‘கேர்ள் ஃப்ரெண்ட் – பாய் ஃப்ரெண்ட்’ இல்லாமல் இருப்பது தவறா?

Vinkmag ad
  • ஆனந்த் கிருஷ்ணா

இன்று உறவுகளின் கட்டமைப்பு பெரிதும் மாறிப்போயிருக்கிறது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவுகூட அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறது. பெற்றோருக்கு நிறைய விஷயங்கள் தெரியும், பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாது என்னும் நிலை தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது. பெற்றோரின் அதிகாரம் பெரிதும் குறைந்துபோயிருக்கும் காரணத்தால் பிள்ளைகளின் மண வாழ்க்கையில் தம் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கப் பெற்றோர்கள் மெனக்கெடுகிறார்கள்.

பிள்ளைகளின் தரப்பிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் முன்பு போலன்றிப் பெருமளவுக்கு மின்னணுச் சாதனங்களைச் சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். செல்ஃபோன், கம்ப்யூட்டர், ஐபாட், டேப்லெட் என்று தொழில்நுட்பத்தின் இன்றைய கண்டுபிடிப்புகளுடன் வாழ்கிறார்கள். இண்டர்நெட் உலகில் பெரிதும் சஞ்சரிக்கிறார்கள். தாய் தந்தையரின் பங்கை இண்டர்நெட் எடுத்துக்கொண்டு விட்டிருக்கிறது. வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகள் அடிப்படையிலேயே மாறிப் போயிருக்கின்றன.

அன்பு என்பதன் பொருள் இன்று மிகவும் சிதைந்துபோயிருக்கிறது. அன்பு என்ற பெயரில் ஏதேதோ விஷயங்கள் நடமாடிக்கொண்டிருக்கின்றன. ஒரு இளம்பெண்ணிடம் ஒரு இளைஞனோ அல்லது ஒரு இளைஞன் ஒரு இளம்பெண்ணுடனோ கொஞ்சம் கனிவாகப் பேசினால் அது காதல் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. சிநேகம், காதல், இந்த இரண்டுக்கும் இடையில் ‘கேர்ள் ஃப்ரெண்ட்-பாய் ஃப்ரெண்ட்’ என்று புதிதாக ஒரு தளம் உருவாகியிருக்கிறது. பாய் ஃப்ரெண்ட் இல்லாத ஒரு பெண் ஏதோ அடிப்படைத் தகுதியை இழந்துவிட்டவள்போல் கணிக்கப்படுகிறாள்.

அதேபோல் கேர்ள் ஃப்ரண்ட் இல்லாத ஒரு இளைஞன் மட்டமாகப் பார்க்கப்படுகிறான். இளைய தலைமுறையினர் தன் சுயத்தைப் பற்றிய உணர்வை அடைவதற்கு இதுபோன்ற விஷயங்களைச் சார்ந்திருக்கிறார்கள். இந்த இலக்கணம் புதிதாக இருக்கும் காரணத்தால் பெற்றோர்களும் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். இந்தக் காரணங்களால் இந்தத் தலைமுறையினரின் உறவுகள் குழப்பத்தில் சிக்குண்டிருக்கின்றன. இதில் யாரையும் குறை சொல்வதில் அர்த்தமில்லை. பெற்றோரும் பிள்ளைகளும் உறவு என்பது பற்றி அடிப்படைக் கேள்விகளைக் கேட்டு விடை கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள்.

எனக்கு 23 வயது. நான் ஐந்து ஆண்டுகளாக ஒருவரைக் காதலிக்கிறேன். பிரச்சினை என்னவென்றால் என் காதலன் என்னைவிட ஒரு வயது சிறியவன். என் காதலனுக்கு நல்ல வேலை, நல்ல குடும்ப பின்னணியும் இருக்கிறது. ஆனால் என் பெற்றோர் என் திருமணத்திற்கு சம்மதிக்க மறுக்கின்றனர். என் காதலர் என்னைவிட வயதில் சிறியவராக இருப்பது பிரச்சினையா? அல்லது வேறு என்ன பிரச்சனை என்று என் பெற்றோர் காரணம் கூற மறுக்கின்றனர். அவர்களை எப்படி என் காதலை ஏற்றுக்கொள்ள வைப்பது?

