போவோமா ஊர்கோலம்…?

Vinkmag ad
போவோமா ஊர்கோலம்…?

http://www.kayalnews.com/essays/experience-new/5124-2014-08-24-20-31-31#comment-7140

அச்சிடுக மின்-அஞ்சல்
25 ஆகஸ்ட் 2014 காலை 12:56
 

அமைதியான அதிகாலை வேளை. மஸ்ஜிதில் கூட்டாக ஸுப்ஹு தொழும்பொழுது மனதில் எப்பொழுதும் ஒருதெளிவும், திருப்தியும் பிறக்கும். ஸலாமுக்குப் பிறகு திக்ரு, துஆ, குர்ஆன் ஓதுதல் எல்லாம் முடிந்து வெளிவந்தேன்.

இலேசாக விடிந்திருந்தது. மெல்ல கடற்கரை நோக்கி நடந்தேன். வழியில் தேநீர்க்கடையில் சூடான மஞ்சள் வாடாவும், சோத்து வாடாவும் வாடா..வாடா என்றன. ஒரு மஞ்சள்வாடாவை துண்டுத்தாளில் எடுத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தேன்.

அதைத் தின்று இஞ்சித் தேநீரைக் குடித்தாலே தனிசுகம். இந்தச் சுகம் வேறு எந்த ஊரிலும் கிடைக்காது. நான் ஊரில் இருப்பதே கொஞ்ச நாட்கள் தான். அதனால் எப்பொழுது ஊருக்கு வந்தாலும் இந்தத் தேநீர்க் கடையைத் தவற விடுவதே கிடையாது.

வாடா சாப்பிட்டு, இஞ்சித் தேநீரை அருந்தியவுடன் வயிறு நிரம்பிய ஒரு திருப்தி. விடியற்காலையின் பேய்ப்பசி அடங்கியது. துட்டைகொடுத்து விட்டு வெளியே வந்தேன்.

ar1

மெல்ல நடக்க ஆரம்பித்தேன். எனது ஆமை வேக நடையைப்பார்த்து “வாக்கிங்போற மூஞ்சப்பாரு…” என்று என் மனமே நக்கல் செய்தது.

எனவே நடையின் வேகத்தைக் கூட்டினேன். மூச்சிரைத்தது. கடற்கரை நெருங்கியது. கடற்கரை மணலில் கால் வைத்ததும் அதிகாலைக் குளிரில் ஜில் என்றிருந்தது. மனதுக்குள் ஒரு துள்ளல். கால்களை மணலில் புதைத்து புதைத்து நடக்கும்பொழுது சிறு குழந்தையின் குதூகலம். அப்படியே மணலில் உருண்டு புரளலாம் போலிருந்தது.

bch

நேரே தெற்கு நோக்கி நடந்தேன். கடற்கரையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் அதிகமாக தெற்கு நோக்கித்தான் நடப்பார்கள். அதாவது திருச்செந்தூர் பக்கம். அந்த அழகான நீண்ட கடற்கரையின் பட்டுப் போன்ற மணலில் நடப்பதில் அத்தனை ஆனந்தம் காயலர்களுக்கு.

சென்னை மெரீனாவுக்கு அடுத்தபடியாக அழகான நீண்ட கடற்கரை இதுதான் என்று அறிஞர் அண்ணா காயல் கடற்கரையைப் பாராட்டினாராம். சிறுவயதில் கேள்விப்பட்டது.

நானும் எனக்கெதிராகவரும் ஆண்களும் ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொண்டோம். மிக நீண்டதூரம் நடந்து விட்டு திரும்பினேன். கடற்கரையின் நுழைவுப் பக்கம் வந்தேன். நல்ல வியர்த்திருந்தது.

அப்படியே கடலின் அருகில் கடலைப் பார்த்து அமர்ந்தேன். ஓஓவென்று அலையின் சப்தம். யாருக்கும் காத்திராத அலைகள்.

“காலமும், கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” (Time and tide never wait for anybody) என்பது எவ்வளவு பெரிய உண்மை!

இதுவரை என்றைக்காவது கடல் தன் அலையை நிறுத்தியிருக்கிறதா? முதல்வர் வருகிறார்…ஏன், பிரதமரே வருகிறார்,,, கொஞ்சம் நிறுத்து… அவர் வந்தபின் உன் வேலையைத் தொடங்கு என்று போக்குவரத்தை நிறுத்தி, மக்களுக்கு இடையூறு தருவது போன்று கடலிடம் சொல்ல முடியுமா?

