ஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு

Vinkmag ad

கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 2001

மலேசியாவில் எழுதப்பட்டது

ஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு

(முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)

 

“மஅல் ஹிஜ்ரா” இஸ்லாமியப் புத்தாண்டு இன்று பிறந்திருக்கிறது. உலகமெங்கும் ஊரும் இஸ்லாமியச் சகோதரர்கள் தங்களின் புனிதப் புத்தாண்டை வரவேற்று விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

“BER SHUKUR TANDA KE TEGOHAN IMAN”

”நன்றி வலுவான் இறை நம்பிக்கையின் அடையாளம்” என்ற கொள்கையை தாரக மந்திரமாக ஏற்று இவ்வாண்டு நமது மலேசியத் திருநாட்டில் வாழும் இஸ்லாமிய சமுதாயம் தனது புதிய புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது !

‘ஹிஜ்ரி’ எனும் இஸ்லாமிய ஆண்டுக்கணக்கு இஸ்லாத்தின் தோற்றுவாய் அல்ல ! “ஹிஜ்ரா” என்னும் சம்பவமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தான் ! அதற்கு முன்பு வாழ்ந்த அரபு குலம் பலவகை ஆண்டுகளைக் கணக்கில் கொண்டு வாழ்ந்து வந்தது.

இறுதி நபியாக இவ்வுலகுக்கு அறிவிக்கப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்த பின்பு தான் ஹிஜ்ரி ஆண்டின் சிந்தனையே பிறந்தது.

இன்னும் சொல்வதானால் ஹிஜ்ரா சம்பவம் நடந்து முடிந்து பதினேழு ஆண்டு காலம் கடந்த பின்பு தான் ஹிஜ்ரா வருடக்கணக்கே உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது; அறிவிக்கப்பட்டது.

நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின்னர் ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) கவர்னராகப் பதவி ஏற்றார்கள். அவர்களின் மறைவிற்குப்பின் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று அலங்கரித்தார்கள்.

நீதியும் நிர்வாகத் திறமையும் கொண்ட உமரின் ஆட்சியிலே பல சீர்திருத்தங்களும் புரட்சிகரமான திட்டங்களும் செயல் முறைக்கு வந்தன ! இஸ்லாமிய வளர்ச்சியும் உலகெங்கும் பரவி நின்றது !

இந்தக் கால கட்டத்தில் அரபுகள் கடைப்பிடித்து வந்த ‘யானை ஆண்டு’ என்னும் பழைய ஆண்டு முறையைக் கடைப்பிடிப்பதில் பல சிக்கல்களும் நிர்வாகச் சிரமங்களும் ஏற்பட்டன. அரபுகள் கடைப்பிடித்து வந்த இந்த ‘யானை ஆண்டு’ என்பது நபிகள் நாயகம் பிறப்பிற்கு முன்பே இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சிரமங்களை சீர்திருத்திக் கொள்ள வேண்டி ஒரு புதிய ஆண்டு முறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து ஆட்சியாளர்களிடம் கனிந்தது. ஆலோசனை மன்றத்தில் இக்கருத்தை உரைத்துப் பேசப்பட்டது.

“நபிகள் நாயகம் பிறந்த தினத்தைக் கொண்டு இஸ்லாமிய வருடத்தை புதிதாகக் கணக்கு வைத்துக் கொள்ளலாம்” என்று சிலர் கூறினர். “இல்லை … இல்லை… பெருமானாருக்கு திருமறை குர்ஆன் வேதம் அருளப்பட்ட நாளை வைத்து அவர்கள் நபியாகப் பிரகடனம் செய்யப்பட்ட அந்த நாளை வைத்து ஒரு புது வருட முறையைக் கையாளலாம்” என்று சிலர் கூறினர்.