சில விஷயங்கள் பல்லாண்டு காலமாக நடந்துவரும் பழக்கம் காரணமாகவே உண்மையாகிவிட்டிருக்கின்றன. இந்த வயது விஷயமும் அப்படித்தான். அதனாலேயே அதை மாற்றுவது என்பது பெற்றோர் மனத்திலும் பெரும் அச்சத்தை விளைவிக்கிறது. பழகிப்போன வாழ்க்கை முறையை, பல்லாண்டு கால மரபை, மாற்றுவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. நாம் பெற்றோர்களின் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம். பெற்றோர்கள் உலகத்தின் ஒப்புதலை எதிர்பார்க்கிறார்கள்.

மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சம்தான் பெருமளவுக்குப் பெற்றோர்களின் மனங்களையும் ஆட்டுவிக்கிறது. இந்தக் காரணத்தாலேயே அவர்களும் உங்களிடம் வெளிப்படையாகத் தங்கள் மனத்தில் உள்ளதைச் சொல்ல முடியாமல் இருக்கலாம்.

இந்த மாதிரி விஷயங்களில் மரபிலிருந்து விலகி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வாழ்க்கையானது, மரபு ஓட்டத்தின் எல்லைகளுக்குள் அடங்கிவிடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு விதத்தில் சவால்தான். தீர யோசித்த பின்பே முடிவெடுக்க வேண்டும். ஆனால் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கான முழுப் பொறுப்பை நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நான் ஓர் பெண்ணை மிகவும் நேசித்தேன். அவளும் என்னை விரும்பினாள். இப்போது அவள் கல்லூரியில் படிக்கிறாள். நான் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இரண்டு மாதம் நன்றாகப் பேசியவள் இப்போது ஐந்து மாதங்களாகப் பேசுவதில்லை. காரணம் தெரியவில்லை. எனக்கு ஒரு முடிவு தெரிய வேண்டும். நான் அவளுக்கு வேண்டும், வேண்டாம்; பிடிக்கும், பிடிக்காது என்ற ஏதாவது ஒரு முடிவை அவளிடம் எதிர்பார்க்கிறேன். எப்படி அதைத் தெரிந்துகொண்டாவது?

உறவு என்பது மிகவும் சிக்கலான விஷயம். காரணம் மனத்தில் உள்ள சிக்கல்கள்தான். சிறு வயதில் இருந்தே சுற்றியுள்ள வாழ்க்கை நடப்புகளைப் பார்த்து மனத்தில் பல கனவுகள் உருவாகிவிடுகின்றன. வாழ்க்கையையும் உறவுகளையும் அந்தக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளும் களமாகவே பார்க்கிறோம். இது நியாயமானது, இதுதான் வாழ்க்கை என்றுகூட நம்புகிறோம். ஆனால் இந்த வாழ்க்கை முறை நம் சந்தோஷத்தைக் கெடுக்கிறது. உறவு என்பதன் மகத்துவத்தைச் சிதைக்கிறது.

வாழ்க்கையை அனுபவிக்காமல் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் மனோபாவம் அதன் உன்னதத்தைக் குலைக்கிறது. உறவின் ஆரம்பக் கட்டங்களில் நம் கனவுகளை அந்த மற்றவர் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் விலகிப் போய்விடுவதும் நடக்கிறது. அந்தப் பெண்ணிடம் நேரடியாகக் கேளுங்கள். பதில் சொல்லவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையை மேற்கொண்டு நடத்துங்கள். அந்த ஒரு பெண்ணை நம்பி நீங்கள் பிறக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

News

Read Previous

தமுமுக ஆலோசனைக் கூட்டம்

Read Next

3100ம் ஆண்டு வரை தேதிக்கு கிழமை சொல்லும் சிறுவன் : அதிசயிக்கின்றனர் பெற்றோர், ஆசிரியர்கள்

Leave a Reply

Your email address will not be published.