பாசமலர் மோகன் அவர்களுக்கு அஞ்சலி!!

Vinkmag ad
கடந்த 24.08.2014 அன்று காலமான பாசமலர் மோகன் அவர்கள் .. கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்திற்கு பெருமை சேர்த்தவர்.  அவர் பற்றிய நினைவலைகள் இதோ.. முடிந்தால் பத்திரிக்கையில் வெளியிட முயற்சிக்க வேண்டுகிறேன்.

காவிரிமைந்தன்

Dubai, 00971 50 2519693

www.thamizhnadhi.com

பாசமலர் மோகன்

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் உயிர்த்தோழனாய்.. குடும்ப நண்பராய்.. மோகன் ஆர்ட்ஸ் என்னும் ஓவியக்கூடம் வாயிலாக தமிழ்த்திரையில் சாதனைகளும் சரித்திரங்களும் படைத்த நிறுவனத்தின் உரிமையாளராய.. திகழ்ந்த திரு.மோகன் அவர்களை பாசமலர் மோகன் என்றே அழைத்திருந்தார்கள். காரணம் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தாயார் ராஜாமணி அம்மாள் பெயரில் வெளியிட்ட பாசமலர் திரைப்படத்திற்கு தனது நண்பர் மோகன் பெயரையே தயாரிப்பில் பயன்படுத்தியிருந்தார். இது தவிர, படத்தின் கலை, விளம்பரம் ஆகியவற்றையும் பாசமலர் படத்திற்காக திரு.மோகன் அவர்களே செய்திருந்தார்.

திரு.மோகன் அவர்களது தந்தை திரு.கண்ணபிரான் அவர்கள் ஓவியத்தையே தன் தொழிலாக கொண்டு வாழ்க்கையை நடத்தியவர்.  அவரிடமிருந்தே தனயன் ஓவியத்தொழிலைக் கற்று அதன் வாயிலாக தனிப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியதுபோல் வளர்ந்திருந்தார்! குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது ஓவியங்கள்.. அவரது திரைப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகள் எல்லாம் சென்னையிலிருந்து குறிப்பாக திரு.மோகனிடமிருந்து ஓவியம் வரையப்பெற்று தங்கள் திரையரங்குகளில் இடம்பெறச் செய்த காலம்! இன்றுபோல் டிஜிட்டல் வினைல் பேனர்களோ அறியப்படாத காலம்!  வெலிங்டன் திரையரங்கம் (அண்ணாசாலையில் தற்போதைய கலைஞர் சிலைக்கு எதிரே இருந்த ஒரு திரையரங்கம்) அங்கேதான் திரு.கண்ணபிரான் அவர்களது ஓவியக்கலாசாலை இருந்தது. அங்கிருந்துதான் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் திரைப்படவிளம்பர ஓவியங்கள் தயாராகி செல்லும். ஒரு முறை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வணங்காமுடி என்கிற திரைப்படம் நடித்து முடித்து அதன் பிரத்யேகக் காட்சி பார்த்து முடித்தவுடன்.. அருகில் இருந்த திரு.மோகன் அவர்களிடம் இந்தப் படம் ஓடுவது உன் கையில்தான் இருக்கிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்.. என்றார். அப்படியானால், விளம்பரத்திற்கு முன்னுரிமை.. முக்கியத்துவம் தேவை என்பதைத்தான் அவர் அவ்வாறு சூசகமாகத் தெரிவித்திருந்தார். அதை உணர்ந்த ஓவியர் மோகன் இதுவரை குறிப்பாக தனது விளம்பரத்துறையில்.. எவரும் புரியாத ஒரு சாதனையை செய்தால் அது அனைவரின் கவனத்தையும் கவரும்.. அதன்வாயிலாக இந்தப்படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்கிற யுக்தியோடு.. வணங்காமுடியில் நடிகர்திலகம் தோன்றும் உருவத்தை.. 80அடி கட்-அவுட்டாக வடிமைக்க.. அது சித்ரா திரையரங்கில் நுழைவுவாயிலருகே வைப்பதற்கு மூன்று கடைகளில் உள்ள சவுக்குமரங்கள் தேவைப்பட.. இது தவிர.. தீயணைப்புத்துறை வாகனம் ஒன்று அதன் அருகே பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட செலவு ஒருபக்கமிருந்தாலும்.. தமிழகம் எங்குமிருந்தும் மக்கள் பேருந்து வைத்து வந்து அந்த கட்-அவுட்டைப் பார்த்துச் சென்றார்கள் என்றும்.. அது அப்படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.  இதுதவிர.. நடிகர்திலகத்தின் நடிப்பில் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்திற்காக அமைக்கப்பட்ட விளம்பரமும் அதே நாளில் மக்கள்திலகம் நடித்து தேவர் பிலிம்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படமும் முறையே சித்ரா மற்றும் கெயிட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட.. அதற்கு வைக்கப்பட்ட விளம்பரங்கள் இரண்டும் அமர்க்களமாய் அமைந்துவிட.. அதுவும் சுற்றுலாஸ்தலம் போல் மக்கள் வந்து பார்வையிட்டு சென்றதை மறக்க முடியாது என்கிறார் பாசமலர் மோகன் அவர்கள்.