“நபிகள் நாயகத்தின் வாழ்வில் ஏற்பட்ட – ஒரு தியாக அடிப்படையில் நிகழ்ந்த – மக்காவைத் துறந்து மதினாவுக்குப் பயணமான – ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து – அந்நாளைக் குறிப்பிட்டுக் கூறும் வகையில் இஸ்லாமியப் புத்தாண்டின் பிறப்பை கணக்கில் வைக்கலாம்” என்று அறிவின் சிகரம் அலி (ரலி) அவர்கள் தனது கருத்தைக் கூறினார்கள்.

இதுவே எல்லோராலும் ஏகோபித்து ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. இத்தீர்மானமே அகில உலகம் முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டது. ஹிஜ்ரத்துப் பயணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆண்டு முறைக்கு “ஹிஜ்ரா ஆண்டு” என்றும் பெயர் சூட்டப்பட்டது.

ஹிஜ்ரா சம்பவம் நடைபெற்றுச் சரியாக 17 ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தான் இந்த ஹிஜ்ரா ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அந்த ஆண்டு ஹிஜ்ரி – 17 என்றும் கணக்கிடப்பட்டது. வருடத் துவக்கத்தை முஹர்ரம் மாதம் முதல் அமலுக்குக் கொண்டு வருவது எனவும் தீர்மானித்து செயல்முறைபடுத்தப்பட்டது.

அன்று செயல்முறைக்கு வந்த ஹிஜ்ரா ஆண்டு இன்று நாம் கொண்டாடும் இந்த வருடம் (26-2-2001) இன்று 1421 வது ஹிஜ்ரா ஆண்டாகும்.

இதைத்தான் உலகிலுள்ள இஸ்லாமிய சமுதாயம் ஏற்றுச் செயல் படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு பிறப்பை விட, ஒரு புகழை விட, ஒரு மகத்தான தியாகத்துக்கு இஸ்லாமிய உலகம் மதிப்பளித்து நடைமுறைப்படுத்தி இருப்பது பெருமைக்கும் பாராட்டுக்கும் உரிய செயலன்றோ?

தியாக உணர்வுகள் ஓய்வதில்லை – தியாகங்கள் சாவதில்லை – தியாகங்கள் மனித மனங்களில் இருந்து மறக்கப்படுவதில்லை – தியாக வரலாறு உலக அரங்கில் மறைக்கப்படுவதில்லை என்பதற்கு ஹிஜ்ரா ஆண்டு உருவான வரலாறும் ஒன்றாகும்.

இந்த தியாக உணர்வின் விளைவால் ஏற்படும் புத்துணர்ச்சிகள், புதிய செயல்பாடுகள், புதிய சிந்தனைகள், புதிய வடிவங்கள் ஒரு புதிய உலகைத் தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு புதிய உணர்வும் ஒரு புது வரலாறை எழுதும் ! ஒவ்வொரு புதிய வியர்வைத் துளியும் ஒரு புது உலகை முளைக்க வைக்கும் ! ஒவ்வொரு புதிய

சிந்தனையும் ஒரு புது வானம் புது பூமிகளை உருவாக்கும் ! அந்தப் புதிய பூமியை உருவாக்க நாமும் நம் ஹிஜ்ரா சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்வோம் ! புதிய சமுதாயம் படைப்போம் !! ஒற்றுமை காப்போம் ! உயர்ந்து நிற்போம் !

 

 

 

 

மஅல் ஹிஜ்ராவின் கருப்பொருள் !

(முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)

 

இஸ்லாமியர்களின் “ஹிஜ்ரி” புனிதப் புத்தாண்டு பிறந்து விட்டது ! புதிய ஹிஜ்ரா 1421 ஆம் ஆண்டு இன்று பூத்து நிற்கிறது ! அகில உலகமெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் தங்களின் புத்தாண்டை அகமகிழ்வுடன் வரவேற்று முகமலர்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

நமது மலேசியத் திரு நாட்டில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களும் இந்த 1421 ஹிஜ்ராப் புத்தாண்டை அமைதியுடனும் மன நிறைவுடனும் இன்று குதூகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ! எல்லாப் புகழும் இறைவனுக்கே !