அதெல்லாம் உன் சாலையில் வைத்துக்கொள்.. என்னிடம் நடக்காது… முதல்வர் வந்தால் எனக்கென்ன, முத்தமிழறிஞர் வந்தால் எனக்கென்ன என்று முகத்திலடித்தாற்போல் முழங்கி விடும்.

கடலலை ஓயாமல் அடிப்பது போல், காலமும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை நாம் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் அரிதே.

பூமியில் உள்ள அனைத்தையும் அல்லாஹ் மனிதனுக்காகவே படைத்துள்ளான். இதனை நாம் இப்படியும் சிந்திக்கலாம்.

trees_copy

காலமும், கடல்களும், காடுகளும், மலைகளும், மரங்களும், நதிகளும், செடிகளும், கொடிகளும் வெறும் வளங்களை அளிக்கமட்டுமா இவ்வளவு அழகாக படைக்கப்பட்டிருக்கின்றன? அவை தரும் வளங்கள் மட்டுமல்ல, அவை உருவாக்கும் சூழ்நிலைகளும், இயற்கையும் எல்லாம் மனிதன் பயன் பெறவும் ஆறுதலும், மகிழ்ச்சியும் பெறவுமே அல்லாஹ் படைத்துள்ளான்.

“உங்கள் உள்ளங்களுக்கு இடைக்கிடை ஓய்வு கொடுங்கள். உள்ளத்தை நிர்ப்பந்தித்தால் அது குருடாகி விடும்” என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

“அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக்கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?” என்று எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் காஃப் அத்தியாயத்தில் 6வது வசனத்தில் கேட்கிறான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறிவுள்ளவனுக்கு அவன் சித்த சுவாதீன மற்றவனாக இல்லாவிட்டால் நான்கு நேரங்கள் இருக்க வேண்டும். தன் இறைவனோடு உரையாடும் நேரம். தன்னை விசாரணை செய்யும் நேரம். இறைப் படைப்புகள் பற்றி சிந்திக்கும் நேரம். உணவு, குடிப்பு போன்ற தன் தேவைகளுக்கான நேரம்.” (இப்னுஹிப்பான்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி இறைப் படைப்புகளைப் பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி சிந்திப்பதற்கு கண்ணால் காண்பது என்பது மிகச்சிறந்த வழி.

tourister

ஐவேளை அல்லாஹ்வை வணங்குவது மட்டும் ஒருமுஃமினின் கடமை அல்ல. மாறாக, தம்மைச் சுற்றியுள்ள உலகையும், அதிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் இரசித்து இலயித்து தனது உள்ளத்தில் உள்வாங்கி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அதனைக் குறித்து சிந்தித்து இறைவனின் பேராற்றலை உணர்ந்து ஆனந்தமான வாழ்க்கையை வாழ முஃமின் பணிக்கப்பட்டுள்ளான்.

முந்தைய சமுதாயங்கள் வாழ்ந்த இடங்களை, இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பதற்கு பயணம் மேற்கொள்ள திருக்குர்ஆன் போதிக்கிறது. இது இறை நினைவை (திக்ர்) உறுதி செய்யும்.

இஸ்லாமிய வரலாற்றில் உலகைச் சுற்றி வந்த பயணி இப்னு பதூதா. இவர் பயணம் செய்த நாடுகள், நகரங்கள் குறித்து இவர் எழுதி வைத்துள்ள பயணக் குறிப்புகள் இன்று வரலாற்றுப் பெட்டகங்களாகப் போற்றப்படுகின்றன. இப்னு பதூதா காயல் பதியும் வந்து சென்று இங்கே அப்பொழுது சிறப்பாகச் செயல்பட்டு வந்த துறைமுகத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுகிறார் அவரது பயணக் குறிப்பில். அது இன்று நமக்கு பெரிய வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது.

இப்படி இறைவனின் படைப்புகளைக் காண்பதற்காகவே, அது குறித்து சிந்திப்பதற்காகவே உலகம் முழுவதும் சுற்றிய முஸ்லிம்கள் ஏராளம்.

எனவே நமது சுற்றுலாப் பயணங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும். வெறும் ஜாலிக்காக என்று இருக்கக் கூடாது.

2012-08-20_18.06.03

இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைப் பார்ப்பதிலும், அது தரும் செய்திகளை உள்வாங்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட என்னருமை எழுத்தாள நண்பர் சாளை பஷீர் இப்படிப்பட்ட பயணங்களை மேற்கொண்டு அதனைப் பல்வேறு வகைகளில் பதிவு செய்தும் வருகிறார். இன்ஷா அல்லாஹ் நாளை அது வரலாறாக மாறும்.

