மதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி

Vinkmag ad

periyasamy_01

அரியலூர் மாவட்டம் மருதூர் மக்களைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காகத் தனி மனிதனாகப் போராடி வருகிறார் மண்டல நன்னடத்தை அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற பெரியசாமி. செயங்கொண்டம் அருகே இருக்கிறது மருதூர். எந்த முன்னேற்றமும் எட்டிப் பார்க்காத சிற்றூர் இது. கூப்பிடு தொலைவில் முந்திரிக் காடுகள் இருப்பதால் பள்ளிக் சிறுவர்கள் கூட இங்கே மது, சூது என வழிதவறிக் கிடப்பது வெகுஇயல்பான ஒன்று. தான் பிறந்த இந்த ஊரைத் திருத்துவதற்காக ஒன்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறார் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி.

“சட்டம்(எம்.ஏ., பி.எல்.,) படித்த எனக்கு 1972- இல் சிறைத் துறை நன்னடத்தை அலுவலர் பதவியும், காவல்துறை சார்பாளர் (எசு.ஐ.) பதவியும் ஒரே சமயத்தில் தேடி வந்தன. செல்வந்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கைகட்டி ஊழியம் செய்வதை விட அடித்தட்டு மக்களுக்கு ஊழியம் செய்வதே நலம் என்று முடிவெடுத்து நன்னடத்தை அலுவலர் பணியில் சேர்ந்தேன். எனது பணிக்காலத்தில், தவறு செய்யாமல் சிறைக்கு வந்த பலரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றி இருக்கிறேன். தவறுசெய்துவிட்டுச் சிறைக்கு வந்தவர்களை நல்வழிப்படுத்தி திருத்தி இருக்கிறேன்.

மண்டல நன்னடத்தை அலுவலராக இருந்து 2005- இல் நான் ஓய்வுபெற்றேன். அதன்பிறகுதான் எனது சமுதாயப் பணியே தொடங்கியது என்று சொல்லலாம். 1962- இலிருந்து மருதூர் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகவே இருந்தது. அதை மேல் நிலைப்பள்ளியாக உயர்த்துவது, மருதூருக்குத் தொடக்க நல்வாழ்வு நிலையம் கொண்டு வருவது ஆகிய இரண்டும்தான் நான் எடுத்துக்கொண்ட முதல் பணி.

பள்ளியில் என்னோடு படித்த பழைய மாணவர்கள், நண்பர்களின் உதவியோடு உரூ.2 இலட்சம் நிதி திரட்டி அரசாங்கத்தில் செலுத்தி 2007- இல் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தினோம். அதேபோல் எனக்குத் தெரிந்த அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணையோடு தொடக்க நல்வாழ்வு நிலையத்தையும் கொண்டு வந்தோம். இப்போது, எனது ஓய்வூதியத்தில் மாதம் ஐயாயிரத்தை ஏழைகள், ஆதரவற்ற பிள்ளைகள் முதலானோர் படிப்புக்காக ஒதுக்கி வைக்கிறேன்.

இத்தனையும் செய்து என்ன பயன்? அடிமை வேறுபாடில்லாமல் நிறைய பேர் குடிக்கு அடிமையாகிக் கிடக்கிறார்களே. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சாராயத்தைக் குடித்துவிட்டு முந்திரிக்காட்டுக்குள் சீட்டாடுவதைப் பார்க்கையில் நெஞ்சு கொதிக்கிறது.

பாழும் குடியிலிருந்து மக்களைத் திருத்துவதற்காகவே ‘மக்கள் மறுமலர்ச்சி மன்ற’த்தைத் தொடங்கினேன். ஆண்டு தவறாமல் பொங்கல் விழா நடத்திக் கலை நிகழ்ச்சிகள் மூலம் குடியின் தீமைகளை உணர்த்துவேன். குடியால் வரும் 25 வகையான நோய்களைப் பற்றிய துண்டறிக்கைகள் அடித்து வீடுவீடாகப் போய்ப் பெண்களிடம் கொடுத்து வந்தேன். குடிகாரர்களுக்கும் நெறியுரை அளித்தேன். அதில் சிலர் திருந்தினார்கள்; சிலர் வருந்தினார்கள்.

ஊரின் முதன்மைத் தெருக்களில் ‘படிப்பால் உயர்வது முதல் வேலை.. பாழும் மதுவை ஒழிப்பது மறுவேலை, உயர்வதற்கு படிக்கச் செல்.. ஒழிவதற்கு குடிக்கச் செல், மாணவ மணிகளே குடிக்காதீர்.. மானம் இழந்து சாகாதீர், மதுவால் அழியும் மடையனுக்கு மனைவி, மக்கள் எதற்காக?’ என்றெல்லாம்   எண்ணெய் வண்ணத்தில் (ஆயில் பெயிண்டில்) முழக்கங்களை எழுதிப் பரப்பினேன். எனது இந்த முயற்சிகளுக்குப் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு’’ என்கிறார் பெரியசாமி,

அதோடு வருத்தத்துடன் ஒரு கேள்வியையும் அவர் முன்வைக்கிறார். “1973-வரை குடி என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த எங்கள் கிராமத்தை குடிகாடா ஆக்கிட்டாங்க. ‘குடிக்காதே’ என்று சொல்ல வேண்டிய அரசாங்கமே, மதுக் கடைகளை திறந்துவிட்டு குடிக்கச் சொன்னால் என்னய்யா நியாயம்?’’ என்பதே அவரது கேள்வி.

நன்றி: தமிழ் இந்து 

News

Read Previous

முதுகுளத்தூர் அருகே 3 மகள்களை எரித்துக்கொன்று தாயும் தற்கொலை

Read Next

சீனி நைனா முகம்மது நினைவேந்தல்

Leave a Reply

Your email address will not be published.