பெருமை

Vinkmag ad

 பெருமை 

 

rajamsethu@gmail.com

 
 பெருமைகொள் மானிடா 
 பிறந்ததற்கல்ல 
அது ஒரு சம்பவம் 
அதில் 
உன் பங்களிப்பொன்றுமில்லை  
 
பிறந்தேன் , வாழ்ந்தேன் , 
இறந்தேன் என்றன்றி 
சிறந்தேன் செயல்களால் 
என்றெண்ணிப்  பெருமைகொள் 
 
மனிதனாகப் பிறந்தேன் 
மனித நேயம் வளர்த்தேன் 
புனிதனாக வாழ்ந்தேன் 
என்றெண்ணிப்  பெருமைகொள் 
 
தாயைப் போற்றினேன் 
தாய்மொழி  வளர்த்தேன்  
தாய்நாடு   காத்தேன் 
என்றெண்ணிப் பெருமைகொள் 
 
கல்வியிற் சிறந்தேன் 
பல்கலை பயின்றேன் 
செல்வத்தில் உயர்ந்தேன் 
என்றெண்ணிப்  பெருமைகொள் 
 
கைகொட்டிச் சிரித்தோரெல்லாம்
கை கட்டி நிற்கும் வண்ணம் 
கைகெட்டா  உயரம் கண்டேன் 
என்றெண்ணிப்  பெருமைகொள்.
 
உதவிகள் செய்தேன் 
உள்ளங்கள் நாடினேன் 
உறவுகள் பேணினேன் 
என்றெண்ணிப்  பெருமைகொள்.
 
தெள்ளு தமிழ்ப் புலவர் 
வள்ளுவர் வழியில் 
வாழ்வாங்கு வாழ்கிறேன் 
என்றெண்ணிப்  பெருமைகொள்.
 
மதங்களைக் கடந்து 
மனங்களைக் கவர்ந்து 
மானுடம் வளர்த்தேன்     
என்றெண்ணிப்  பெருமைகொள்.
 
விஞ்ஞானம் வளர்த்து 
மெய்ஞானம் அடைந்து 
அஞ்ஞானம் அழித்தேன் 
என்றெண்ணிப்  பெருமைகொள்.
 
பயனற்ற பேச்சில்லை 
பயனற்ற செயலில்லை 
பயனற்ற செலவில்லை 
என்றெண்ணிப்  பெருமைகொள்.
 
திறமையால் அடைவதே பெருமையன்றோ  
பெருமையில்லா வாழ்வு  வெறுமையன்றோ 
பெருமையைத் தேடுதல் கடமையன்றோ 
பெருமையை இழத்தல் மடமையன்றோ 
 
சிலேடை சித்தர் சேதுசுப்ரமணியம்   
 
26.08.2014 

News

Read Previous

மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

Read Next

அஜ்மானில் கவிஞர் கருத்தானின் நூல் விரைவில் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published.