இறைவன் அலங்கரித்து வைத்துள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழச்சிக்கொள்ளும் சுற்றுலாவை அரபியில் “ஸியாஹத்” என்று அழைப்பார்கள். அதன் பொருள்” தண்ணீர் பூமியில் சுமூகமாக ஓட வேண்டும்” என்பதாகும்.

mun

மனோகரமான அருவிகளும், நதித் தடாகங்களும், இயற்கையான சுத்த நீரையும், குளிர்ச்சியையும் தருவதைப் போலவே சுற்றுலாப் பயணங்கள் உள்ளத்திற்கும், குடும்பத்திற்கும் குளிர்ச்சியையும், ஆறுதலையும் தரும்.

ஷஹீத் செய்யித் குதுப் தனது திருக்குர்ஆன் விரிவுரையில் இவ்வாறு கூறுகிறார்: “பூந்தோட்டங்கள் உள்ளத்தில் ஒளியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உயிரோட்டமாக்குகிறது. அழகான காட்சிகள் இதயத்தை உயிர்வாழச் செய்கின்றன. ஒரு பூவின் நிறம் அல்லது அதன் அமைப்பு மிகப் பெரிய கலைஞர்கைளயும் பலமிழக்கச் செய்துவிடும்.”

இப்னு கல்தூன் என்ற இஸ்லாமிய வரலாற்றாய்வாளர் சுற்றுலாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், “கடிதங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் விளக்க முடியாததை ஒருவரை நேருக்கு நேர் சந்திப்பதும், ஓர் இடத்தை நேரில் சென்று பார்ப்பதும் ஏற்படுத்துகின்றன” என்கிறார்.

சுற்றுலாவில் வித்தியாசமான இடங்களில் வித்தியாசமான செயற்பாடுகளைத் தெரிவு செய்யுங்கள். அதாவது சுற்றலா பல்வேறு நோக்கங்கைளக் கொண்டது.

மகிழ்ச்சி, ஓய்வு, ஆரோக்கியம், விளையாட்டு, கல்வி, உறவுமுறை, ஆன்மீகம், அந்தஸ்து, தொழில் என அதன் நோக்கங்கள் பரந்துபட்டது. சுற்றுலா என்பது மகிழ்ச்சி, ஓய்வு, மாற்றம், பயன் எனப்பல அம்சங்கள் நிரம்பியது என்பைத மறுத்தலாகாது.

குழந்தைகள்– பெற்றோர்களுக் கிடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டால் சுற்றுலாவின் பயன் கிட்டவே கிட்டாது. எனவே எந்தெவாரு விஷயத்திலும் கடுமையாக நடக்காமல் மிகச்சூசகமாக நடந்து கொள்ள வேண்டும்.

tr2_copy_copy_copy

மக்கள் தங்கள் வழக்கமான இருப்பிடத்தைவிட்டு தற்காலிகமாக வேறு இடத்திற்குச் செல்வதும், சென்ற இடத்தில் அவர்களின் செயற்பாடுகளையும், அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளையும் சுற்றுலா எனப் பொதுவாக குறிப்பிடுகிறார்கள்.

குழந்தைகளுக்கான விளையாட்டுகளை பெற்றோர் ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். இது அவர்களின் இயல்பூக்கங்கள் வெளிப்பட வாய்ப்பளிக்கும். பாடசாலையிலிருந்து வீடுதிரும்பும் குழந்தை நல்ல விளையாட்டுகளை விளையாட வேண்டும்.

tr3_copy_copy

இமாம் கஸ்ஸாலி, விளையாட்டை குழந்தைகளின் தன்னியல்பான செயற்பாடாகக் கருதவில்லை. அதற்கு அடிப்படைத் தொழிற்பாடுகள் இருப்பதாகக் கூறுகிறார். அதாவது, விளையாட்டினால் குழந்தை உடலையும், உறுப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. விளையாட்டு குழந்தைக்கு குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் வழங்குகின்றது. பாடசாலையில் பாடங்களினால் சோர்வடைந்து வீடுதிரும்பும் குழந்தைக்கு இது ஆறுதலாக இருக்கின்றது என்று கூறுகிறார்.

tr5_copy

படைத்தவனின் படைப்புகளை ரசிப்போம். அதில் அமுங்கிக் கிடக்கும் அல்லாஹ்வின் பேராற்றலை உணர்வோம். அவன் மேல் அதிகப் பற்றுவைப்போம். அதுவே அழியா வெற்றியை அள்ளித்தரும்.

ஆக்கம் : எம்.எஸ் அப்துல் ஹமீத்

msahameed@gmail.com

 

News

Read Previous

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு

Read Next

பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

Leave a Reply

Your email address will not be published.