ரத்த தானம் மிக்க நலன் !

Vinkmag ad

ரத்த தானம் மிக்க நலன் !

ஷேக்கோ

“இரத்தம் குத்தி எடுக்கும் அடியார், மிகவும் நல்லவர்தான். (ஏனென்றால்) அவர் இரத்தத்தைப் போக்கி விடுகின்றார். முதுகையும் இலேசாக்கிக் கொள்கிறார். கண்களையும் ஒளிபெறச் செய்கிறார்…”

என்ற ஹதீஸ் உரை ஒன்று, திர்மிதி என்னும் ஹதீஸ் நூலில் காணப்படுகிறது. அதனை, இப்னு அப்பாஸ் (ரலி) என்பவர் அறிவிக்கின்றார்.

மதுரை, சென்னை, போன்ற பெரிய நகரங்களில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பார்த்தால், அங்குள்ள வெளிக்காம்பவுண்ட் சுவர்களில், பெரிய போர்டுகள் மாட்டப்பட்டிருக்கும்.

அந்த போர்டுகளில் ரத்த தானம் செய்யுங்கள். அதனால் உங்கள் உடம்புக்கு நன்மை விளையும். ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கும் நன்மை விளையும் என்பதாக எழுதப்பட்டிருக்கும்.

ரத்தத்தை தானம் செய்து, நோயாளிகளுக்கு உதவும்படியாக, மருத்துவமனைகள் அவ்விதம் விளம்பரப்படுத்துகின்றன.

ரத்தத்தை தானம் செய்வதன் மூலம் ரத்த தானம் செய்பவருக்கு உடம்பு கலகலப்பாக ஆகிறது. ரத்த ஓட்டம் சீர் பெறுகிறது. ரத்தம் அதிகரிக்க வழி ஏற்படுகிறது. உடல் தினவு குறைகிறது. ரத்த அழுத்த நோய் போன்றவை வராமல் பாதுகாப்பு ஏற்படுகிறது – என்றெல்லாம் கூறுகின்றார்கள் இன்றைய டாக்டர்கள்.

மேலே சொன்ன நாயக வாக்கியத்தில் காணப்படும் நன்மைகளும் இன்றைய டாக்டர்களின் கூற்றுகளும் ஏறக்குறைய ஒத்திருப்பதைக் காணும்போது, நாயகத்தின் நல்லுபதேசம், நவீன விஞ்ஞானத்துக்கும் ஏற்றதென்றே தெரிகிறது.

ரத்தத்தை ஒருவர் தானம் செய்ய முன்வந்தால், அவருக்கு இலவசமாகவே மருத்துவப் பரிசோதனைகள் செய்கிறார்கள். அவரது ரத்தம் அனிமியா என்ற ரத்த சோகை அல்லது வேறு நோய் உள்ளதா என்று பரிசோதிக்கப்படும் நல்ல ரத்தம் என்று கண்டு-

ரத்தத்தை எடுத்த பிறகு ரத்தத்தை சுமார் ஆறு நாட்கள் வரை வைத்திருக்கலாம். ரத்தம் செலுத்தப்பட்ட வேண்டியவர்களுக்கு அது உபயோகிக்கப்படும்.

ரத்தம் குத்தி எடுக்கும் முறை, அன்றைய அராபியாவில் ஒரு கை வந்த கலையாக இருந்தது. இன்றைய விஞ்ஞான முறைகளில் – டாக்டர்கள் செய்யும் பிரயத்தனங்கள் பல.

நமது இதயத்திலிருந்து உடம்பின் பல பாகங்களுக்கும் சுத்த ரத்தத்தை எடுத்து செல்லும் குழாய்களுக்கு ஆர்ட்டரி என்று பெயர். அசுத்த ரத்தத்தை உடம்பின் பல பாகங்களிலிருந்து இதயத்துக்கு திரும்பக் கொண்டு வரும் குழாய்களுக்கு வெய்ன் என்று பெயர்.

நமது கையில் முழங்கைக்கு மேலே தோலுக்கு அடிப்புறத்தில் அசுத்த ரத்தக் குழாயாகிய வெய்ன் ஓடுகிறது. உள்ளே தசைகளுக்கு நடுவில் சுத்த ரத்தக் குழாயாகிய ஆர்ட்டரி ஓடுகிறது. மேல் கையில் காற்றினால் அழுத்தம் கொடுக்கக் கூடிய பை ஒன்றைக் கட்டி சிறிதளவு அழுத்தம் ஏற்றினால் ஆர்ட்டரி என்ற சுத்த ரத்தக் குழாய் வழியாக ரத்தம் பைக்குப் பாயும். ஆனால் அந்த சிறிதளவு அழுத்தத்தினால் வெய்ன் என்ற அசுத்த ரத்தக் குழாய் அடைபட்டு ரத்தம் திரும்பிச் செல்ல முடியாமல் வெய்ன் என்ற அக்குழாய் புடைத்துப் பருத்துவிடும்.

புடைத்துப் பருத்திருக்கும் வெய்னில் ஒரு ஊசியைக் குத்தி அந்த ஊசியிலிருந்து ரப்பர் குழாய் மூலமாக ரத்தத்தைப் பாட்டில் ஒன்றில் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அந்த பாட்டிலில் முதலிலேயே சோடியம் சிட்ரேட் என்ற ஒரு வகை மருந்துப் பொருளைப் போட்டு வைத்திருப்பார்கள். அப்பொருளானது ரத்தத்தை உறையவிடாமல் தடுத்துக் கொள்ளும்.

வெய்னிலிருந்து ரத்தம் மேலே செல்ல முடியாமல் அழுத்தம் இருப்பதால் ரத்தமானது நாம் செருகி இருக்கும் குழாய் வழியாகப் பீறிட்டு பாட்டிலை அடையும்.

சுமாராக 350 சிசி ரத்தம் கொண்டது ஒரு பாட்டில். ஒவ்வொரு ரத்த தானம் செய்யும் நபரும் 350 சிசி ரத்தம் கொடுத்தல் வேண்டும்.

நமது உடம்பில் 5 லிட்டர் (5000 சிசி) ரத்தம் இருக்கிறது. அதில் 350 சிசி ரத்தமும், இரண்டு வாரங்களில் மறுபடியும் உடம்பில் ஊறிவிடும்.

இந்த முறைகளில் சேகரிக்கப்படும் இரத்தம், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உபயோகிக்கப்பட்டு விட வேண்டும். அப்படி உபயோகிக்கப்படாத இரத்தம், திரவ பிளாஸ்மா வடிவில் பாதுகாத்து வைக்கப்படும். திரவ பிளாஸ்மாவை விசேஷ செய்முறையில் காய வைத்து, பொடியாக ஆக்கி ஆண்டு கணக்கிலும் சேமித்து வைக்கலாம்.

இத்தகைய காரியங்களையெல்லாம் ரத்த தானம் பெறும் அரசாங்க அலுவலகங்களும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ரத்த தானம் செய்யப்படும் கிளப் எனப்படும் ஸ்தாபனமும் நடத்துகின்றன.

இம்மாதிரியான நாகரீக காரியங்கள் இன்று நாடெங்கும் நடக்கின்றன.

இதே காரியத்தை 1400 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகக் கூறி, ரத்தத்தை குத்தி வெளியில் எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.

 

நன்றி :

நர்கிஸ்

பிப்ரவரி 2015

News

Read Previous

கவிதைக்கு ஒரு நாளா?

Read Next

மனைவி கழுத்தை நெரித்துக் கொலை:கணவர், மாமனார், மாமியாருக்கு ஆயுள் தண்டனை

Leave a Reply

Your email address will not be published.