறா பூக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கட்சி விட்டு கட்சி மாறும் கலையைத்தான் எல்லா  அரசியல்வாதிகளும் கசடற கற்று வைத்திருக்கிறார்கள். ஹனிபாவைப் பொறுத்தவரை அவர் அன்றும், இன்றும், என்றும், தி.மு.க.தான்.
கலைஞர் அவர்களை குறைகூறி நான் எழுதுவதை ஒருபோதும் நாகூர் ஹனிபா விரும்பமாட்டார் என்பதும் எனக்குத் தெரியும். தெரிந்தால்  நிச்சயம் வெகுண்டெழுவார். இன்றளவும் அவருக்கு தன் பால்ய நண்பர் மீது அப்படியொரு பிடிப்பு. அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. எனக்கு மனதில் பட்ட உண்மைகளை எடுத்துச் சொல்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை.
“ஹனிபா ‘கற்பு’ தவறாதவர். ஆடாமல் அசையாமல் அலைபாயாமல் சபலத்திற்கு ஆட்படாமல் எதிரிகள் கோடியிட்டு அழைத்தாலும்  ‘தொடேன்’, ‘தொடேன்’ என்கிற உறுதிமிக்க இசைவாணர், நாகூர் ஹனிபா” என்று ஹனிபாவின் ‘கற்புக்கு’ சான்றிதழ் வழங்குகிறார் டாக்டர் கலைஞர். என்ன பிரயோஜனம்? கட்சியில் அவருக்கு எந்த ஒரு முக்கிய பொறுப்பும் கொடுக்காமல், காலம் முழுதும் அவரை வெறும் ஒரு கறிவேப்பிலையாகவே பயன்படுத்திக் கொண்டு, வெறும் வார்த்தை ஜாலங்களால் அவரைக் ‘கற்புக்கரசராக’ ஆஹா.. ஓஹோவென்று.. புகழ்ந்து தள்ளுவதினால் யாருக்கென்ன இலாபம்?
“அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி” – இது அண்ணாவின் கோட்பாடு. இதற்கு எடுத்துக்காட்டாகத்  திகழ்ந்தவர் நாகூர் ஹனிபாவா அல்லது மாண்புமிகு கலைஞரா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளலாம்.
தன் வாரிசுகளையும், பேரக்குழந்தைகளையும் நல்ல நல்ல பதவிகளில் உட்கார வைத்து அகமகிழ்ந்த தமிழினத் தலைவரால் தனக்கு ஆரம்பகால முதலே, நண்பனுக்கு நண்பனாய், தொண்டனுக்குத் தொண்டனாய், உழைத்து ஓடாய்த் தேய்ந்த ஒரு கட்சி விசுவாசிக்கு, மூத்த உறுப்பினருக்கு, தன் பக்கத்தில் அமர வைத்து அழகு பார்த்திருக்க முடியாத என்ன?
கலைஞர் நினைத்திருந்தால் நிச்சயம் இதனை செய்திருக்க முடியும். ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஐந்துமுறைகள் முதலமைச்சராய் பதவியில் வீற்றிருந்தவர் அவர். ஏன் செய்யவில்லை என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த  திருக்குவளை ரகசியம். திறமையுள்ளவர்களை தட்டி வைக்கும் மனப்பான்மை கொண்டவர் கலைஞர் என்பது அவர் மீது வீசப்படும் பரவலான குற்றச்சாட்டு. கலைஞரை சுற்றியிருந்த அவரது இரத்த பந்தங்கள் வேறு யாரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒரு இரும்பு வளையத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.
அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்திற்கு கலைஞர் அவர்கள் தகுந்த உதவி செய்திருந்தால், – நேர்மைக்குப் பேர் போன அவர்,  யாரிடமும் உதவி என்று தேடிப்போய் கேட்டு பழக்கமில்லாத அவர் – தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்க மாட்டார். அண்ணாவின் குடுமபத்துக்கே இந்த அவல நிலை என்றால் மற்றவர்களுக்கு கேட்கவா வேண்டும்?
சாதிக் பாட்சா என்ற திமுக பிரமுகரை இன்றைய இளந்தலை முறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் ஆ.ராசாவின்  நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவைத்தான் இவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
தி.மு.க.வில் முதற்கட்டத்தலைவராகவும், கட்சி பொருளாளராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்சாவின் குடும்பத்திற்கு கூட அவர் ஒன்றுமே செய்யவில்லையே. சாதிக் பாட்சாவின் பேரனுக்கு மருத்துவ படிப்பிற்கு இடம் கேட்டு கலைஞர் மகன் ஸ்டாலினிடம் சிபாரிசு எதிர்பார்த்து அவரிடம் அழைத்துக் கொண்டு போனார் தேசிய லீக் பொதுச்செயலாளர் பஷீர். “பிறகு பார்க்கலாம். இப்பொழுது சிபாரிசு செய்வதெல்லாம் முடியாத காரியம்”என்று தட்டிக் கழித்து விட்டார்” கலைஞரின் அருமை புதல்வர் ஸ்டாலின்.
தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி போன்ற சம்ஸ்கிருத பெயர்களை தன் வாரிசுகளுக்கும்,. தனக்கு சொந்தமான  ஊடகங்களுக்கு (‘டிவி’க்களுக்கு) சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள் வைத்துக் கொண்டு எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலைகளை தமிழினத் தலைவர் செய்துக் கொண்டு இருப்பார்?
ராபின்சன் பூங்காவில் தி.மு.க-வை ஆரம்பித்தபோது, அறிஞர் அண்ணாவால் சுட்டிக் காட்டப்பட்ட ஐம்பெரும் தலைவர்களின் பட்டியலில் கலைஞர் அவர்களின் பெயர் கிடையவே கிடையாது. நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், அன்பழகன்  இந்த ஐந்து பேர்கள்தான் அந்த ஐம்பெரும் தலைவர்கள்.
1953-ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அப்போது இந்த மேலே குறிப்பிட்ட ஐந்து பேர்கள்தான் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு ‘ஐவர் வழக்கு’ என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
முதல் வரிசையில் இடம் பெற்றிருந்த அன்பழகன் அவர்களையே கலைஞர் அவர்கள் வாயில்லா பூச்சியாக, ரப்பர் ஸ்டாம்ப்பாக வைத்திருக்கும்போது நாகூர் ஹனிபாவை கலைஞர் அவர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார் என்று எதிர்பார்ப்பதெல்லாம் முட்டாள்தனம்.
அது ஏனோ தெரியவில்லை அந்த ஐம்பெருந் தலைவர்களின் சந்ததியினர்/ வாரிசுகள் யாருமே இப்போது கலைஞர் உடன் இல்லை. கலைஞருடைய உண்மையான சொரூபம் அவர்கள் அத்தனைப் பேருக்கும் முன்கூட்டியே தெரிந்து விட்டதோ என்னவோ.
இவர்களில் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி, மதியழகனின் தம்பி கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் கே.ஏ.கே.முகில், என்.வி.நடராசனின் மகன் என்.வி.என்.செல்வம், ஈ.வெ.கி. சம்பத் மனைவி சுலோசனா இவர்கள் எல்லோரும் இப்போது எதிர்முகாமில்தான் இருக்கிறார்கள். ஈவெ.கி.சம்பத் அவர்களின் மகன் E.V.K.S.இளங்கோவன் இருப்பதோ அகில இந்திய காங்கிரஸ் கட்சியில்.
கலைஞருடன் மிகவும் நெருங்கிப் பழகியவர் கவிஞர் கண்ணதாசன், கலைஞருடைய  அந்தரங்க வாழ்க்கை அனைத்தையும் அறிந்து வைத்திருந்தவர் அவர்.
“அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான்”
என்று தன் நண்பரின் மறுபக்கத்தை தோலுரித்துக் காட்டுகிறார். ஆரம்பக் காலத்தில் மறைமுகமாக தன் குடும்பத்தாரின் நலனுக்காக தனது பதவி அதிகாரங்களை பயன்படுத்திய கலைஞர் அவர்கள் போகப்போக எந்த அளவுக்கு பகிரங்கமாக நடந்துக் கொண்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. இதனை பல ஆண்டுகட்கு முன்னரே கவிஞர் கண்ணதாசன் வெட்ட வெளிச்சமாக்கியிருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பலகாலம் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவரின் மறுபக்கத்தை, உண்மையான சுபாவத்தை ஒருவரால் புரிந்துக் கொள்ள முடியாதா என்ன?
பகுத்தறிவு பேசியே மக்களைத் தன் பக்கம் ஈர்த்த இந்த பெருமகனார் நிஜ வாழ்க்கையிலும் பகுத்தறிவாதியாகவே தன் கொள்கையில் நிலையாக இருந்தாரா என்ற கேள்வி நம் முன் எழுகிறது. இதோ கண்ணதாசன் மேலும் கூறுவதைக் கேளுங்கள்
“பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவர்”
Stalin kadavul
Durga No.1
Photo 3
Photo 1
மேலேயுள்ள படங்களைப் பார்க்கையில் சுயமரியாதை பேசிய பகுத்தறிவாளர்கள் மக்களை எந்த அளவுக்கு முட்டாள்களாக நினைத்திருக்கிறார்கள் என்பது நன்றாக விளங்குகிறது.
– அப்துல் கையூம்

News

Read Previous

வாழ்க்கை, ஒரு கனி

Read Next

மூளையை பற்றிய சில தகவல்கள்!!!!

Leave a Reply

Your email address will not be published.