பிரபலமாகி வரும் நாட்டுக் கோழி வளர்ப்பு

Vinkmag ad

வேளாண்மை

பிரபலமாகி வரும் நாட்டுக் கோழி வளர்ப்பு

நம் கிராமங்களில் நடைபெறும் அசைவ விருந்துகளில் நாட்டுக் கோழி கறிக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. பிற அசைவ உணவுகளில் காண முடியாத தனிச் சிறப்பான அதன் ருசியே இதற்கு காரணம். அது மட்டுமின்றி உடல் நலம் குன்றியவர்களை வலுப்பெறச் செய்யும் வகையில் அவர்களுக்கு உணவாக மட்டு மின்றி, மருந்தாகவும் நாட்டுக் கோழி உணவுகள் திகழ்கின்றன.

தற்போது மக்களிடையே பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, சோளம், கேழ்வரகு போன் றவை பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் நாட்டுக்கோழி இறைச்சியும், நாட்டுக்கோழி முட்டைகளும் பிரபலமடைந்து வருவதாகக் கூறுகிறார் சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சுந்தரேசன்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: “நாட்டுக்கோழிகள் பாரம்பரியமாக குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் வளர்க்கப் படுகிறது. பெண்கள்தான் பெரும் பாலும் இதை பராமரிக்கின்றனர். பெண்கள் குறைந்த அளவில் 10 முதல் 20 நாட்டுக் கோழிகளை வளர்த்து, அவற்றில் கிடைக்கும் நிலையான வருமானத்தை சிறுவாட்டுக் காசு என்னும் சிறு சேமிப்பாக சேர்த்து குடும்பத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வீட்டில் திடீரென்று ஏற்படும் செலவினங் களுக்கு தங்களிடம் உள்ள நாட்டுக்கோழிகளை விற்று பயன்படுத்துவதால் நாட்டுக் கோழிகளுக்கு “நடமாடும் வங்கி” என்ற பெயர் பொருத்தமான முறை யில் அழகு சேர்க்கிறது.

கிராமப்புற மக்களுக்கு நிரந்தர வருவாய், குறைவான முதலீடு, எளிதானப் பராமரிப்பு போன்றவை நாட்டுக் கோழி வளர்ப்புக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. கலப்புத் தீவனம் மட்டும் அல்லாமல், காய்கறி கழிவுகள் மற்றும் புல், பூண்டு போன்றவற்றை உண்பதால் தீவன செலவு குறையும்.

அதிக நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டவை. குறைந்த கொழுப்பு சத்து கொண்ட நாட்டுக் கோழியிறைச்சி வயதானவர்களுக்கும் ஏற்றது. கிராம மக்களின் புரதத் தேவையை நாட்டுக்கோழி இறைச்சியும், முட்டைகளும் பூர்த்தி செய்கின்றன.

நாட்டுக்கோழிகளில் நான்கு முக்கியத் தூய இனங்கள் உள்ளன. அவை, அசீல், கடக்நாத், சிட்டகாங் மற்றும் பஸ்ரா முதலியனவாகும். நாட்டுக்கோழிகளை தீவிர முறை வளர்ப்பு, புறக்கடை வளர்ப்பு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள நாட்டுக் கோழிகள் வளர்ப்பு என பராமரிப்பு வசதிகளுக்காக வகைப்படுத்திக் கொள்ளலாம். தீவிர முறை வளர்ப்பில் அசில் மற்றும் அசில் கலப்பினங்களும், புறக்கடை வளர்ப்புக்காக நந்தனம் கோழி – 1 மற்றும் 2 மற்றும் மற்ற மாநிலங்களில் உருவாக்கப்பட்ட வனராஜா, கிரிராஜா, கிராமப்பிரியா போன்ற ரகங்களும் ஏற்றவை.

நாட்டுக் கோழி வளர்ப்பு என்பது பாரம்பரியமான முறைதான். அதையே அறிவியல் ரீதியிலான பராமரிப்பு முறைகளைக் கையாண்டு வளர்க்கும்போது அதனால் கிடைக்கும் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது” என்கிறார் சுந்தரேசன்.

மேலும் விவரங்களுக்கு: 94426 34411.
தி இந்து

News

Read Previous

செப்டம்பர் 19, அஜ்மானில் இலவச மெகா மருத்துவ முகாம்

Read Next

பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published.