மறைந்தது சகாப்தமே !

Vinkmag ad

மறைந்தது சகாப்தமே !

-சேமுமு

 

மாபெரும் கல்வித் தந்தை, நவீன சீதக்காதி, இலட்சக்கணக்கானோர் இல்லங்களில் வாழ்வொளி தந்த வள்ளல், அநாதைகளைப் பாதுகாத்த சமுதாயக் காவலர், அகில உலகில் தமிழின் புகழை உயர்த்திய மறத்தமிழர் அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் 07-01-2015 மாலை வஃபாத்தானார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாருக்காக ….

மேன்மை வாழ்வின்

சீர்மை விதைகளை

வாகாய் விதைத்த

தமிழரின் தயாளரே…

 

இலக்கண மறையும்

இலக்கிய நபியும்

இதயம் ஏந்திய

சமுதாயச் சீராளரே…

 

செறிவான சிந்தனை

கனிவான பேச்சு

துணிவான செயல்

ஒன்றான செம்மலே…

 

ஆயிரங்காலத்துப்

பயிர்களுக்காக

அறிவு மழை தந்த

கல்வி மேகமே…

 

வறண்டு வந்த

கோடிக் கரங்களில்

வளமைப் பணி

வார்த்த வள்ளலே…

 

பற்றுதலில் களிக்கும்

உந்துதல் உலகில்

தந்து தந்து சிவந்த

வற்றாச் செங்கதிரே…

 

சார்ந்த சமுதாயம்

கனிந்து தழைக்கத்

தம்மை அர்ப்பணித்த

செம்மைச் சகாப்தமே…

 

உற்ற நற்பண்பால்

நற்றவச் செயலால்

நகலாக வாழாமல்

அசலாய் நிலைத்தவரே

 

கல்விக் கொடைமுன்பு

காலத் திரைகள்

வேரற்று வீழுமெனச்

சீர்வழி நின்ற சிங்கமே…

 

அறக் கொடைகள்

ஆயிரம் ஆயிரம்

அவனிக்களித்த

அப்துர் ரஹ்மானே…

 

இறைநாட்டம்-

இம்மை முடிந்து

இதோ மறுமைக்கான

இனிய பயணம்…

 

உம்மால் உயர்ந்த

கரங்கள் அனைத்தும்

உயர்ந்தன கண்ணீரோடு

துஆ செய்துகொண்டே !

 

 

( இனிய திசைகள் – ஜனவரி 2015 லிருந்து )

News

Read Previous

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

Read Next

நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published.