பாரகன் திரையரங்கில் பாசமலர் வெளியிட்ட நாளில்..  முதல் காட்சியிலிருந்து வெளியே வந்த தாய்மார்களிடம் கருத்தைக் கேட்கலாம் என்று திரு.மோகன் அவர்களும் வசனகர்த்தா திரு.ஆருர்தாஸ் அவர்களும் சென்றிருக்க.. எவர் முகத்திலும் புன்னகையில்லை.. எதையோ பறிகொடுத்தமாதிரி.. சோகத்தில் ஆழ்ந்த முகத்தோடு அவரவர்கள் திரும்பிக்கொண்டிருக்க.. சிலரது பின்னால்கூட சென்று பார்த்தோம்.. பதில் ஏதும் வரவில்லை.. ஒரு அம்மையாரை வற்புறுத்தி படத்தைப்பற்றிக் கேட்டபோது.. சும்மாயிருங்கய்யா.. அழவைத்துவிட்டார்கள்.. பாசத்தால்.. என்றார். அவ்வளவுதான் படம் மாபெரும் வெற்றி என்பதை புரிந்துகொண்டோம் என்றார். இப்படி இவரின் வரலாறு முழுவதும் வெற்றிகளும் சாதனைகளும் குவிந்தவண்ணமிருக்க.. கண்ணதாசன் விழாவில் இவருடைய பங்களிப்பு பற்றி பேசலாமா?  அதற்கு முன் இன்னுமொரு முக்கிய விஷயம்..  தமிழ்த்திரையில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார் அவர்கள் இவரது ஓவியக்கூடத்தில் சிறிது காலம் ஓவியம் கற்றவர் என்பது கூடுதல் தகவல்!

மெல்லிசை மன்னர் எங்களை பாசமலர் மோகன் அவர்களைச் சந்திக்க அனுப்பியது எதற்கு என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.  அவரது ஓவியக்கூடம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் யோகலட்சுமி திருமண மண்டபமாய் ஒருகாலத்தில் இருந்த இடத்தில் இயங்கிவந்தது. அங்கே சென்றோம். பார்த்தோம்.. பேசினோம்.. நேரம் போனது தெரியாமல் அளவளாவினோம். குறிப்பாக கண்ணதாசன் பற்றி பல்வேறு தகவல்களை அவர் தந்தார். குறிப்பாக குங்குமம் திரைப்படமும் இவருடைய பங்களிப்போடு உருவான காவியம்.. அதன் தயாரிப்பாளர் என்கிற முறையில் நடந்த சம்பவங்கள் இரண்டுமே அற்புதமானவை.  என்ன செய்வது.. கண்ணதாசன் விழாவில் அவரது பங்கு பற்றி விழா நடக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். இப்போது குங்குமம் திரைப்படத்தின் ஆக்கத்தில் கிடைத்த தகவல்களை பார்ப்போம்.

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்

 

தமிழ்நாடு என்கிற போது நினைவிற்கு வருவது.. கோவில் கோபுரங்களும்.. எம் குல மங்கையரின் நெற்றியில் திகழும் குங்குமமே!!  மங்கலகரமான நிகழ்வுகளிலெல்லாம் மஞ்சளும் குங்குமமும் நிச்சயம் இருக்கும்.. பண்பாடு, கலாச்சாரம் இவைகளின் அடையாளமாய் இந்து தெய்வங்களும்கூட திலகமிட்டுத் திகழ்வதைக் காணலாம்.

 

வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள் – எங்கள்

திருநாட்டின் குலமாதர் நலங்கள்..  என்று கண்ணதாசன் சரணம் எழுதியிருக்கும் மற்றுமொரு பாடல் நினைவுப்படலத்தில் கொலுவீற்றிருக்கிறது.

 

மங்கையொருத்தி நலமுடன் வாழ்கிறாள் என்பதற்கு இந்தக் குங்குமம் சத்திய சாட்சி சொல்கிறது!  பூவோடும் பொட்டோடும் வாழ்க என்கிற வாழ்த்தொலிகளும் இங்கே சகஜம்!!