“BER SHUKUR TANDA KE TEGOHAN IMAN” ”நன்றி, வலுவான இறை நம்பிக்கையின் அடையாளம்” என்ற கருப்பொருளுடன் நமது மலேசியத் திரு நாடு இவ்வாண்டு ஹிஜ்ரா விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது ! இது காலத்திற்கேற்ற கருத்தாழ மிக்கக் கருப்பொருளாகும் !

“நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்று அன்று வாழ்ந்த பொய்யா மொழிப் புலவன் சொல்லி வைத்த மெய்மொழியை சிந்தையில் வைத்துச் செயல்படும் நிலையில் இன்றைய நாளில் ‘மஅல் ஹிஜ்ரா’ நம்மிடம் மலர்ந்திருக்கிறது !

நன்றி !

நன்றி என்பது மனித வாழ்வில் இன்றியமையாத நற்குணம், நன்றியுள்ள மனிதனை நானிலமே போற்றும் ! நன்றி கொன்ற மனிதனை நாடெல்லாம் தூற்றும் ! இது நம் வாழ்வில் அன்றாடம் காணும் நிகழ்ச்சியே !

நன்றி என்பது நம்முடைய வீட்டில் மட்டுமல்ல நாம் வாழும் நாட்டிற்கும் செலுத்த வேண்டிய கட்டாயக் கடமையாகும் !

சமுதாய மக்களின் நலனுக்காக அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடித் தடமும் நாளை கதை பேசும் ! நாட்டு மக்கள் உயர்வுக்காக உழைத்துச் சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியும் நாளை சரிதை கூறும் ! தன் மக்கள் நலன் எண்ணிச் செயல்படும் ஒவ்வொரு சம்பவமும் நாளை சரித்திரமாகும் ! நாட்டு மக்கள் நலன் கருதிக் கூறும் ஒவ்வொரு சொல்லும் நாளை ஒவ்வொரு உயர்வைத் தரும். இது சரித்திரம் கூறும் சத்தியம் !

இந்த அமைப்பில் நமக்காக – நம் உயர்வுக்காக நம் சமுதாய வாரிசுகளாம் நாம் பெற்றெடுத்த, நம் கண்மணிகளுக்காகப் பாடுபட்டு வரும் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றி என்ன?

குடும்பமாகட்டும்; குலமாகட்டும்; வீடாகட்டும்; நாடகட்டும் – நமக்கு மேல் நின்று நலனுழைக்கும் நற்பணியாளர்களுக்கு மனதால் – மொழியால் – செயலால் மாறுபாடு செய்யாமல் பிரிவு படாத ஆதரவையும் நெஞ்சின் நன்றியையும் காணிக்கை செய்வது தான் நாம் செய்ய வேண்டிய கடமை ! மனதால் மாறுபட்டு செயலால் கூறு போட்டு கொள்கையால் வேறுபட்டுப் போகும் போது எப்படி நாம் நன்றியுள்ளவர்களாக வாழ முடியும் ?

குறைகளை மட்டும் கொக்கறித்து நிற்காமல் நலன்களையும் நெஞ்சத்தில் நிறுத்திப் பார்த்தால் நாம் எவருக்கும் நன்று கொன்றவராக இருக்க மாட்டோம். நன்றிக்கு உட்பட்டவர்களாக இறை விசுவாசத்தை வலுவாகக் கொண்டவர்களாக மதிக்கப்படுவோம்.

அப்படிப்பட்ட உத்தமர்களாக நாம் வாழ வேண்டும் உயர வேண்டும் என்ற அடிப்படையில் தான் இவ்வாண்டு நம் நாட்டு ‘ மஅல் ஹிஜ்ரா’ கொள்கை வாசகம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் ஒரு முறை நெஞ்சக் கமலத்தில் விதைத்து வைப்போம் ! “நன்றி ! வலுவான இறை நம்பிக்கையின் அடையாளம்”

 

News

Read Previous

எழில் நிறைந்த இளமங்கை

Read Next

நாவைப் பாதுகாப்போம்

Leave a Reply

Your email address will not be published.