உடல் பருமனை குறைக்க ….

Vinkmag ad

உடல் பருமனை குறைக்க ….

  • ஏ. ரமீஜா மீரான்

 

இன்றைய வாழ்க்கை முறையில் பலருடைய தலையாய பிரச்சனை உடல் பருமன் தான். இப்பொழுதுள்ள உணவு பழக்கவழக்கம் பலரையும் குண்டாக்கி விட்டது.

உடல் எடையை குறைக்க பலர் ஜிம்முக்கு போகின்றனர். அங்கே எவ்வளவு தான் குனிந்து நிமிர்ந்தாலும் உடல் எடை குறைவது சிலருக்குதான். பொதுவாக நாம் உண்ணக்கூடிய உணவில் கொழுப்பு சத்துக்கள் அடங்கியுள்ளன. அந்த சத்துக்கள் அதிகமாக இருக்கும்போது, அவை உடல் உழைப்பு மூலம் சரியாக செலவழிக்கப்படாமல் இருந்தால், உடலில் ஆங்காங்கே தேங்கி விடுகிறது. இதன் விளைவுதான் தொப்பை மற்றும் உடல் பருமன்.

முன்பெல்லாம் வீட்டு வேலைகளை ஓடியாடி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த பெண்கள் கூட, இன்று வெட்டிதனமாய் பொழுதை போக்கி குண்டாகி கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் எடையை குறைக்க ஆசைப்படுபவரா?

உங்களுக்கான சில டிப்ஸ்கள் :

எடைக் குறைப்பில் இறங்குவதற்கு முன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்தத்திலுள்ள கொழுப்பு சத்தின் அளவு, தைராய்டு சுரப்பியில் செயல்பாட்டை சோதிக்கும் பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும்.

மாதவிலக்கு பிரச்சனை இருப்பவர் கட்டாயம் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.

சாப்பிடும் போது நேரம் தவறாமை முக்கியம், காலை உணவை 8-9 மணிக்குள்ளாகவும், மதிய உணவை 1.30 – 2.30 மணிக்குள்ளாகவும், இரவு உணவை 9 மணிக்குள்ளாகவும் முடித்துக் கொள்ளுங்கள்.

மதிய சாப்பாட்டிற்கு பிறகு தூக்கம் கண்களை சொக்கும். ஆனால் தூங்காதீர்கள்.

சிலர் எடைக் குறைப்பதற்காக காலை உணவை தவிர்த்து விடுவார்கள். நமது உடலில் உள்ள உறுப்புகள் நன்றாக செயல்பட காலை உணவு தான் மிகவும் முக்கியம். எனவே காலை உணவை தவிர்க்கவே கூடாது.

எடையை குறைப்பதற்கு உணவை குறைத்துக் கொள்வது சரியான முறை அல்ல. ஏனெனில் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கும், தினசரி வேலைகளை செய்வதற்கான சக்தியளிப்பதற்கு மட்டுமல்லாது, நமது வளர்ச்சிக்கும், சுவாசிப்பதற்கும் கூட போதுமான கலோரி தேவை. திடீரென உணவை குறைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், முடி உதிர்தல், அடிக்கடி நோய் தொற்றுதல் போன்றவை ஏற்படும்.

உடல் இளைப்பதற்காக பட்டினி இருக்கக் கூடாது. இதனால் ஊட்ட சத்து குறைவு ஏற்பட்டு எலும்பு பலகீனமாகும். மேலும் பட்டினி கிடப்பது பழகிப் போய் விட, உணவையே ஏற்க மறுத்துவிடும் நிலைக்கு குடல் சுருங்கி விடும். இதற்கு தக்க உடற்பயிற்சி, குனிந்து – நிமிர்ந்து வேலை செய்தல், அளவான உணவு, அதிகளவு காய்கறி சேர்ப்பது, அதிகமான எண்ணெய் மசாலா, மாமிச வகைகளை தவிர்த்தல் போன்றவை உடலை இளைக்க வைப்பதோடு உடலையும் அழகுப்படுத்திவிடும்.

இரவு நேரத்தில் அசைவ உணவை தவிர்த்திடுங்கள். சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். 30,35 வயதினர்கள் இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி மட்டுமே உட்கொள்வது நல்லது.

கிடைத்த உணவை எல்லாம் சாப்பிடாமல் உங்களுக்கு பிடித்த உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

சாப்பிடும் போது டிவி பார்ப்பது, போன் பேசுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது போன்றவைகளை தவிர்த்து விடவும், ஏனெனில் நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று தெரியாது. சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று சுவைத்து உண்ணுங்கள்.

முக்கியமாக விஷேச நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது உணவை அதிகமாக உண்ணாதீர்கள். இதை தவிர்த்து கொள்வது நல்லது.

முக்கியமாக நொறுக்கு தீனிகளை உட்கொள்ளாதீர்கள். எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை தவிர்த்திடுங்கள். கேக் வகைகள், ஐஸ்கீரிம், சாக்லெட் போன்றவற்றை அறவே சாப்பிட வேண்டாம். எடை கூடுவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

உடல் எடை அதிகமானவர்கள் ஃப்ரைடு ரைஸ், தயிர் சாதம் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.

உடல் குண்டானவர்கள் அரிசி உணவுடன் கீரை மற்றும் நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் உணவிலிருந்து பிரியும் சர்க்கரை ரத்தத்தில் மெதுவாக சேர்ந்து உடல் பருமனை தடுக்கிறது.

உடல் பருமன் அதிகமுள்ளவர்கள் தொடர்ந்து காளான் சாப்பிட்டு வந்தால், அதிக எடையை குறைக்க முடியும். கூடுதல் எடை ஏறுவதையும் தடுக்க முடியும் என்கிறது ஒரு ஆய்வு. குண்டாக இருப்பவர்கள் அதிக கலோரி கொண்ட உணவை எடுத்துக் கொள்வதை விட, குறைந்த கலோரிகள் கொண்ட காளான் வகை உணவுகளை சாப்பிடலாம். மெல்லிய உடல் அழகு வேண்டுமென விரும்புபவர் இனி தங்களது உணவில் காளானை சேர்த்துக் கொள்ளவும்.

நன்றி :

நர்கிஸ் மாத இதழ்

பிப்ரவரி 2015

News

Read Previous

நிதானம் எனும் அழகிய பண்பு

Read Next

பாரதிதாசனின் ”குடும்ப விளக்கு” ஒரு பார்வை

Leave a Reply

Your email address will not be published.