 

வங்களாள மொழிக்கதையைத் தழுவியெடுக்கப்பட்ட திரைப்படமிது.  திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் தேன் அள்ளி வழங்க.. அனைத்துப்பாடல்களையும் கவிநயமும் கருத்துமழையும் நிறைத்து உயிரினிக்க அள்ளிவழங்கியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன். 

 

ஊர்வசி சாரதா அவர்கள் நடித்த முதல் தமிழ்ப் படம்.  இப்படத்தில் குங்குமத்தின் மகிமை சொல்வதற்காகவே எழுதப்பட்ட இப்பாடலில் இன்னுமொரு விசேஷம் உண்டு. நடிகர் திலகத்தின் தாயார் பெயர் திருமதி.ராஜாமணி ..  அவர்தம் பெயரும்தாங்கி ஒரு வரி குங்குமத்தின் பெருமை சொல்கிறது..

 

பெண்மைக்கு மேன்மை சேர்த்து நெற்றியில் திகழும் இந்தக் குங்குமம் பற்றிய சிறப்புகள் அறிய இப்பாடலை மீண்டும் முழுவதுமாய் கேளுங்கள்..

 

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம்

மதுரை மீனாட்சி குங்குமம் திங்கள் முகத்தில்

செம்பவளம் எனத் திகழும் மங்கலக் குங்குமம் தேவி

காமாட்சி திருமுகத் தாமரை தேக்கும் மங்கலக் குங்குமம்

 

ராஜாமணி எனும் அன்னை முகத்தில்  நலம்பெற

விளங்கும் குங்குமம்  நற்குலமாதர் கற்பினைப்

போற்றி நாட்டினர் வணங்கும் குங்குமம்


அடுத்த பாடல்.. மயக்கம் எனது தாயகம்..

சூழ்நிலை என்பது நாம் சந்தித்தாக வேண்டிய சூட்சுமமாகவே உள்ளது. எதிர்பாராமல் ஏதேதோ நடக்கும்போது என்ன செய்வதென அறியாமல்.. மனதில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத தருணத்தில் பதட்டம்.. பரிதாபம்.. பரபரப்பு.. தவிப்புகளில் – உதடுகளில் வார்த்தை விழுந்து விழுந்து எழுகிறதே! அடுத்து என்ன என்கிற அச்ச உணர்வு வீரனையும் கூட விழவைத்துவிடுகிறது!  காற்று பலமாக அடித்தால் புயல்! காலம் போடும் கோலம் – சமயங்களில் மனித வாழ்க்கையை அலங்கோலமாக்கிவிடுகிறதே! இதில் தப்பிக்க ஏதும் வழிகளில்லை! குழப்பம் தொடர்கிறது! மயக்கம் வருகிறது!

குங்குமம் திரைப்படத்தில் பிறந்த மற்றுமொரு பாடலிது. இன்றைக்கும் துயரங்களைச் சுமக்கும் மனித மனங்களுக்கு சுகவரியாய் படுகிறது. தனக்காகவே எழுதிய பாடலா என்ற வினாவை எழவைத்து.. பாடல் இயற்றிய கவிஞருக்கு மானசீகமாக நன்றிசொன்னபடி.. முணுமுணுக்கும் மனிதர்களைக் காணமுடிகிறது. இப்பாடல் பற்றி சுவையான தகவல்கள் இரண்டு..

1. சூரியோதயம்.. அஸ்தமனம் இரண்டையுமே பார்க்காதவர் கவிஞர் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இந்தப் படத்திற்கு பாடல் எழுதிட கவிஞர் வந்த சூழலே முற்றிலும் வித்தியாசமானது. நடிகர் திலகத்தின் ஆருயிர் நண்பர் தயாரிப்பில் வெளியான குங்குமம் திரைப்படத்திற்கு கவிஞர் கண்ணதாசனிடம் பாடல்கள் பெறப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர், இசையமைப்பாளர் வேண்டிய நேரம். கவிஞருக்கு தனிப்பட்ட கஷ்டம்.. பணம் ஒரு அவசரத் தேவையாகிறது. அப்போது பாசமலர் மோகன் அவர்களிடம் வந்து பணம்  கேட்கிறார். பணம் தருகிறேன்.. ஆனால் அதற்கு முன் பாட்டெழுதித்தரவேண்டும் என்கிறார் மோகன். நாளை காலை 10.00 மணிக்கு எனக்குப் பணம் தேவை என்கிறார் கவிஞர். அதற்கு முன் என்றால் எப்படி என்கிற சூழ்நிலையில் அன்று காலை 7.00 மணிக்கு பாடல்கள் கம்போஸிங் ஆக.. களம் தயாராகிறது. திரையிசைத்திலகம் கே.வி.எம். முதல் அனைவரும் கவிஞர் காலை 7.00 மணிக்கா? நம்பமுடியவில்லையே என்று கூடுகிறார்கள். சரியாக 7.00 மணிக்கு அங்கு வந்த கவிஞர் கதையைக் கேட்கிறார்.. சூழல்களை கேட்கிறார்.. மடமடவென்று பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக படத்திற்கு தேவையான அனைத்துப் பாடல்களையும் எழுதி முடிக்கிறார்.  தயாரிப்பாளர் அங்கு வந்து பாடலை எடுத்துப் பார்க்கிறார். அவர்க கண்ணில் பட்ட பாடல்.. மயக்கம் எனது தாயகம்.. மெளனம் எனது தாயகம்.. என்றாக.. என்ன கவிஞரே.. உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எல்லாம் பாட்டுவரிகளாய் தீட்டியுள்ளீரே.. இதற்கெல்லாம் நான் பணம் தர முடியாது என்கிறார்.  அதற்குள் திரையிசைத்திலகம் கே.வி.எம். அவர்கள் தலையிட்டு.. படத்திற்கு தேவையான அனைத்துப் பாடல்களும் தேனாமிர்தம்போல் கொட்டியிருக்கிறார். அனைத்தும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற பாடல்களே என்று சொல்ல.. பணம் கவிஞருக்கு போகிறது. கவிஞரின் அன்றைய கடன் தேவை தீர்கிறது.

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம் (மயக்கம்)

பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலைந்த மலர் நான் (மயக்கம்)

நானே எனக்குப் பகையானேன் – என்
நாடகத்தில் தான் திரை ஆனேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது

விதியும் மதியும் வேறம்மா – அதன்
விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா – என்
வழி மறைத்தாள் விதியம்மா (மயக்கம்)

இந்தப் பாடலைப்பற்றிய இரண்டாவது விஷயம்.. இதோ..

நடிகர்  திலகம் சிவாஜிகணேசன் நடித்த இப்பாடலின் படப்பிடிப்பு மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலருகே நடந்தது. காலை 7.00 மணிக்க படப்பிடிப்பு துவக்கமென்றால் 6.55 மணிக்கே அங்கே ஒப்பனையுடன் தயாராக இருக்கும் சிவாஜி.. அன்றும் அப்படியே.. தயாரிப்பாளர் காலை உணவு மற்றும் மதிய உணவை ஏற்பாடு செய்துகொண்டு மாமல்லபுரம் சென்று சேர்கிறார். ஆனால் காலை 8.45 மணிக்கெல்லாம் முழுப்பாடலும் ஒளிப்பதிவாகிவிட்டது. நடிகர்திலகம் உடனே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். கொண்டுசெல்லப்பட்ட உணவு.. காலை படப்பிடிப்புக்குழுவினருக்கு வழங்கப்பட.. மதிய உணவை அங்கிருந்த ஏழை எளியோருக்கு வழங்கிவிட்டுத் திரும்பினராம் என்று நினைவு கூர்ந்தார் பாசமலர்  மோகன்.

ஒரே டேக்கில் ஓ.கே. ஆனது என்பார்கள் இப்பாடலை.. ஆனால் பாடல் மட்டும் ஒவ்வொருமுறையும் ஒன்ஸ்மோர் கேட்கப்படும் பாடலாய்!

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் ஒரு செய்தி.. கவியரசு கண்ணதாசன் அவர்கள்மீது திரு.மோகன் அவர்களுக்கிருந்த ஈடுபாடு.. மற்றும் அவர் எங்களுக்கு உதவிய வண்ணம்.. இவற்றால்.. கண்ணதாசன் கலை இலக்கிய மையத்தில் அவர் துணைத்தலைவராக சுமார் 6 ஆண்டுகள் பொறுப்புவகித்தார் என்பதை நன்றியுடன் பதிவு செய்கிறேன்.  சிலை திறப்பின் பின் வரும் அத்தியாயங்களில் மோகன் அவர்களது பங்களிப்பு தொடரும் என்றுகூறி இந்த அத்தியாயத்திற்கு திரையிடுகிறேன்.

News

Read Previous

‘முடிசூடிய மாமன்னன்’ – கவிதைப் போட்டி

Read Next

மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

Leave a Reply

Your email address will not be published.